யானையைக் குழி தோண்டி பிடிப்பது போல்
கவிஞனைக் காதல் பிடிக்கிறது
பரவசத்தின்
சொற்கள் விம்முகின்றன
அவனின் ஒளிகொண்ட சொற்களை
வானில் எறிகிறது
அவை விண்மீன்களாகின்றன
இருண்ட சொற்களை
பகல் காகங்களாக்குகிறது
காதலின் அபோதத்தில்
கவிஞன் பித்தாகிறான்
அவன் அழுதபோது
ஒரு யுகத்தின் புன்னகை கோணுகிறது
அவன் சிரித்த போது
யாருமற்ற வனங்களில்
பூக்கள் கண்ணெடுக்கின்றன
யாருமில்லை என சுருள்கிறான்
நடுங்குகிறது வானம்
அவனின்
யானைப் பசியால்தான்
தமக்குள்
மோகிக்கின்றன உயிர்கள்
நுரைத்து நொதிக்கும்
அவன் பித்தில்
விளைகிறது இப்பூமி
Leave a comment