சிங்கையில் வெளியாகும் கவிதைகள் மட்டுமல்லாது, நாவல்கள், சிறுகதைகள் போன்ற பிற இலக்கிய வடிவங்களுமே தமிழகப் படைப்புகளின் பாதிப்பைக் கணிசமான அளவிற்குத் தங்களுக்குள் ஊடுருவ அனுமதித்தபடியேதான் வெளியாகின்றன. இப்போக்கினைச் சிங்கப்பூரில் வெளியான ஆரம்பக்கட்ட படைப்புகளில் இருந்து தற்காலத்தில் வெளியாகும் படைப்புகள் வரையில் அவதானிக்கலாம். இதைப் பிழையென்றோ, போலச் செய்தல் என்றோ கருத முடியாது. ஒரு நிலப்பரப்பினின்று பிறிதொரு நிலப்பரப்பிற்குப் புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் ஆதி நிலத்துப் படைப்புகளின் பாதிப்பைத் தங்கள் படைப்புகளில் பிரதிபலிப்பது வெகு இயல்பானதேயாகும். இதுபோன்ற பெரும்பாலான ஆக்கங்கள் தழுவல்கள் அல்ல. மாறாக, தமிழ்நாட்டின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்ததன் வழியே இப்படைப்பாளிகள் அறிந்தும் அறியாமலும் தங்களுக்குள் புக அனுமதித்த கலையம்சங்களின் வெளிப்பாடே. இந்த அடிப்படையான புரிதலில் இருந்தே மேலதிகமான விவாதங்களுக்குள் நகர முடியும். தமிழ் மையநிலத்துப் படைப்புகளின் பாதிப்புடன் வெளிவரும் சிங்கைப் படைப்புகளை எந்த அளவிற்கு வரவேற்று அங்கீகரிக்க வேண்டும் என்ற கேள்வி மனத்தில் எழுகிறது. பொதுவாக, ஆரம்ப கட்டப் படைப்பாளிகளின் படைப்புகளிலேயே இந்த அம்சம் மேலோங்கிக் காணப்படுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல், தனக்கான அடிப்படையான கேள்விகளையும், செல்திசையையும் தீர்மானித்துக் கொள்ளும் படைப்பாளிகள் இயல்பாகவே தங்களுக்குரிய சொந்த நடையைக் கண்டடைகிறார்கள். தமிழகப் படைப்புகளிலேயே தமிழின் முதல் சிறுகதையாகச் சொல்லப்படும் வ.வே.சு. அய்யரின் குளத்தங்கரை அரசமரம், தாகூரின் “Ghater Katha” கதையின் தழுவல் என்று கருதப்படுகிறது. ஆகையால், ஆரம்பக் கட்டப் படைப்பாளிகளின் ஆக்கங்களில் முன்னோடிகளின் பாதிப்புத் தவிர்க்க முடியாவிட்டாலும், அவர்கள் தங்கள் படைப்புகளினூடாக முதிர்ந்து செல்லும்போது, விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் தனது பக்க எடையை உதிர்த்துவிட்டுப் பறப்பது போல, பறந்து செல்வார்கள் என்று நம்பலாம்.
சிங்கப்பூர்க் கவிதைகளில் நிச்சயமாக, தமிழகக் கவிதைகளின் தாக்கம் இருக்கிறது. இதற்குத் தமிழகக் கவிதைகளை இங்குள்ள கவிஞர்கள் விரும்பி வாசிப்பது ஒரு காரணம் என்றாலும், மேலதிகமாக, சிங்கப்பூரில் ஆண்டுதோறும் தமிழக எழுத்தாளர்களை, கவிஞர்களை இங்குள்ள அரசும், பல்வேறு இலக்கிய அமைப்புகளும் வரவழைத்து, இலக்கிய உரையாடல்களுக்கான பல்வேறு வாய்ப்புகளை இடைவிடாமல் உருவாக்கி அளிப்பதன் வாயிலாக நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றமும் முக்கியக் காரணம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, சிங்கப்பூர்த் தமிழ் மொழி விழா, சிங்கப்பூர் எழுத்தாளர் திருவிழா மற்றும் சிங்கப்பூர் வாசகர் வட்டம் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய அமைப்புகளின் ஆண்டு விழாக்கள் வாயிலாகத் தமிழகத்தின் நவீன இலக்கியப் படைப்பாளிகள் இங்கு வருகை புரிந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்களுடன் இங்குள்ள படைப்பாளிகள் ஆக்ககரமான உரையாடலில் ஈடுபடுகின்றனர். அவர்களால் நடத்தப்படும் பல பயிற்சிப் பட்டறைகள், இலக்கியக் கலந்துரையாடல்கள் மூலமாக இங்குள்ள இலக்கியப் படைப்புகள் மேம்படுவதற்கான சூழல் ஏற்படுகிறது. ஆரம்பக் கட்டத் தாக்கங்களை மீறி, காலப்போக்கில், மெல்ல மெல்ல இங்குள்ள படைப்புகள் காத்திரமாகவும், சுயாதீனமாகவும் வெளிப்படத் துவங்குகின்றன.
கவிஞர் விக்ரமாதித்யனின் “பொருள் வயின் பிரிவு” என்ற இந்தக் கவிதை இலக்கிய வட்டத்தில் பரவலாக வாசிக்கப்பட்ட கவிதை.
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காகப்
பிரிந்து வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள
இதே தலைப்பில், சிங்கப்பூரில், சுபா செந்தில்குமார் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரே பொருளில்தான் எவ்வளவு எழுத இருக்கிறது! சங்க காலத்தில் இருந்து நவீன காலம் வரை ‘பொருள் வயின் பிரிதல்’ நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. இனியும் அது நிகழும். விக்ரமாதித்யன் எழுதிய பல பத்தாண்டுகளுக்குப் பின் சுபா அதே கருவை எழுதினாலும், இக்கவிதையில் பெண்ணின் உணர்வும் இடம்பெற்றிருப்பதால், ஒருவித சமநிலையுடன் அக உணர்ச்சிகள் மேலும் கூர்மையடைந்திருப்பதை இக்கவிதையில் காணமுடிகிறது.
பொருள்வயிற் பிரிதல்1
தலைவியைப் பிரிந்திருப்பவன்
பிங்க் நிற தேங்காய்ப்பூ டவலில்
தலை துவட்டுகிறான்.
அவள் உலராத கூந்தலுக்குள்
நீண்ட விரல்களாய் நுழைந்து வெளியேறிய
நினைவுகளின் ஈரத்தை
வேரோடு பிடுங்கி உதிர்க்கிறது கொடுங்காலம்.
இரட்டைத் தலைகளுடன் வாழ விதிக்கப்பட்டவன்
தன் துரித உணவில்
நீண்ட மயிர் தென்படாத வேளைகளிலும்
அவளுக்குப் புரையேறுவதாக நீட்டித்துக்கொள்கிறான்
இன்னொரு தலைக்கான ஆயுளையும்.
கடைசியாய் அவளிட்ட எச்சில் முத்தத்தில்
புதைந்திருக்கும் ஈரத்தைக் கிளறியபடி
மையிருள் நிறைந்த வெளியில்
முளைவிடத் துவங்குகின்றன
வெள்ளி ஒளியிழைகள்.
பகல் வேளையொன்றில்
பைநிறைய விளக்குகளைச் சுமந்துகொண்டு
பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கு
உதிர்ந்த வழுக்கையுடன் திரும்புபவனை
நரைத்த தலையோடு
வரவேற்கக் காத்திருக்கிறாள்.
-சுபா செந்தில்குமார்
அன்பின் போலித்தனம் அல்லது அன்பின் மறைமுக வன்முறையைக் கவிஞர்கள் தொடர்ந்து எழுதியபடி இருக்கின்றனர். “அன்பு” என்ற நாவலையே இப்பொருளில் சாரு நிவேதிதா சமீபத்தில் எழுதியிருக்கிறார்.
கவிதைகளில், சுகுமாரன் இப்பொருளில் நிறைய எழுதியிருக்கிறார். அன்பின் கோர முகத்தை அவரது இக்கவிதையில் பார்க்கலாம்.
இங்கே இருக்கிறேன்
விசாரிப்புக்கு நன்றி
எறும்புகள் சுமந்து போகும் பாம்புச் சட்டைபோல
நகர்கிறது வாழ்க்கை
சிறகுகளுடன் முட்டைக்குள்ளிருப்பது அசௌகரியம்
யத்தனித்தால் பறக்கக் கிடைக்கும் வெளியோ
கொசு வலைக்குள் அடக்கம்
…..
இப்போது அன்பு-
ஊதாரிப் பிள்ளை வீடு திரும்பக் காத்திருக்கும்
கருணையோ
சாகாத பிடிகடுகுக்காய் நடந்த
ஆற்றாமையோ
தொட்டில் இல்லாமல் வந்த குழந்தைக்குச்
சவப்பெட்டி வாங்கக் காசில்லாத
தவிப்போ அல்ல
இப்போது அன்பு-
சவரக் கத்தியின் பளபளக்கும் கூர்முனை.
– சுகுமாரன்
மதிக்குமார் தாயுமானவனின் இக்கவிதையில், சுகுமாரன் மேற்கண்ட கவிதையில் பயன்படுத்திய பளபளக்கும் சவரக் கத்தியின் படிமத்தின் சாயலைக் காணலாம்.
நிறைதல்
கூர் தீட்டப்பட்ட
கத்தியெனக்
கருணையுடன்
காத்திருக்கின்றது அன்பு.
சுற்றியுள்ள துரோகங்களின்
கால் இடைவெளிகளில்
வாழ்வைத் தேடி
மருகிக்கொண்டிருக்க
காலம் உடலெங்கும்
நினைவுகளால் நனைக்கின்றது.
இனி மேனி சிலிர்ப்பதைத்தவிர
வேறு வழியில்லை எனக்கு.
– மதிக்குமார் தாயுமானவன்
மதிக்குமாரின் கவிதை சுகுமாரனின் கவிதையில் காணப்படும் நம்பிக்கை
வறட்சிக்கு மாற்றாகச் சிறிது ஈரத்தைப் படரவிட முயல்கிறது.
சுகுமாரனின் கோடைக்காலக் குறிப்புகள் என்ற நீள்கவிதையில் இடம்பெறும் வரிகள் இவை
ஒரு பிரம்மாண்ட சிலந்தி போல
கான்கிரீட் காடுகளுக்கு மேல் அடைகிறது சூரியன்
வெயில்
எலும்புகளுக்குள்ளும் நுழைந்து கருணையைக் கொல்கிறது
என் நம்பிக்கைகள் வற்றிக் கொண்டிருக்கின்றன
பறவைகள் உலர்ந்த குரலில் புலம்புகின்றன
காலிக் குடங்கள் அலறுகின்றன
….
கொடுமையானது
இந்தக் கோடைக் காலம்
இல்லை
எப்போதும் நாம் வாழ்வது கோடைக் காலத்தில்.
– சுகுமாரன்
மோகனப்ரியாவின் கவிதை கிட்டத்தட்ட இதே கருவைக் கையாள்வதைக் கவனிக்கலாம்.
கோடைக்காலப் பாடல்3
இந்தக் கோடைக்காலம்
எல்லாவற்றையும் போர்த்திக்கிடக்கிறது.
நகரத்தின் வீதிகள்
அதன் நீண்ட கரங்களால்
வெளியேறும் பாதங்களைப் பற்றிக்
கூடவே அழைத்துச்செல்ல மன்றாடுகின்றன
வானம் தெளிந்த நீலத்தில்
தொட்டி நீரின் சூட்டோடு காத்துக்கிடக்கிறது
என்னைப் போலவே
குளிர்காலத்துக்கு முன் வரும்
உன்னைக் காண
உன்னோடு அழைத்து வரும்
மழையைக் காண
பூக்கள் காய்ந்து நிற்கும்
மஞ்சள் பூச்செடியின் விதை
தன் மேல் விழும்
ஒரு துளிக்காகக் காத்திருக்கிறது
தன்னைத் திறக்க
தன்னுள் கரைய..
– மோகனப்ரியா
சுகுமாரன் தன்னுடைய கோடைக்காலக் குறிப்புகளில், வாழ்க்கை முழுதுமே எரிக்கும் வெயில் நிறைந்த கோடைக்காலம்தான் என்று முடிவுகட்டிவிடுகிறார். ஆனால், மோகனப்ரியாவின் கோடைக் காலம், அடுத்து வரும் மழைக்காகப் பெரிதும் ஏங்கி நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.
ஊர்க்காரர்கள் படக்கூடிய சிரமங்களைச் சிங்கப்பூர்க் கவிஞர்கள் பலரும் எழுதியிருக்கின்றனர். ஊரில் இருந்து வந்து இங்கே வெவ்வேறு கம்பெனிகளில் வெவ்வேறு சிரமங்களிடையே தங்களைப் பொருத்திக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஓரளவு வாழமுயன்று மற்ற நாட்களில் பிழைத்துக் கிடந்து எதையோ செய்து எதையோ ஈட்டி எப்படியோ மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஊரில் வசதியானவர்கள் என்று பேசிக்கொள்வார்கள், இங்கேயிருப்பவர்கள் இளக்காரமாகப் பார்ப்பார்கள். அப்படித்தான் இருக்கிறது இவர்களது பிழைப்பு. கவிஞர் இன்பாவின் கவிதையில் மேலும் நுணுக்கமான சித்திரங்கள் இடம்பெறுகின்றன.
நாங்கள் ஊர்க்காரர்கள்4
நாங்கள் ஊர்க்காரர்கள்
அப்படித்தான் சொல்கிறார்கள்
ஓடும் நாடாவில் சுற்றிவரும்
சப்பானிய சுஷி உணவைப்போல்
கொணரிப் பட்டையைச் சுற்றிவந்து
கறுப்புப் பெட்டியில் கனவுகளைச் சுமந்து வந்தோம்
விமானச் சக்கரங்கள் கால்களைக் கடத்தின
உழைக்கும் இறக்கைகளை
இடுப்பு வாராகக் கட்டிக்கொண்டோம்
வெள்ளிகளைக் கைகளில் நிரப்பினாலும்
அறை கிடைக்காமல் திணறுகிறது வாடகை
விரிந்த நெற்றியுடன் வாய்த்த இடத்தில்
நெஞ்சம் பிளந்து கிடந்தாலும்
வேலை போய் விடுமா
அனுமதியட்டை புதுப்பிக்கப்படுமா
நிரந்தரவாசம் கிடைக்குமாவென
தொழுவத்தில் கட்டப்பட்ட எருதுகளாய்
எப்போதும் பதற்றத்துடன்
புனைவு தேசத்தில் திரிகிறோம்
நாங்கள் ஊர்க்காரர்கள்
அப்படித்தான் சொல்கிறார்கள்
….
சொந்த மண்ணை விட்டு வந்து
நிலத்தைப் பக்குவப்படுத்தி
வான் தொடும் கட்டிடங்களை நிமிர்த்தி
நிலமெங்கும் தங்கம் விளைவிக்கிறோம்
கூலியாய் ஒரு சுமாரான வாழ்வு கிடைத்தது
இந்த நகரின் அடிவயிற்றில் புதைந்திருக்கிறது
எங்களது இரைப்பைக் கனவு
அகழ்ந்து அகழ்ந்து
அதை எம் வாய்க்குக் கொண்டுவருகிறோம்
நாங்கள் ஊர்க்காரர்கள்
அப்படித்தான் சொல்கிறார்கள்
– இன்பா
இன்பாவின் இக்கவிதைக்கும் மு.சுயம்புலிங்கத்தின் கீழ்க்கண்ட கவிதைக்கும் ஒரு கோட்டினை இழுக்கலாம். இடங்கள் வேறு மனிதர்கள் வேறானாலும் வாதை ஒன்றாகத்தான் இருக்கிறது.
தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால்நீட்டி தலைசாய்க்க
தார்விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டுத்
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.
– மு. சுயம்புலிங்கம்
குறுந்தொகையின் இந்தக் கவிதையில், இரவாகிய வெள்ளம் கடலினும் பெரிதே என்று, தலைவனைப் பிரிந்த தலைவி தன் தோழியிடம் கூறுவாள்.
எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.
குறிப்பாக, ‘கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே’ என்ற படிமத்தின் நவீன வடிவத்தை மதிக்குமார் தாயுமானவன் இந்தக் கவிதையில் காணலாம்.
நச்சுக்குப்பி 5
ஓர் அலை வந்து சென்றவுடன்
மறு அலை வந்துவிடுகிறது.
குழந்தையின்
ஒரு கன்னத்திலிருந்து
மறு கன்னத்திற்கு உடனே
செல்ல முடிகிறது.
துயரங்கள் கூடப்
போதுமான இடைவெளியில்
அடுத்தடுத்து வந்துவிடுகின்றன.
இந்த இரவுகள்தான்.
ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு
அவ்வளவு தொலைவு.
சரியாகப்
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையிலுள்ள தொலைவு.
– மதிக்குமார் தாயுமானவன்
இப்படி மேலும் பல சிங்கைக் கவிதைகளில் தமிழகக் கவிதைகளின் தடங்களைக் கண்டறியலாம். ஆனாலும், கட்டுரையின் துவக்கத்தில் சொன்னபடி, இவையெல்லாம் தழுவல்களோ, போலச் செய்யும் முயற்சியோ அல்ல. இவை கூறுமுறையினாலும், கலையமைதியினாலும், படிமங்களினாலும் வெகு தொலைவுக்கு நகர்ந்துள்ளன. கவிதையிலுள்ள அடிப்படைக் கருப்பொருள் வெவ்வேறு வகையிலான படிமச் சமையலினூடாகத் திசைமாற்றம் கொண்டுள்ளன. தத்தம் போக்கில் சென்று வாசகர் கற்பனையில் பயணித்து அவனது அகத்தில் தகைவுகொள்கின்றன. “Immature poets imitate, Mature poets steal” என்ற டி.எஸ். எலியட்டின் வரியொன்று நினைவுக்கு வருகிறது. ஆம், சிங்கைக் கவிஞர்கள் தங்கள் திசைகளைத் தீர்மானித்து, வெகுவாக முன்னேறத் துவங்கியிருப்பதைக் காண முடிகிறது. செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருந்தாலும், சரியான திசையில் காலடிகள் செல்லத் துவங்கியாயிற்று. இன்னும் சிறிது காலத்தில் அவை தங்கள் இலக்கை அடைந்து விடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
***
அடிக்குறிப்புகள்
1. கடலெனும் வசீகர மீன்தொட்டி – சுபா செந்தில்குமார்- யாவரும் பதிப்பகம்
2. யாமக்கோடங்கி- மதிக்குமார் தாயுமானவன் – சால்ட் பதிப்பகம்
3. மோகனப்ரியா – ஞாபகப் பெருங்களிறு – சால்ட் பதிப்பகம்
4. இன்பா – கடல் நாகங்கள் பொன்னி – சால்ட் பதிப்பகம்
5. யாமக்கோடங்கி- மதிக்குமார் தாயுமானவன் – சால்ட் பதிப்பகம்
-கணேஷ்பாபு
பிறந்து வளர்ந்தது இந்தியாவின், தேனி மாவட்டம் சின்னமனூரில். 2008-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வரும் கணேஷ் பாபு, சிறுகதைகளையும், நவீன இலக்கியம் மற்றும் நவீன கவிதை வாசிப்பு சார்ந்த கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். “வெயிலின் கூட்டாளிகள்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் இதழில் நவீன கவிதை குறித்து “கவிதை காண் காதை” என்ற தொடரை எழுதியிருக்கிறார. இவரது கதைகள் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ், தமிழ்முரசு, வல்லினம் போன்ற இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.


