என் தாத்தா
முழு நேர விவசாயி
அப்பா பகுதி நேர விவசாயி
நானும் என் இளமையில் அரைகுறை விவசாயிதான்
என் மகன்களுக்கோ ஒரு மடைமாற்றவும் தெரியாது
இன்று உழவின் சுவாசம் முனகிக் கொண்டிருக்கிறது
பூனையை அஞ்சி சுண்டெலிகள்
ஆகாரம் தேடி பீக்காடுகளில் அலைகின்றன
மாமழைப் போற்றிய மண்ணில்
கிணறுகளை வற்றக் குடித்தும்
தாகம் தீரா ஆழ்துளை கிணறுகள்
உழவாளி கடனாளி யாகிவிட்ட ஏமாளி
கனவுகளில் கூலிப்படைகளின் ஜப்திப் படையெடுப்பு
தவிடுபொடியான தவிடும் பிண்ணாக்கும்
பணத்தைக் கரக்கும் தீவன மூட்டைகள்
தரகனது இருசக்கர வாகனப் பின்புறத்தில்
கசாப்புக்கடையன் மடியினில் பால்குடிக் கன்றுகள்
குட்டிச்சுவராய் மாட்டுக் கொட்டகை
தூர்ந்துபோன எருக்குழிகள்
உயிரை உறிஞ்சும் உரப்பூச்சிக்கொல்லிகள்
மலடாக்கப்பட்ட வயல்வெளிகளில்
அடுக்கப்பட்ட வீட்டுமனை வரைபடங்கள்
உழை உழை உழையென உழைத்தும்கூட
வாழ்வு உழைக்குள் சிக்கியிருக்கிறது
எருமையை இழந்து எருதை இழந்து
எருவை இழந்து ஏரையும் இழந்து
இன்று விவசாயிகள் நிம்மதியாக இருக்கிறார்கள்
நூறுநாள் வேலை கிடைத்து
ரேசன் அரிசியை வேளாவேளைக்குப் பொங்கித் தின்று.