1. நினைக்க மறுப்பவை
நைல் நதி ஊற்றெடுக்கும் இடத்துக்குச் சென்றோம்
போகும் வழியில்
இருநூராயிரம் அகதிகள்.
பார்த்தோம்:
உருவமற்றிருந்த தெருவோரம்
குருதி கறுத்து எஞ்சியிருந்த பாதி உடல்.
அதிர்ச்சியில் நெஞ்சு பிளந்து
மரித்த ஒரு பெரும் பறவை.
பெரிய கொம்புகளோடு
தலை துண்டிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடந்த ஆநிரை.
ஊற்றின் மெல்லொலி எழுப்பிய வியப்புடன் திரும்பி வருகிறோம்.
அப்போது
ஈழத்தில்
புன்முறுவலுடன் அகங்கார படையணியின்
முன் முகப்பைச் சிதைத்தவளின் செய்தியொன்று
ஒரு வரியில் மின்னிதழில் வருகிறது.
“இதோ, உனக்கான கவிதை. முற்றுந்தரிப்பு”
முற்றுகைக்குள் படிமம் சிறைபடாது
மேலைக்காற்றில் மிதக்காது
காலடியற்றவர்களுக்குப் போதும்
கடலும் கவிதையும்.
2. கதை இதுதான்
எங்கிருந்து வரலாற்றை எழுதுவது?
மலையின் வனப்பையும் கனத்தையும்
தொலைவில் இருந்துதான் அளவிட முடிகிறது
குதிரை மீதமர்ந்து
மலர்களைப் பார்க்க முடியாது
உங்கள் மனைவியின் தலையை
வெட்டும்போது தப்பி ஓடி
மூங்கிற் புதர்களுக்குள் ஒளித்திருந்துதான்
பார்க்க முடிகிறது.
புரட்சிக்காகவும் விடுதலைக்காகவும்
கண்ணீர் சிந்தியவர்கள் மிகப்பலர்.
எப்படி வரலாற்றை எழுதுவது?
தொலைதூரம் போய்விட்ட பிற்பாடு
பிடரியில் இரண்டு கண்கள் முளைக்கின்றன
அவற்றால் வரலாற்றைப் பார்க்கிறோம்.
தயங்காமல் எழுதுகிறோம்.
புனைவும் வாழ்வும் கதையும் பச்சாதாபமும்
குறுக்குச் சால்களாக ஓடுகின்றன
சவப்பெட்டிகளிலும்
அதற்குள் அடங்காத உடல்களாலும்
எழுதலாம்.
வேறு வழி இல்லை.
சாம்பலிலிருந்து ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது.
அது மறக்கப்பட்டது.
தெரிவில் சஞ்சலம்.
என்ன கதை எங்களுக்கு?
3. போர்க்காலம் முடிந்து விட்டது
அப்படித்தான்
நம்ப விரும்பினேன்.
எனினும் உலகம் கோணலானது.
உயிரின் மகிழம்பூ நறுமணத்தை
இறப்பு
திருட முடியாது.
நெடுஞ்சுவரைக் கரைக்கும்
கவிதைகளை ஒருத்தி எழுதுகிறாள்
அழுகை துணை இருக்கிறது.
பெரும்புயலில் உலகம் தத்தளிக்கும் போதும்
பறவை கூடு சேர்கிறது
குஞ்சுக் குருவி பாடுகிறது
அதன் பாடல்
ஒரு ஏவுகணையையாவது
தடுத்து நிறுத்தி விடும்
நம்புகிறேன்.
நூல்: காஞ்சி
கவிஞர் சேரன்
காலச்சுவடு வெளியீடு
படங்கள் இணையம்