கவிஞனுக்கு என்ன வேண்டும்?
ஒருமுறை கோவை ஞானியிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் ஏன் கலை, இலக்கியங்கள் எழுதுகிறோம்? கவிதை என்பது ஓர் ஆடம்பரம் இல்லையா? மனிதனால் உணவில்லாமல் வாழ முடியாது என்பது போல இலக்கியம் இல்லாமல் வாழ முடியும் என்பதும் எதார்த்தம் என்றால் எதற்காக நாம் இலக்கியத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டேன். கோவை ஞானி அதற்கு நீண்ட விளக்கம் கொடுத்தார். அதைச் சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன். மனிதனால் உணவில்லாமல் வாழ முடியாது. மனிதனைப் போலவே எந்த உயிர்களாலும் உணவில்லாமல் வாழ முடியாது. ஆனால், உணவால் தீர்க்க இயலாத ஒரு பசியை இலக்கியம் தீர்க்கிறது. மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால் அவனால் உணவு மட்டுமின்றி இலக்கியம் இல்லாமலும் வாழ இயலாது. இங்கு நான் இலக்கியம் என்று சொல்வது கலையைத்தான். மனிதனுக்கு மனம் சமைந்த காலத்தில் மனிதன் உருவானான் என்று சொன்னால் மனம் சமைந்த காலத்தில்தான் அவனுக்குக் கலையுணர்வும் உருவாகியிருக்க வேண்டும். எனவே, மனிதன் என்று சொல்லும் போது அவனுக்கு கலையும் அடிப்படைத் தேவையாகிறது. இன்றைய மனிதனுக்கு சம்போகம் என்பது வெறுமனே இனப்பெருக்கத்துக்கான காரியம் மட்டுமே அல்ல. உடலையும் மனதையும் உள்ளுயிரையும் வளர்த்துக்கொள்வதற்கான ஒரு கொண்டாட்டும்தான் அல்லவா. இந்த நிலை மனிதனுக்கு மனம் சமைந்த பிறகுதான் உருவானது. இந்த நிலையில்தான் மனிதனிடம் கலையும் உருவானது. அவனது உயிரியல்புகளில் கலையும் ஒன்று. உயர்வான ஒரு மனிதனாக அல்ல மனிதனாக இருப்பதற்கே கலையுணர்வு தேவை. ஒரு கொல்லும் கொலை வாளைச் செய்து அதன் கைப்பிடியில் அழகான ஒரு பூவை வனைந்துகொள்ளச் செய்வது எது? கொல்லும் வாளில் பூவுக்கு என்ன வேலை? அரசர்கள் பயன்படுத்தும் வாள் உறைகளைப் பாருங்கள். அதில் எத்தனை அழகான பூவேலைப்பாடுகள். மனிதனால் அழகியல் உணர்வில்லாமல் எதையுமே செய்ய இயலாது. எந்த ஒரு செயலையும் அதன் ஆன்மிகமான உயரத்தில் கொண்டு போய் வைப்பதும் அதனைப் பூரணமாக்குவதும் அந்த கலையுணர்வுதான் என்பதாக அவரது பதில் இருந்தது.
இதைப் பல நாட்களாக யோசித்திருக்கிறேன். எனக்கு அந்த பதில் போதுமானதாக இல்லை. ஆழமான பதில்தான். ஆனால் அதில் என்னவோ ஒன்று குறைகிறது என்று தோன்றிக்கொண்டே இருக்கும். மனிதனுக்கு கவிதையோடு அழகியல் உணர்வைக் கடந்து ஓர் உறவிருக்கிறது என்று தோன்றும். வெறும் அழகியல் உணர்வில் அது பிறப்பதில்லை.
ஒருமுறை தேவதச்சன் ஓர் அனுபவத்தைச் சொன்னார். நூறு சன்னல்கள் இருக்கும் ஒரு பெரிய மாளிகைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த அனைத்து சன்னல்களும் சாத்தியிருந்தன. எனக்கு அவற்றைத் திறக்க வேண்டும் என்ற ஆவல் உருவானது. நான் ஒவ்வொரு சன்னலாகத் திறந்துகொண்டே வந்தேன். ஒரு சன்னல் அருகே சென்ற போது துணுக்குற்றேன். அங்கே அந்த சன்னல் ஏற்கெனவே திறக்கப்பட்டிருந்தது. இப்போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏற்கெனவே திறக்கப்பட்ட சன்னலை மீண்டும் நான் திறக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், எப்படி அது முடியும்? ஏற்கெனவே திறக்கப்பட்ட சன்னலை மீண்டும் எப்படித் திறக்க என்று யோசித்து நின்றிருந்தேன். இதுதான் கவிஞனின் பிரச்சனை என்று தோன்றியது. கவிஞன் இந்த உலகில் எதற்காகவாவது இருக்கிறான் என்றால் அவன் இதற்காகவே இருக்கிறான். ஏற்கெனவே திறக்கப்பட்ட சன்னலை மீண்டும் திறப்பது எப்படி என்பதைக் கண்டுபிடிப்பதுவே கவிஞனின் வேலை என்றார்.
நான் அந்த அனுபவத்தை யோசித்துக்கொண்டிருக்கிறேன். தேவதச்சன் அழகாக சொல்லிவிட்டார். உண்மைதான் ஏற்கெனவே திறக்கப்பட்ட சன்னலை மீண்டும் எப்படித் திறப்பது என்ற கேள்வி கவிஞன் உடைய கேள்விதான். இந்தக் கேள்வி ஒரு கவிஞனைத் தவிர வேறு யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு தத்துவவாதிக்கு இது ஒரு கேள்வியே அல்ல. அவன் தர்க்கம் இதற்கு நேர் எதிரானது. ஏற்கெனவே திறக்கப்பட்ட கதவை திறக்கத் தேவை என்ன என்று அவன் கேட்பான். அதான் ஏற்கெனவே திறக்கப்பட்டாயிற்றே மீண்டும் ஏன் திறக்க வேண்டும் அதற்கு அவசியம் இல்லை எனும்போது ஏன் செய்ய வேண்டும் என்பான். ஒருவிஞ்ஞானியும் இப்படித்தான் சொல்வான். ஏற்கெனவே திறக்கப்பட்ட ஒரு கதவை மீண்டும் திறக்கத் தேவை இல்லை என்பான். ஒரு ஆன்மிகவாதிக்கு, ஞானிக்கு இதை படிமமாக மாற்றினால் அன்றியும் ஒரு பயனும் இல்லை. இந்தக் கேள்வி ஒரு படிமமாக அவனுக்கு அவனைப் புரிந்துகொள்ள அகத்தைப் புரிந்துகொள்ள உதவக்கூடும். ஆனால், ஒரு செயலாக இது ஒரு அபத்தம். எனவே, அது அவனுக்குத் தேவையற்றது. உயர் தத்துவ தளத்தில் அல்லது அறிவார்ந்த தளத்தில் இயங்கும் எவருக்கும் இக்கேள்வி அவசியமற்றது. ஒரு கவிஞனுக்கோ அது அவ்வளவு முக்கியம். ஒரு கவிஞனைத் தவிர இவ்வுலகில் இக்கேள்வியைக் கேட்கும் ஜீவன் உண்டெனில் அது ஒரு குழந்தை மட்டும்தான் அல்லது ஒரு பைத்தியம் கேட்கலாம்.
ஒரு குழந்தையின் கைகளில் ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத்துப்பாருங்கள் அது உடனே அப்பொருளை உடைக்கும். தரையில் போட்டு தட்டி தட்டி அதைச் சிதைக்கும். அதைத் துண்டு துண்டாக மாற்றித் தரையில் சிதறடித்துவிட்டு அமைதியாகிவிடும். குழந்தையின் இச்செய்கைக்குக் குழந்தை உளவியலாளர்கள் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். அக்குழந்தை அப்பொருளை அதற்கான வகையில் அல்லது அதற்குப் பிடித்த வகையில் ஒழுங்கமைவு செய்கிறது. அப்பொருள் ஏற்கனவே ஓர் ஒழுங்கமைவில் இருக்கிறது இல்லையா? அந்த ஒழுங்கமைவைச் சிதைத்து, அதனை மாற்றி இன்னொரு ஒழுங்கமைவில் அக்குழந்தை அப்பொருளை மாற்றுகிறது. வளர்ந்த குழந்தைகளான நமக்கு அது ஒரு சிதைத்தல் போல் ஒழுங்கை ஒழுங்கின்மையாக்குவது போல் தெரிகிறது என்கிறார்கள்.
உண்மையில் இது மனிதனின் உள்ளுயிரிலிருந்து வரும் செயல் என்று நினைக்கிறேன். வழங்கப்பட்ட எல்லைகளை மீறி ஒன்றைச் செய்ய விழையும் மனிதக் குழந்தையின் உள்ளுயிர்த் தேவைதான் மனிதனை இவ்வளவு தூரம் வளர்த்து வந்திருக்கிறது. ஒரு பொருளின் பெளதீக, அபெளதீக சாத்தியங்களை அதன் தர்க்கங்களை எப்படி எல்லாம் மீற முடியும் என்று ஒரு குழந்தை யோசிக்கிறது. கவிஞனும் அதைத்தான் யோசிக்கிறான். வழங்கப்பட்ட சாத்தியங்களை, அதன் உச்சபட்சமான எல்லைகளை எப்படிக் கடப்பது புதிய எல்லைகளை, புதிய சாத்தியங்களை எப்படி அடைவது என்கிற மானுட மனதின் அடிப்படையான விழைவையே குழந்தையும் கவிஞனும் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஏற்கெனவே திறக்கப்பட்ட சன்னலை மீண்டும் எப்படித் திறப்பது என்கிற சாத்தியத்தை மீறிய கேள்வியைக் கவிஞன் தீவிரமாகக் கேட்கிறான். அதற்கான புதிய சாத்தியம் ஒன்றைக் கண்டுபிடிக்கும் வரை அக்கேள்வி அவனைத் தூங்க விடாது. அவனுக்கு அக்கேள்வி அவனுடைய ரொட்டியின் அளவுக்குத் முக்கியமானது. தீவிரமானது. ஏனெனில் அக்கேள்வியே அவனை இன்னும் சொல்லப்போனால் மானுட குலத்தை முன்னுக்கு நகர்த்திப் போயிருக்கிறது. சமூகம் அரசியல் புவியியல் இயற்கையைப் புரிதல் ஆன்மிகம் கலை என எல்லா துறைகளிலும் எல்லையைக் கடப்பது. வழங்கப்பட்ட சாத்தியங்களை மீறுவது அதற்கான புதிய சாத்தியங்களை அடையாளம் காண்பது ஆகியவற்றின் மீது கவிஞனின் கண் இருந்துகொண்டிருக்க இதுவே காரணம்.
ஒரு குழந்தையின் தூக்கிக்கொண்டு தெருவில் சென்று நின்றால் அது கைகளை நீட்டி அங்கே போ என்று சொல்லும். அங்கு சென்று நின்றால் மேலும் கைகளை நீட்டி போ என்று சொல்லும். அது சொல்லும் எங்கு சென்று நின்றாலும் அது போய்கொண்டே இரு என்றுதான் சொல்லும். உண்மையில் அது அக்குழந்தையின் அகம் அல்ல. மானுடத்தின் அகம். எல்லையைக் கடந்துகொண்டே இருப்பது. எங்கும் போதாமையை உணர்ந்து போய்கொண்டே இரு விரிவாகிக்கொண்டே இரு என்று அதனிடம் அம்மானுடத்தின் பேரகமே சொல்கிறது. கவிஞனிடம் வந்து சொல்வதும் அந்தப் பேரகம்தான். நேற்றும் இன்றும் நாளையும் வாழும் ஒட்டுமொத்த மானுடத்தின் அகம் அது. அதன் குரலை கவிஞனற்றி வேறு யார் அத்தனை அக்கறையோடு கேட்கவியலும். அதனால்தான் அவன் கவிஞன். அதனால்தான் அவன் கலைஞன். அதனால்தான் கலை மனித குலத்தின் இன்னொரு ரொட்டி. எந்த ரொட்டியால் மனதின் கடும் பசியைப் போக்கவியவில்லையோ அதற்கு பதிலாய் வந்து நிற்கும் இன்னொரு ரொட்டி. கலையின் தேவைகளில் இந்தப் பண்பு மானுடத்தின் ஆதிகாலம் முதல் இன்றும் தொடர்வது.
ஆதிகால பாறை ஓவியங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு மாட்டினை வேட்டையாடுவதை எவ்வளவு அழகாக சித்தரித்திருப்பார்கள் பாருங்கள். அதை அவன் ஏன் செய்தான் என்பதற்கு எத்தனையோ தர்க்கங்கள். ஒன்று அந்த பேரனுபவத்தை வந்து தன் கூட்டத்திடம் சொல்வதாக இருக்கலாம். அது மிக முக்கியம். இன்னொன்று அதை வரைவதை ஒரு சடங்காகச் செய்திருக்கலாம். அதனை வரைந்து வழிபட்டு பூசனைகள் செய்துவிட்டு அடுத்த முறை வேட்டைக்குச் செல்லும்போது வந்து சேரும் வெற்றி அவனை அச்செயல்களை தொடர்ந்து செய்யத் தூண்டி இருக்கலாம். ஆனால், உலகம் முழுதும் இன்று பலவிதமான பண்பாடுகள் விரவியிருக்கம் எல்லா ஊர்களிலும் அப்படியான பாறை ஓவியங்கள் உள்ளன. இது உலகம் முழுக்க உள்ள எல்லாம் மானுடப் பண்பாட்டிலும் ஓர் அடிப்படையான உணர்வைக் கொண்டு வரையப்பட்டிருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ளலாம். உணவுக்காக வேட்டையாடப் போனவன். உணவு கிடைத்ததும் அந்த வேட்டை எனும் செயலை ஏன் ஓவியங்களாகக் கீறி வைத்திருக்கிறான். இந்தக் கேள்விக்கும் நாம் இன்னமும் முழுமையான பதிலைச் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு எது மனிதனை மனிதனாக மாற்றியதோ அதற்காக என்று சொல்லிக்கொள்ளலாம். அந்த உணர்வு தேடலாகவும் இருக்கலாம். தீர்வாகவும் இருக்கலாம். ஒரு பொருளை அதன் அடிப்படையான கட்டமைப்பை சிதைத்து புதியதை தேடுவது ஒரு கலைச் செயல்பாடு என்றால், புதிய ஒன்று கிடைத்தபின்பு கொள்ளும் களி உவகை கொண்டு வந்து சேர்ப்பதும் ஒரு கலைச் செயல்பாட்டைத்தான். அங்கும் அவனுக்குக் கலை தேவைப்படுகிறது.
1 Comment
BoomiGeevan
சிறப்பு கவிஞரே, நானும் உங்களை கவிஞர் என்று அழைக்க விரும்புகிறேன்..
ஒரு கவிஞனை குழந்தையுடனும் பைத்தியத்துடனும் ஒப்பிடும் தைரியம் ஒரு கவிஞனுக்கே வாய்க்கும்.. அந்த வகையில் இல்லை எனினும் திறந்த ஜன்னலை திறக்க நினைக்கும் மழலைத்தனம் ஒரு கவி மனம் தான்..
வாழ்த்துக்கள் கவி தோழா..❤️❤️