1) வீடு
கூர்ந்த மதியால்
வெட்டவெளியை கொத்தி கொத்தி
துண்டுகளாக உடைத்து
ஒரு வீடு கட்டி வசிக்கிறேன்
காற்றின் மூலக்கூறுகளின் மேல் அமர்ந்து வரும்
அழகிய தேவதைகள்
மட்டும் அங்கு வந்து போகிறார்கள்
2) குமரிக்கண்டம்
கடலின் மேற்பரப்பில்
நகரும் வீக்கத்தை அலைகள் என்று
நாம் சொல்லலாம்
கடல் தான் சொல்ல வேண்டும்
காற்றிடம் எவ்வளவு அடிபட்டது என்பதை
கடல் வாழ் உயிரினங்களின் ஆன்மாவும் தலையாட்டி பொம்மைகள்
அலைகளின் இயக்கத்தை எப்போதுமே எதிர்த்து பேசுவதில்லை
குளிரின் விரைத்த விரல்கள் உயிர்களை நசுக்கும் போதும்
அவை தலையாட்டுவதை நிறுத்துவதில்லை
கவிஞன் அப்படிப்பட்டவனில்லை கடலை எதிர்த்து
கேள்வி கேட்கிறவன்
எனது கோபத்தை
புரிந்து கொண்ட கடல்
தான் கொண்ட குமரிக்கண்டத்தை
அதே பழைய அழகோடு சுமந்து வந்து என்னிடம் காட்டியது
இதற்கெல்லாம்
மயங்குகிற ஆளா நான்.
3. பாதச்சுவடுகளின் குதூகலம்
நீரால் ஆயிரம் கால் மண்டபம் அமைத்திருந்தது மழை
மழையின் தூண்கள் அதன் உயரத்துக்காகவும் குளிர்ச்சிக்காகவும்
மிகவும் விரும்பப்படுகின்றன
மழை தூணுக்குப் பின்னால் மறைந்திருந்து என்னை எட்டிப் பார்த்துச் சிரிக்கின்றது
ஒரு குழந்தை
நானும் பதிலுக்குச் சிரிக்கிறேன்
நீரில் தோன்றி மறையும் பாதச்சுவடுகளின் குதூகலங்களுக்கிடையே
ஒளிந்து விளையாடும் விளையாட்டு ஆரம்பமானது
என் செவிப்பறைகளை இசைக் கருவியாக வாசிக்கும் சிரிப்பொலி
மண்டபத்தில் எதிரொளிக்க
வீதிகளில் புரண்டோடுகிறது
எங்கள் மகிழ்ச்சி.
4. கைம்மாறு
வீடுகளை உயிரற்ற மனிதர்கள் என்று நம்பியதால்
சுவர்களுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்
சன்னலின் காதுகளில் ரகசியம் பேசிக் கொண்டிருந்த
மரங்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என்றாலும் நான்கு சுவர்களுக்கு இடையேயான
வெற்றிடங்களை எனக்கு தந்து அன்பு செய்வதற்கு
வீடுகள் தவறுவதில்லை
அறையில் படுத்தப்படி
வெற்றிடத்தை உற்றுப் பார்த்து
அங்கே வினாடிகள்
இதழ்களாய்ச் சேர்ந்து
பூக்கள் உருவாவதைக்
கவனித்து கொண்டிருந்தேன்
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட
ஒரு வெற்றிடத்தின் அழகை வர்ணிக்க
வார்த்தைகளால் உதவ முடியாது
மின்விசிறி வெற்றிடத்தில் வரையும்
கண்காணா வட்டங்கள் ஆசிர்வாதங்கள் போல் என்மீது
உதிர்ந்து கொண்டிருந்தன
இந்த மகிழ்ச்சிக்கு யாரும் எல்லை குறிக்கவும் முடியாது
இந்த உயிரற்ற மனிதன் செய்யும் இத்தகைய உதவிக்கெல்லாம்
கைமாறாக என்ன செய்ய போகிறோமென்று
நினைத்தபடி மெல்ல உறங்கிப் போனேன்.
கார்த்திக் திலகன்
படங்கள்: AI



