குப்பையில் பூத்த சாமந்தியின் மேல்
கொல்லையில் வளர்ந்த வாழை நாருக்கு
மனம் கொள்ளா காமம்
மலர்ச்சரம் ஆகலாமா என்றான்.
அவளுக்கும் மையல்தான்
இருந்தாலும் அச்சம்
புஞ்சைக்கு உரமாக்கிவிடுவார்கள்
என்றாள்.
உள்ளூற பயம் ஊறினாலும்
நெஞ்சிரண்டிலும்
கள்ளூறியது.
இரவுக்குறியில் சந்திப்பு,
இதழ் தொட்டுப் பயின்ற காதல்
சரம் தொடுத்து ஆடியது.
நெருப்பே வைக்காமல்
எள்ளுக்கட்டு புகையும் என்பதை
அவள் அறிவாள்.
ஆயினும் அவர்கள்
அறுவடையை நிறுத்தவில்லை.
எள்ளுப்போர் உயர்ந்த நாளொன்றில்
தன் சங்குக் கழுத்துக்கு
கத்தித் தீட்டப்படுகிறதென்று சொன்னாள்.
குப்பைக்குத் தீ வைத்த பிறகும்
சாமந்தி மலர்ந்தாடியது
வாழையில் கத்தி வைத்தாலும்
நாருக்கு காமம் தீரவில்லை
கண் காணா இடத்துக்கு
ஊரைவிட்டு ஓடிப்போனார்கள்.
எங்கிருந்து பாம்பு வரும்
எப்பொழுது தேளு வரும் என்று
செத்துப் பிழைத்து
கற்பில் நுழைந்தார்கள்
ஓடுகிறது பிழைப்பு .
ஆனால்,
ஊரில் அவர்கள்
விட்டு விட்டு வந்த அலர்
அதே வன்மத்தோடு
நூறு கத்திகளை
கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது.