ஆயிரமாயிரமானோர்
கூடிக் கலையும்
ஊஞ்சல் மண்டபத்தில்
சமநிலை எங்கேயிருக்கிறது
ஆயிரமாயிரமான கதாபாத்திரங்கள்
கதைகளாகும்
யாளித் தூண்களின் நடுவே
சம நோக்கு எங்கேயிருக்கிறது
யாரை நோக்கி இந்தக் கேள்விகளைக்
கேட்பேன் நான்
யாரிடமிருக்கிறது
சமநிலைக்கான அக்கறைகள்
என் கன்னக்கதுப்புகளில்
துறவறத்தின் ரேகைகள்
தோன்றிவிட்டனவா
நீ அடையாளம் கண்டுவிட்டாயா
நான் எப்போதுமே மண்டபத்துக்கு
வெளியில் நிற்பவன்தானே
இறைவனின் கல்யாண கோலமும்
கூட்ட நெரிசலும் கலைய
எப்போதும் காத்திருப்பவன்
நான் முதலில் வருபவன் என்றாலும்
கடைசியில் தாமதமாய்ச் சென்றடைபவன்
எல்லாவற்றிலும் தாமதம் என்பதால்
என்னை நீ மறந்துவிடுவாய்
இரண்டு கண்ணாடிகளை
எதிரெதிர் நிறுத்தினால்
முடிவிலி உண்டாவதால்
எதுவும் மாறிவிடப் போவதில்லை
மேகங்கள் மிதக்கும்; தண்ணீர் ஓடும்
வழக்கம் போலவே
சாமி சப்பரங்களின் மூங்கில் கழிகள்
தரையில் விட்டுச் செல்லும்
வெற்றுப் பதிவுகளைச் சுற்றி சாமந்திகள்
தங்கள் மெல்லிய மஞ்சள் இதழ்களை
உதிர்த்துக் கிடக்கும்
மரத்தில் முழுமையாய் பிரகாசிக்கும்
நாகலிங்கப் பூக்கள்
நம் மென் தொடுகையில் சிதிலமாகி
இதழ்கள் பரப்பிக் காய்வதில்லையா
அவ்வளவுதான் நம் ஊஞ்சல்
மண்டபக் கூடுகையென
யாளிகள் அறியும்
இந்த மேடை தவறுகள் மலிந்தது
மேடை எனும்போதே தவறுகள்
தன் போக்கில் வந்து கூடி விடுகின்றன
எத்தனை பேர் கூடினார்கள் இங்கே
ஒற்றைக் கால் கொலுசை விட்டுச் சென்றவள்
வீடெது என்று தெரியாமல்
கூட்டத்தில் தொலைந்தவர்
சந்தேகக் கேசில் கைதாகி
மனம் பிறழ்ந்தவர்
யாரைச் சொல்ல யாரைச் சொல்லாமல் விட
தாமதமாய் வந்த எனக்குத்தான்
எல்லாம் தெரியவருகின்றன
யாளிகள் ஏன் தங்கள் குறிகளைத்
தாங்களே வாயில் வைத்து
சுவைத்தபடி இருக்கின்றனவென
எனக்குத் தெரிவதில்லை
சுய மோகத்தின் உச்சம்
சுய போகத்தின் எச்சம்
என நீ எனக்கு அறிவுறுத்தக்கூடும்
ஊஞ்சல் மண்டபத்தின்
முடிவிலி இறுதிப் புள்ளியில்
யாளித் தூண்கள் நம் பார்வைக்கு
இணைவதைப் பார்க்கிறோமில்லையா
அது போலவே சுய மோகத்தில்
நானும் நீயும் இணையக்கூடும்
நாம் ஏன் ஒரு மாற்றத்திற்காக
பிறரைப் பற்றிப் பேசக்கூடாது
அந்த மனம் பிறழ்ந்தவரைப் பற்றி
நம் மௌனங்களின் மையம் அவரல்லவா
நாம் ஏன் கணமேனும் இந்த
மேடையையும் மண்டபத்தையும்
விட்டு விலகி இருக்கலாகாது
மண்டபத்தைக் கூட்டிப்
பெருக்குபவர்கள் வந்துவிட்டார்கள்
அவர்களிடமேனும் நாம் சொல்லலாம்
இந்த மண்டபத்திற்குப் பின்னுள்ள
மூங்கில் வனம் உனக்கும் எனக்கும்
புல்லாங்குழல்கள் ஆவதில்லை
ஆனால் அவன் குழலிசையைக்
கேட்டவண்ணம் இருக்கிறான்
நாம் மேடையிலிருந்து, மண்டபத்தின்
மையத்திலிருந்து உனக்கு
இசை கேட்கிறதா என்று கேட்டோம்
அப்போது அவன் சிரித்தான்
இசை கேட்கவில்லையா என்று கேட்டோம்
அப்போதும் அவன் சிரித்தான்
அவனுடைய விலகி
இருத்தலின் சிரிப்பில்
இசைத்தூண்கள் அதிர்கின்றன
நந்தவனத்தில் கிளிக்கூட்டம்
பெரும் மகிழ்ச்சியில் கிறீச்சிடுகிறது
கோவில் குளத்தில் மீன்கள்
நீர் மேல் எழும்பி காற்றில்
கோலம் வரைந்து நீர் மீள்கின்றன
என்ன நிமித்தங்கள் இவையென
நீயும் நானும் திகைத்திருக்கிறோம்
கூட்டுபவர்கள் விளக்குமாறுகளை
தங்கள் உள்ளங்கைககளில் குத்திக்குத்தி
வியந்து நிற்கிறார்கள் அவர்கள்தானே
நம் மண்டபப் பார்வையாளர்கள்
பேதலித்தவனோ குபேர லிங்க
சன்னிதியில் நின்றிருக்கிறான்
அவன் நம்முடன் இருந்தவன்தானே
என்கிறாய் நீ
இருக்கட்டும் நாம் அவனைப் பற்றி
பேசுவதை நிறுத்திவிடுவோம்
என்கிறேன் நான்
அவன் இப்போது உள்ளூரா வெளியூரா
நம் ஆளா வேற்று ஆளா
நம்மாள் என்றால் பேசலாம்
இல்லாவிட்டால் மறந்துவிடலாமென்கிறாய்
அதை நீ சொன்னவுடன்தான்
எனக்கு ஞாபகம் வருகிறது
நானே மண்டபத்திற்கு வெளியில்
நிற்பவன் அல்லவா
அப்படித்தானே நாம்
பேச ஆரம்பித்தோம்
நான் எப்போதுமே
தாமதமாய் வந்து சேர்பவன் அல்லவா
நான் உன்னோடு மேடையில்
ஏறியது தப்பாகிவிட்டது
நான் அவனோடுதான் செல்லவேண்டும்
அவன் தான் என்னைக் கடலுக்குக் கூட்டிப்போவான்
சித்தம் பேதலித்தவன் நம்மோடு இருந்தவன்
வெளிறிய நீல அலைகளைக் கொண்ட கடல்
எவ்வளவு தூரம் இங்கிருந்து
அவன் உள்ப்பிரகாரகரம் நோக்கித் திரும்பிவிட்டான்
அவன் பெயரைக்கூட நான் மறந்துவிட்டேன்
மண்டபமும் யாளிகளும் ஏற்படுத்திய கிறக்கம்
அவன் தன் பரட்டைத் தலையை
சிலுப்பிக்கொள்கிறான்
ஊஞ்சல் மண்டபத்தில் எத்தனை பேர் இருந்தார்கள்
எத்தனை பேரை நான் தேர்ந்தெடுத்திருக்கலாம்
நான் ஏன் உன்னை விடுத்து இவனோடு செல்கிறேன்
அவன் மூலஸ்தானத்தை நோக்கி விரைகிறான்
கடல் கூட்டிச் செல்பவனே கொஞ்சம் நில்
கொஞ்சம் நில்
உன் பெயரை மட்டுமாவது சொல்
சம நிலை எங்கேயிருக்கிறது எனத்
தேடி வந்தவன் நான்
அவன் என்னைத் திரும்பிப் பார்க்கையில்
மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன
அவன் மெதுவே சொல் கூட்டுகிறான்
என் பெயர் சந்தேகக் கேஸ்
யாளிகள் கற்தூண்களாய்ச் சமைகின்றன