தப்பரும்பு – ப்ரிம்யா கிராஸ்வின்
தமிழ்க்கவிதைகளில் புரிதல் எவ்வளவுக்கு எவ்வளவு வாசகர்களுக்குக் குறைகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு சிறந்த கவிஞர் என்று யார் முதலில் சொன்னார்கள் தெரியவில்லை. எளிமை என்பது வேறு, அழகியல் என்பது வேறு, நுட்பம் என்பது வேறு. ஒன்றுக்கொன்று தொடர்பில்லை.
நூலின் முதல் கவிதையே அட சொல்ல வைக்கிறது. பருந்து – வாழ்க்கை, பறத்தல்- பாடம், குஞ்சு- வானத்தில் சிறகடிக்கத் தெரியாது தத்தளிக்கப் போகிறது. குஞ்சுகள் எப்படியும் காயமின்றி பறத்தலையா கற்றுக் கொள்ளும், நாம் தான் காயப்பட்டு, தழும்பை வருடிக்கொண்டே காலத்தைக் கழிப்பது.
” பருந்தின் கால்களில்
பறத்தலின் கூச்சத்தைக்
கண்மூடி ரசிக்கும்
பறவைக்குஞ்சு போல
ஒரு வாழ்தல்.”
உரைநடையில் தெரிவதை விடக் கவிதைகளில் இந்நினைவு (Associative memory) அதிகம் மிளிரும். அது ப்ரிம்யாவின் கவிதைகளில் அடிக்கடி நிகழ்கிறது. ஒரு புற நிகழ்விலிருந்து இருந்து சட்டென்று அகஉணர்விற்குச் செல்லும் வரிகள் இவை:
” தனிக்குவளை நீட்டும் மதியிருந்த ஊரில்
எனக்கென பெருமழை பெய்ததல்லவா
உன் வானம்”
” உவர் நீர் கிணற்றின் உள்ளில்
ஊறிக்கிடக்கும் நெல்லி மரத்துண்டாய்
உன் நினைவுகள்”
” வீடு திரும்பி வரும்
ஊனமுற்ற பொம்மைகளுடன்
திருப்திபட்டுக் கொள்ளும்
பொம்மைக்காரனின் மகவு
எத்தனை நொறுங்கியிருந்தாலும்
என்னிடமே வந்து விடு”
மற்றவர்களை விட மிக அதிகமாக வளர்ந்தவர்களைக் காண்கையில் தோன்றும் இளமுறுவல், தாழப்பறக்கும் விமானத்திற்கு மார்பை மறைக்கும் பாம்படக்கிழவி, கயிற்றில் தொங்குபவளின் கால்களில் சத்தமின்றி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கொலுசுகள், யாரும் எடுத்துக் கொள்ளாத ஒன்று இறுதியாய் நம்மையே சேர்வது, உடலின் குறைபாடுகளை இருள் மறைப்பது, பெண்ணெழுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆண்கள் தீர்மானிப்பது, மாறிமாறி மனிதர்களால் ஏமாற்றப்பட்டாலும் மனிதத்தின் மீதான நம்பிக்கையை இறுகப் பற்றிக் கொள்வது என்று பல வித்தியாசமான சித்திரங்களுடன், காதல், ஏமாற்றம், பிரிவு வாதை குறித்தும் சில கவிதைகள் வந்திருக்கின்றன.
சில நேரங்களில் மிக எளிமையாகத் தோன்றும் கவிதைகள், தொடர்ந்து யோசிக்க வைக்கின்றன. பெண்களின் உடைமை கொள்ளும் குணம்(Possessiveness) அல்லது ஆண்களின் காரியம் முடிந்ததும் விட்டுவிலகும் குணம் ஆகிய இரண்டில் எதைச் சொல்கிறது இந்தக்கவிதை?
” அவ்வளவு உயரமாய்
மதிற்சுவர் எழுப்புவதில்
முனைப்புடன் இருந்ததில்
உனக்கு இறகு முளைத்ததைக்
கவனிக்க மறந்தே போனேன்.”
இவருடைய ஒரு கவிதையில் அதிகம் வளர்ந்தவன் கூட்டத்தில் தனியாகத் தெரிவான். இன்று தமிழ்க் கவிதைகளும் கூட கூட்டம் தான். தனியாகத் தெரிவதற்கு, எல்லோருக்கும் உயரம் சாத்தியமில்லையாதலால், மற்றவர்களிடமிருந்து விலகி நிற்க வேண்டியதாகிறது. விவிலியத்தில் பயிற்சியுள்ள இவர், அதன் வார்த்தைகள், காட்சிகள், நிகழ்வுகள் இவற்றைக் கவிதையின் மேல் ஏற்றலாம். தனித்தன்மை தனியாகத் தெரியும். ஜெ.ரோஸ்லின் போன்ற வெகு சிலரே அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
முற்றிலும் ஆங்கில இலக்கியத்தைப் பயின்றவர், பள்ளியில் ஆங்கிலம் கற்பிப்பவர், தனித்தமிழில் எழுதுதல் சிறப்பு.
சுற்றிலும் நடப்பதை நிறையக் கவனிக்கிறார், அதைக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்
இவரை சொல்லியிருப்பது போல பிள்ளைவிளையாட்டு இந்தக் கவிதைகள் இவருக்கு. இவரது மேம்பாடுக்குச் சொல்ல வேண்டுமென்றால், கவிதைகளில் அதீத உணர்ச்சி ததும்புவதை இவர் தவிர்க்க வேண்டும். கவிதைகளுடன் நின்று விடாது உரைநடைக்கும் வர வேண்டும். குவளையில் பெருமழை முழுதும் வாங்கிக்கொள்வோர் இருக்கும் வரை கவிதைகளும் வாழ்ந்து கொண்டிருக்கும்.