நான் கவிஞன் என்றே விளிக்கப்பட விரும்புகிறேன் – கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்
கேள்விகள் : இன்பா
நவீன இலக்கியத்தில் இயங்கியவாறு வரலாறு, தத்துவம் மற்றும் கோட்பாடுகள் கவிதையியல் குறித்த தீவிரமான தனது கருத்துகளை முன் வைத்துவருகின்ற படைப்பாளர் இளங்கோ கிருஷ்ணன். இவர் சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பின் நவீனத்துவம் சார்ந்து கோட்பாட்டு ரீதியில் எளிய அறிமுகங்களைப் பகிர்ந்துவருகிறார். காய சண்டிகை, பட்சியன் சரிதம், பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் மருதம் மீட்போம் என்ற விவசாய வரலாற்று அரசியல் நூலையும் எழுதியிருக்கிறார். திரைத்துறையில் இயங்கத் தொடங்கியதும் முதல் வரவாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் இவரது பாடல்கள் வெளியாகியுள்ளன. திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதத் தொடங்கியபின் இளங்கோ கிருஷ்ணன் பற்றிய ஒரு சில காணொளி நேர்காணல்கள் வந்திருந்தாலும் ஒரு எழுத்துக் கலைஞராக இந்த நேர்காணல் சிறப்பான பதிவாக வந்துள்ளது.
காயசண்டிகை
உன்மத்தம் முற்றிய ஒரு பௌர்ணமியில்
தன் பிச்சைப் பாத்திரத்தை
நீர்த்தொட்டியில் அமிழ்த்தெடுக்கிறாள்
ஒரு பைத்தியம்
அப்போது அது
அட்சயப்பாத்திரமாகியது
இந்தாருங்கள் அமிழ்து அமிழ்தென
திசையெங்கும் அள்ளித் தெளிக்கிறாள்
இறைக்க இறைக்க தண்ணீர்போல்
சுரந்துகொண்டேயிருக்கிறது அப்பாத்திரம்
கோருவதற்கு யாரும் வராத அவ்விரவில்
சிமெண்ட் தரையில் சிந்திய நீரில்
இறங்கி அதைப் பருகிக்கொண்டிருக்கிறது
முழுநிலா.
– இளங்கோ கிருஷ்ணன்
உங்களுடைய இளமைக்கால வாசிப்பு அனுபவம் பற்றி சொல்லுங்கள்.
நான் பள்ளி நாட்களிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். வீட்டில் வாசிப்பிற்கான சூழல் இருந்தது. என்னுடைய மாமாக்கள், அத்தைகள் சித்தப்பாக்கள், சித்திகள், அக்காக்கள், அண்ணன்கள், அனைவருக்குமே கதைப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தது. அவர்களோடு இருந்ததால் நானும் அவற்றை வாசித்தேன். அது ஒரு வகையான வெகுஜன இலக்கியம். ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் என்பதில் தொடங்கி தேவிபாலா, பாலகுமாரன் வரை ஒரு நெடும்பட்டியல் அதில் உண்டு.
பள்ளி நாட்களில் கவிதையின் மீதான ஆர்வமென்பது சினிமா பாடலின் வரிகளைக் கவனிப்பதில் தொடங்கியது. அதுவும் என்னுடைய அண்ணன்கள், அக்காக்கள் பாடலின் வரிகளை வியந்து சொல்வதைக் கேட்டு உருவான பழக்கம்தான்.
பிறகு இதழ்களில் வருகிற கவிதைகளை வாசிக்கத்தொடங்கினேன். அந்த வாசிப்பு கவிதை நூல்களை வாசிக்கும் வாசகனாக என்னை மாற்றியது. பள்ளிநாட்களிலேயே பள்ளி நூலகம், பொது நூலகம், ஆகியவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. விடுமுறைகளில் நூலகங்களுக்குச் செல்வேன்.
இப்படி அடிப்படையான வாசிப்புக்குள் இருந்தபடி ஒரு கட்டத்தில் நானும் எழுத முற்பட்டேன். சிறு சிறு கவிதைகள் அன்றைய வணிக இதழ்களில் வெளியாகின. இதெல்லாம் நான் எட்டாம், ஒன்பதாம் வகுப்புகளில் படிக்கும்போது நடந்தது.
அப்போதுதான் எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, சாண்டில்யன் நாவல்கள், விக்கிரமன் நாவல்கள் ஆகியவற்றின் மீதான ஆர்வம் வந்தது. வரலாற்றின் மீதான என்னுடைய ஆர்வத்தை இந்த நாவல்களே எனக்குக் கொடுத்தன.
பதினெட்டு வயதுக்குப் பிறகு என்னுடைய வாசிப்பு மேலும் தீவிரமடைந்தது என்று சொல்லவேண்டும். வெறுமனே இலக்கிய நூல்களை மட்டும் வாசித்துக்கொண்டிருந்த நான் அங்கிருந்து தீவிர இலக்கிய நூல்கள், ஓஷோ முதல் புத்தர் வரையான தத்துவார்த்த நூல்கள், இடதுசாரி சிந்தனைகள், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ போன்றோரின் சிந்தனைகளை வாசிக்கத்தொடங்கினேன்.
இடதுசாரி வாசிப்பு மற்றும் அவர்களுடனான தொடர்பு என்னை மேலும் வளமானவனாக மாற்றியது. சமூகத்தை, வரலாற்றை மனிதகுலத்தை எப்படி நோக்குவது என்கிற அடிப்படையான புரிதலை உருவாக்கியது. இடதுசாரி வாசிப்புதான் வானியல் முதல் இயற்கையியல் வரையான என்னுடைய எல்லாவித விஞ்ஞானப்பூர்வ வாசிப்புக்கும் அடிகோலியது.
உங்களுக்கு இளம் வயதிலேயே இலக்கிய ஆர்வம் வந்துவிட்டது என்றாலும் நவீன இலக்கியத்திற்குள் எப்படி வந்தீர்களென்று சொல்ல முடியுமா?
நான் பதினெட்டு வயதுக்குப் பிறகுதான் நவீன இலக்கியத்திற்குள் வந்தேன். நான் வாசித்த முதல் நவீன இலக்கிய நாவல் என்று சொன்னால் எம்.வி.வெங்கட்ராமின் காதுகள் நாவல்தான். அந்த நாவலை ஒரு விபத்தைப் போல் சந்தித்தேன்.
ஒரு முறை பழைய புத்தகக்கடையில் புத்தகங்களைப் புரட்டியபோது அசோகமித்திரன் சிறுகதை நூல் எனக்குக் கிடைத்தது. அதை வாங்கிக்கொண்டு வந்தபோது என் கையிலிருந்த அந்த நூலைப் பார்த்த நண்பன் ஒருவன் படித்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கிச் சென்றான். மாதக்கணக்காகியும் என்னிடம் தரவில்லை. ஒருமுறை அவனிடம் வலியுறுத்திக் கேட்டபோது அந்த நூல் இல்லையென்று எம்.வி.வி.யின் காதுகள் நாவலைக் கொடுத்தான்.
அப்போது பதினெட்டு வயது. எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் நான் அதைப் படித்தேன். ஒன்றும் புரியவேயில்லை, பிறகு இது நாவல் தானா என்ற சந்தேகம் இருந்தது. அதன் மொழி நடையும், அந்த நாவலின் நோக்கும் எனக்கு அந்நியமாக இருந்தன. அதற்கு முன்பே பால குமாரனின் நாவல்களை வாசித்தவன் என்றாலும் எம்.வி.வியின் நாவல் அப்போது அவ்வளவு ருசிக்கவில்லை. வீட்டருகே இருந்த இலக்கிய நண்பர் ந.முத்து அவர்களைச் சந்தித்தபோது அந்நாவல் குறித்து சொன்னேன்.
அவர் நவீன நாவல்கள் என்றால் என்ன, நவீன இலக்கிய எழுத்து னென்றால் என்ன என்பதைப் பற்றிய எளிய விளக்கம் கொடுத்தார். இடதுசாரி மற்றும் வெகுசன இலக்கியங்களை வாசித்துக் கொண்டிருந்தபோது அவற்றிலிருந்து இந்நாவல்கள் எப்படி வேறுபட்டன என்பதைச் சொன்னார்.
அவரிடமிருந்து சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள், அசோகமித்திரனின் பதினெட்டாவது அச்சக்கோடு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு சென்றேன். அசோகமித்திரன் நாவல் எனக்குப் பிடித்திருந்தது. ஜே.ஜே.சில குறிப்புகள் என் காலின் கீழிருந்த பூமியை உருவிவிட்டது என்று சொல்லவேண்டும்.
இரவெல்லாம் அந்த நாவலின் தர்க்கங்கள் என்னைத் துன்புறுத்தியது. ஏனெனில் சு.ரா குறிப்பிடுகிற எதிர்த்தரப்பைச் சார்ந்தவனாக நான் என்னை உணர்ந்திருந்தேன். எனவே அந்த சீண்டல் என்னை உசுப்பேற்றியது. அதன் தர்க்கங்கள் என் இரவில் கனவுகளிலெல்லாம் உரையாடலாய் ஒலித்துக்கொண்டிருந்தது. இதற்கு முன்பு பொன்னியின் செல்வன் நாவல் வாசித்த காலங்களில் தான் இப்படியான பித்துப்பிடித்துத் திரிந்திருக்கிறேன், இரவுகளில் குதிரைகளின் குளம்படி கேட்டபடி சோழ தேசத்தில் உலாவுவேன்.
இப்போது இந்த நாவல் என்னை முழுமையாக ஆக்கிரமித்தது. இதன் பிறகு இப்படிப் பல நாவல்களை வாசித்திருக்கிறேன். தஸ்தாவஸ்கியின் கரம்சேவ் சகோதரர்கள், டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போல ஒரு நெடும்பட்டியல் இதற்குண்டு. இப்படியாக காதுகள் நாவல் வழியாக நவீன இலக்கியத்திற்குள் நுழைந்திருந்தாலும் ஜே.ஜே சில குறிப்புகள் வழியாக நான் ஆற்றுப்படலானேன்.
கவிஞர் இசையும் நீங்களும் ஒரே கால கட்டத்தில் எழுத வந்தவர்கள், இசையுடனான இலக்கிய பயணம் எப்படி இருந்தது? இப்போதும் தொடர்கிறதா?
இசையுடனான தொடர்பு 2000ங்களின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. நாங்கள் அனைவரும் அந்நாட்களில் த.மு.எ.சவில் இருந்தோம். அதன் மாதாந்திர இலக்கியச் சந்திப்பு தாமஸ் கிளப்பில் நிகழும். இசை, இளஞ்சேரல், இளவேனில் ஆகியோரை அங்குதான் சந்தித்தேன்.
பிறகு இருகூர் கிளை சார்பாக அவர்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தபோது அதற்கு நானும் நண்பர் ந.முத்துவும் சென்றிருந்தோம். பிறகு இசையின் முதல் கவிதை நூல் வெளியீடு அதற்கும் சென்றோம்.
அந்நாட்களில் கோவையில் நெருஞ்சி இலக்கிய முற்றம் என்றொரு நவீன இலக்கிய அமைப்பு இருந்தது. அங்கு இசையையும் மற்ற நண்பர்களையும் சந்தித்தேன். அந்நாட்களில் தான் எனக்கும் இசைக்குமான நட்பு பலப்பட்டது. அதிகம் பேசிக்கொள்ளத் தொடங்கினோம்.
ஒரு ஞாயிறு காலை இசை என் வீட்டிற்கு வருவார். இருவரும் கிளம்பி வ.உ.சி பூங்காவிற்குச் செல்வோம். மதியம் வரை இலக்கியம் பேசுவோம். மதியம் ஆளுக்குக் கொஞ்சம் கம்பங்கூழ் குடித்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்குவோம். மாலை வரை பேசுவோம். மாலை வீட்டில் விட்டுவிட்டுச் செல்வான், திரும்பவும் வீட்டிலிருந்து போன் செய்து பேசுவான். அப்படி ஒரு காலத்தில் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம். இப்போது யோசித்தால் ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது.
கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் சென்னை வரும்வரை தினமும் பேசியிருக்கிறோம். கண்டிப்பாக சனி அல்லது ஞாயிறுகளில் சந்தித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் பெரும்பாலான இலக்கியவாதிகளை நேரில் சென்று பார்த்திருக்கிறோம்.
இருவரும் சுரேஷ்வரனுடன் இணைந்து கறுக்கல் இதழை நடத்தினோம். வால்பாறையில் தமிழ்க்கவிஞர்கள் கூட்டம், பொள்ளாச்சியில் இலக்கியக் கூட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்தோம். இசையோடு இணைந்திருந்த நாட்களில்தான் மதுரையிலும் சென்னையிலும் இலக்கியக்கூட்டங்களை இருவரும் இணைந்து நடத்தினோம்.
இன்றும் இசையுடன் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. என் முதல் இலக்கியத் தோழமையென ந. முத்துவைச் சொல்வேன். ஆனால் இசைதான் எனது பால்யத்தில் மனத்துக்கு மிக நெருக்கமாக வாய்த்தவன்.
பேனா-1
மேசையில் இருந்து தவறி விழுந்த நாளொன்றில்
தலையில் பலத்த அடிபட்டுப்
பைத்தியம் பிடித்துவிட்டது என் பேனாவுக்கு
அதைக்கொண்டு
காதலிக்குக் கடிதம் ஒன்று எழுத முயன்றபோது
அது பசியின் கொடூரத்தையும்
வறியவன் இயலாமையையும் எழுதியது
வசந்தத்தின் கொண்டாட்டத்தை எழுதப் பார்த்தபோது
கலவரங்களின் பீதியையும் உயிரின் வலிமையையும் எழுதியது
கடவுளர்களின் மகிமையை எழுதப் பணித்தபோது
மதங்களின் குரோதத்தையும் படுகொலைகளையும் எழுதியது
கலைகளின் மேன்மையை எழுதப் பார்த்தபோது
தேசங்களின் பகைமையையும் ஆயுதங்களின் மூர்க்கத்தையும் எழுதியது
மிகுந்த திகைப்பும் அதிர்ச்சியுமாய் நான் இவைகளுக்கான
தீர்வுகளை எழுத முயன்றபோது
அது எனக்கொரு கொலை மிரட்டல் கடிதத்தை எழுதியது.
- இளங்கோ கிருஷ்ணன்
இளம் வயதிலேயே கோவை ஞானியுடனான தொடர்பு ஏற்பட்டது, அவரை உங்களது ஆசான் என்று சொல்லியிருக்கிறீர்கள். கோவை ஞானி உங்களை எந்தளவு பாதித்திருக்கிறார்?
ஞானியுடனான சந்திப்பு என்னை ஒரு முழுமையான இலக்கியவாதியாக்கியது என்று சொல்லவேண்டும். ஞானியின் நூல்களிலிருந்து நான் பெற்றதைவிடவும் அவருடனான நேர்ப்பேச்சில் நான் அதிகம் கற்றிருக்கிறேன்.
இலக்கியம் என்பது ஒரு முழுமையான அறிதல் முறை, எப்படி தத்துவம் என்பது தனித்துவமான அறிதல் முறையோ அதுபோலவே இலக்கியம் ஒரு தனி அறிதல் முறை என்ற கருத்தை நான் அவரிடமிருந்துதான் பெற்றுக்கொண்டேன்.
அதே சமயம் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய சமூகக்கடமை எப்படியானது என்கிற இடது மனோபாவத்தையும் நான் கோவை ஞானியிடமிருந்தே பெற்றேன்.
தமிழ் தொல் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தையும் அவரிடமிருந்தே பெற்றேன். திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் ஞானி போல் வியந்து பேசியவர்களை நான் கண்டதில்லை. பின்னாட்களில் தமிழ் நேயம் என்று ஒரு இதழை நடத்துமளவுக்குத் தமிழ் மீது அவருக்குக் காதல் இருந்தது. தமிழ் என்பது வெறும் மொழியல்ல. தமிழ் என்பது ஒரு அறிவு மரபு, ஒரு சிந்தனை மரபு, ஒரு தத்துவ மரபு, விஞ்ஞானப்பூர்வ சமூக வாழ்வு என்ற புரிதல் ஞானிக்கு இருந்தது. நான் அவரிடமிருந்து இப்பார்வையைப் பெற்றேன்.
அதே சமயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்குள்ளும் தமிழ் சிந்தனை மரபில் திராவிட சிந்தனை மரபின் செல்வாக்கு இருப்பதையும் ஞானிதான் சுட்டிக்காட்டினார். ”இந்தியப் பண்பாடு என்பது கீழ்க்கட்டுமானம் முழுக்க திராவிட நாகரிகத்தாலும் மேல் கட்டுமானம் முழுக்க ஆரிய நாகரிகத்தாலும் ஆனது” என ஞானி அடிக்கடி சொல்வார்.
இன்று அவை ஒன்றுடன் ஒன்று முயங்கி எது எந்நாகரிகத்தாலானது எனப் பிரித்தறிய முடியாதவகையில் ஒன்று கலந்திருக்கிறது. அவ்வகையில் இந்திய தேசியத்தைக் கைவிடாத ஒருவனாகவும் நான் மாற ஞானிதான் காரணம். இப்படியாக என் சிந்தனை முறையை ஆழமாகப் பாதித்தவர் கோவை ஞானிதான். தன் சொற்களால் தன் அண்மையால் தன் மௌனத்தால் எப்போதும் என்னுள் நிறைந்திருப்பவர்.
//கலை, இலக்கியம், தத்துவம், அரசியல் சித்தாந்தம் ஆகிய துறைகளில் தனது தனித்துவமான சிந்தனைகளால் ஆழமானத் தாக்கங்களைச் செலுத்தியவர். தமிழ்ச் சமூகம் கண்ட நவீன ஆளுமைகளில் முதன்மையானவர். தமிழ் அறிவியங்கியலை நவீனப்படுத்தியவர். தமிழ் என்ற மொழியே நமது மெய்யியல் என்று போதித்தவர். ஒப்பாரற்ற சிந்தனைப் பள்ளியாய் இருந்து, பேராளுமைகளை உருவாக்கிய பேராசான். ஞானி தமிழின் அசலான சிந்தனையாளர்களில் ஒருவர் – கோவை ஞானிக்கான இரங்கல் செய்தியில் குறிப்பிட்டது.//
நீங்கள் தத்துவார்த்தமான கவிதைகள் அதிகமாக எழுதி வருகிறீர்கள் என்று சொல்லலாமா?
தத்துவத்தின் மீது எனக்கு ஆர்வமுண்டு. என்னைப் பாதித்த துறைகளில் தத்துவமும் ஒன்று. ஆனால் அடிப்படையில் நான் கலைஞன். முன்பே சொன்னது போல் கலை என்பது தத்துவதிலிருந்து விலகிய தனித்துவமான அறிதல் முறை.
தத்துவவாதி ஒருவன் கவிஞனாகவும், கவிஞன் ஒருவன் தத்துவவாதியாகவும் இயங்குவதற்கு வாய்ப்புண்டு. வரலாற்றிலும் பல ஆளுமைகள் இருக்கிறார்கள். நான் நீட்சேவை வியந்துகொண்டாட அதுவே காரணம். என்றாலும் ஒரு கறாரான அர்த்தத்தில் நான் ஒரு தத்துவவாதி அல்ல. ஒரு எளிய தத்துவ ஆர்வலன். என் கலைக்கான மூலப்பொருட்களைத் தத்துவத்திலிருந்து தேடுபவன் என்றளவில் மட்டுமே சொல்ல முடியும்.
என் கவிதைகள் அனைத்தும் முழுமையான தத்துவக் கவிதைகளும் அல்ல. தத்துவத்தின் ஒரு சாரத்தை ஒரு பண்பைக் கவிதைக்குள் கொண்டு வரமுடியுமாவென முயல்கிறேன். கவிதைக்குள் நிகழச்சாத்தியமான தர்க்கத்தின் ஒழுங்குகள் வழியே தத்துவார்த்தமான ஒரு இடத்திற்குக் கவிதையை உருட்டிக்கொண்டு போகவியலுமாவென முயற்சித்துப் பார்க்கிறேன். சில கவிதைகளில் அது வெற்றிகரமாக நடந்திருக்கிறது. சில கவிதைகளில் அது முடியாமலும் போயிருக்கிறது என்பதை அவதானித்திருக்கிறேன்.
பேரறிவின் சாத்தான்
ஒரு தேவகுமாரனின் தோற்றம் உடையவன்
தொலைதூரத்தில் ஒளிரும்
அவன் குரல் கேட்டு
நீங்கள் அவனை நோக்கி
முதல் அடியை எடுத்து வைக்கையில்
வாழ்வு
உங்களுக்கு எதிர்த்திசையில்
பயணிக்கத் துவங்குகிறது
திரும்பவியலா தூரம்
வந்ததும்தான் புரிகிறது
உங்கள் பயணத்தின்
திகில் நிறைந்த புதிர்மை
உங்கள் வீடு நுழையவியலா
இறந்த காலத்தில் புதைந்துபோனது
போக வேண்டிய தூரமோ
முன்னிலும் அதிகமாகத் தெரிகிறது
ஆனால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை
மிகத் தாமதமாகவே உணர்கிறீர்கள்
சில விஷயங்களைக் கற்றுக் கொள்ளாதிருப்பது
ஞானம்
- இளங்கோ கிருஷ்ணன்
பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் நூல் அன்றாடங்களின் பகடியாகவும் துயரமாகவும், காயசண்டிகை பின் நவீன வாழ்வின் மன நிலையையும் பேசுகின்றன. வியனுலகு வதியும் பெருமலர் முந்தைய தொகுப்பு போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு வந்துள்ளது. ஒரு நூல் போல் மற்றது இல்லை. இது திட்டமிட்டு நடக்கிறதா?
ஆம், திட்டமிட்டுதான் நடக்கிறது. காயசண்டிகை தொகுப்பு வந்தபோது அது ஒரு பௌத்த நூல் என்பதைப் போன்ற விமர்சனங்கள் வந்தன. அந்த நூலில் சமண பௌத்த சமயத்திற்கு ஆதரவான கவிதைகள் உண்டு என்றாலும், எனக்கு அது நெருடலாக இருந்தது. அப்படியாக ஒற்றைப்புள்ளியில் அடையாளப்படுவதை நான் விரும்பவில்லை.
எனவே, அடுத்தத் தொகுப்பான பட்சியின் சரிதம் நூலில் சைவ மரபுக் கவிதைகளைக் கொண்டு வந்தேன்.
பஷீர் தொகுப்பு முந்தைய இரு தொகுப்புகளின் சொல்லல் முறையிலிருந்து வேறுபட்டது. முன்னிரு தொகுப்புகளிலிருந்த தீவிரமான அரசியல் மன நிலையும் மொழியும் அதில் இல்லை. நான் அத்தொகுப்பு அப்படித்தான் வரவேண்டுமென நினைத்தேன்.
ஒரு கவிதை என்பது எது குறித்தும் பேசுவதற்கான சுதந்திரமுடையது என்று நம்ப விரும்பினேன். மிகப்பெரிய தத்துவ விசாரங்களை, வரலாற்றுப் பிரச்சனைகளை, சமூக சிக்கல்களைக் கவிதை பேச வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு குட்டிப்பெண் மேசை விரிப்பை இழுப்பதைப் பற்றிய சித்திரம் ஒன்றையும் ஒரு காபியில் சர்க்கரைக் கட்டி கரைவதைப் பற்றிய சித்திரம் ஒன்றையும் ஒரு கவிதை பேசமுடியும். இப்படியாக ஏதுமற்றவைகூட கவிதை பேசலாமெனத் தோன்றியது. அதை அத்தொகுப்பில் செய்து பார்த்தேன்.
மொழியும் அடர்த்தியும் தீவிரமும் கொண்டது என்பதிலிருந்து விலகி எளிமையான மொழி என்பதாக வைத்துக்கொண்டேன். இன்று யோசிக்கும்போது அதைச் செய்திருக்கவேண்டாமெனத் தோன்றுகிறது. என் கவிதைகளுக்கு ஒரு மேலோட்டத் தன்மையை அது உருவாக்கிக் கொடுத்தது என்று நினைக்கிறேன்.
பின்பு, வந்த வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பிலும் இனி வரவிருக்கும் தொகுப்பிலும் இலகுவான மொழி கொண்ட கவிதைகள் இருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் இப்படியான கவிதைகளை எழுதும் எண்ணமில்லை. நான் மீண்டும் தீவிரத்திற்கும் புதிர்மைக்கும் அடர்த்திக்கும் செல்ல விரும்புகிறேன்.
வியனுலகு வதியும் பெருமலர் நூலில் சொல்விளையாட்டுகள் அதிகம் இருந்தது, இந்த நூல் உங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாமா? இந்த நூலைப் பற்றி உங்களது அனுபவங்களைச் சொல்லுங்கள்.
வியனுலகு வதியும் பெருமலர் நூல் சொல்விளையாட்டுகள் அதிகமுள்ள நூல்தான். அதே சமயம் அச்சொல் விளையாட்டுகளால் அடைய சாத்தியமான கவித்துவமான தருணங்களை அவை அடையாளம் காட்டுகின்றன என நம்புகிறேன்.
நம்முடைய மரபு இலக்கியங்களில் சிற்றிலக்கியங்களுக்கு ஒரு தனித்துவமான இடமுண்டு. அதன் பிரதான அம்சங்களில் ஒன்று மொழி விளையாட்டு அல்லது அணி விளையாட்டு. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ் மரபு இனி அடுத்து என்னவென்று யோசிக்கும்போது சொல் விளையாட்டில் இறங்கியது.
96 வகை சிற்றிலக்கியங்களிலும் பயில்வது மொழி விளையாட்டு என்னும் உத்தியே. நான் நவீன மொழியில் மொழிவிளையாட்டுகள் செய்துபார்க்க விரும்பினேன். சொல்லப்போனால் மொழிவிளையாட்டுகள் மீது எனக்குப் பெரும் காதல் உண்டு.
‘வாயின் சிவப்பை விழி வாங்க மலர்க்கண் வெளுப்பை இதழ் வாங்க’ என்று கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டான் சொல்லும்போது அதில் இயங்கும் மொழி விளையாட்டு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இப்படியொன்றை நவீன தமிழில் செய்துபார்த்தால் என்னவென்ற தோன்றுகிறது.
கவிதை என்பது வெறும் மொழி விளையாட்டு என்பதல்ல என்பதை நான் அறிவேன். மேலும் மொழி விளையாட்டுக்கு இங்கு இளக்காரமான பார்வையுண்டு என்பதையும் அதனாலேயே சிற்றிலக்கியங்கள் தம் கவித்துவத்தில் குறைவு பட்டவையாக மதிக்கப்படுவதையும் நான் அறிவேன்.
ஆனால் மொழி விளையாட்டுகள் வழியாக கவிதையைத் தீண்டிப்பார்க்கும் இந்த ஆட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த நூலை வாசித்த சிலர் இம்மொழிவிளையாட்டை குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு கண்டன கட்டுரைகூட வந்தது. நான் அவற்றை ரசிக்கிறேன், அது அவர்கள் பார்வை. ஒரு விரிவான தளத்தில் கவிதைக்குள் எல்லாவற்றுக்கும் இடமுண்டு என நம்புகிறேன்.
உங்களுடைய கவிதைகளில் அதிகம் Inter textuality பயன்படுத்துகிறீர்கள். அதற்கான சூழலோ பிரதியோ இல்லாமல் படிக்கும்போது அவை புரியாமல் போய்விடுகின்றன. கவிதைகளுக்கு இதுபோன்ற வித்தியாசமான உத்திகள் தேவைப்படுகிறதா?
உண்மையில் இதெல்லாம் ஒரு விமர்சகன் பொருட்படுத்தவேண்டியவை. ஒரு படைப்பாளியாக, கவிஞனாக என் பிரதிகளில் ஊடிழை பிரதிகள் (Inter textuality) தொழிற்படுகிறதா என்பதை நான் பொருட்படுத்துவதில்லை.
ஒரு பிரதி ஏதேனுமொருவகையில் இன்னொரு பிரதியை நினைவு படுத்துகிறது அல்லது தொடர்புறுத்துகிறது. பல சமயங்களில் இது உள்ளார்ந்து இருக்கும். சில சமயங்களில் இது வெளிப்படையாகத் தென்படும். அப்படி வெளிப்படையாகத் தென்படுவதை விமர்சகர்கள் Inter textuality என்கிறார்கள்.
என்னளவில் ஒருங்கிணைந்த சிந்தனை மனோபாவம் ஒன்றை கட்டமைக்க முயலும்போது தம்மையும் அறியாமல் Inter textuality பண்பு வந்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. மற்றபடி அதை ஓர் உத்தியாகத் திட்டமிட்டெல்லாம் நான் உருவாக்குவதில்லை.
கவிதை இசைக் குடும்பத்தைச் சேர்ந்தது. நவீன கவிதைகளில் ஓசை நயம் இல்லை என்றொரு குற்றச்சாட்டு இருந்தாலும் உங்களுடைய பெரும்பாலான கவிதைகளில் ஒரு லயம் இருக்கிறது. நவீன கவிதைகளின் இசையொழுங்கு பற்றி சொல்லுங்கள்.
நவீன கவிதைகளுக்கு அல்லது புதுக்கவிதைகளுக்கு ஓசை நயமில்லை என்பது பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. உண்மையில் நவீன கவிதைகளுக்கும் ஒரு வகையான சொல் ஒழுங்கு உண்டு.
சொல்லின் இசைமையோடு தொடர்புடைய விசயம் அது. ஒரு சொல்லை நாம் சொல்லுகிறபோது அடிப்படையான ஓசை ஒழுங்கு உருவாகிறதில்லையா அதுபோலவே இரு சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக சொல்லுகிறபோது ஒருவிதமான ஓசை ஒழுங்கு உண்டாகிறது. ஒரு வரியில் நான்கு சொற்களை அடுத்தடுத்துச் சொல்லும்போது வேறொரு வகை ஓசையொழுங்கு உருவாகிறது. இது நவீன கவிதையின் அழகியல் அம்சங்களில் ஒன்று. எனவே நவீன கவிதைக்கு இசைத்தன்மை இல்லையென பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இல்லை.
மரபுக்கவிதைகளில் இருப்பதைப் போன்ற தூக்கலான ஓசை நயம் இதில் இல்லைதான். காரணம் மரபுக்கவிதை பாடுவதற்கான மனோபாவத்துடன் எழுதப்படுவது, அதனால் வரையறுக்கப்பட்ட ஓசையொழுங்குகள் உள்ளன. ஆனால், நவீன கவிதைகளுக்குப் பாடுவதற்கான தேவையில்லை. அதனால்தான் அடிப்படையான ஓசையொழுங்கு மட்டுமுள்ளது. என்னுடைய கவிதைகளில் இயங்கும் இசையொழுங்கு நான் திட்டமிட்டு உருவாக்குவதல்ல. என்னுடைய மரபான இலக்கியப் பயிற்சியினாலோ, என் அக அமைப்பினாலோ அதுவாக உருவாகி வருகிறது என்று நினைக்கிறேன்.
நவீன தமிழ் இலக்கியம் மேற்கத்திய இலக்கியங்களை அதிகம் கொண்டாடுகிறதா?
நவீன தொழில் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமம் ஆகிவிட்டது என்கிறோம். அரசியல் பொருளாதார உலக மயமாக்கல் என்பது நம்மிடையே வந்து சேர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. உலக இலக்கியம் என்ற கலைச்சொல் உருவாகி இரு நூறு ஆண்டுகளாகிறது. இப்படியான சூழலில் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு இலக்கியம் மொழிபெயர்க்கப்படுவது என்பது தவிர்க்க இயலாதது.
இது ஒருவகை Pan World Literary Canon எனப்படும் ஒட்டுமொத்த உலக இலக்கியப் பெருந்திரட்டு என்பதை நோக்கிச் செல்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
கடந்த 300 வருடங்களில் இவ்வுலகை மேலைச் சிந்தனை மரபுதான் உலக அரங்கில் செல்வாக்குச் செலுத்தி வருகிறது என்கிறபோது அதன் தாக்கம் கூடுதலாக இருப்பது இயல்புதான். எனவே இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
அதேசமயம் இன்று உலக அரங்கில் மத்திய கிழக்கின் அரேபிய மற்றும் சீன இலக்கியங்கள் பொருட்படுத்தி வாசிக்கப்படுவதைக் கவனிக்கவேண்டும். தொண்ணூறுகளில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திற்கும் கறுப்பிலக்கியத்திற்கும் இருந்த பெரும் வரவேற்பையும் நாம் குறிப்பிட வேண்டும். இவையெல்லாம் உலகச் சூழலைச் செல்வாக்குச் செலுத்திய, செலுத்தும் பிற பண்பாடுகள். நம்முடைய இலக்கியங்களை இப்படி சர்வதேச அரங்குகளுக்குள் அழைத்துச் செல்வதற்கான வழிமுறைகள் என்னென்ன எனத் தேட வேண்டும் அதுவே சரி. இப்படி மேற்கை இங்கே கொண்டு வந்து கொண்டு வந்து கொட்டுகிறார்களே என அங்கலாய்ப்பதில் அர்த்தம் இல்லை. அது நிகழவே செய்யும். பள்ளமான இடம் நோக்கி வெள்ளம் பாய்வது போல், வளமற்ற நிலம் நோக்கி வளமான இலக்கிய சிந்தனை பாயவே செய்யும். அதுவே இயங்கியல். மானுடத்துக்கும் அதுதான் நல்லது.
பேபி
கவிஞர்கள்தான் மூன்றாம் உலகத்தில்
ஆக மோசமான லுச்சா பயல்கள் பேபி.
நேரில், என்கற்பனைபோல் எதுவுமே இல்லை.
நாம் மேலை இலக்கியங்களைக் கொண்டாடுவதுபோல தமிழ் இலக்கியத்தை பிற பண்பாடுகள் கொண்டாடுவதில்லையே?
உங்கள் ஆதங்கத்தில் நியாயமுள்ளது. ஆனால் ஏன் இப்படி நிகழ்கிறதென்று பார்க்க வேண்டும். நம்முடைய இலக்கியங்களை பிற பண்பாடுகளில் கவனம்பெற வைக்க தேவையான சர்வதேச அறிஞர்களை நாம் உருவாக்கவே இல்லை.
உதாரணமாக, காயத்ரி ஸ்பீவக் இருக்கிறார், அவர் சர்வதேச அரங்குகளில் செல்வாக்கு மிக்க ஒரு வங்காளி. அவரால் ஒரு மகாஸ்வேதா தேவிக்கோ அல்லது ஆஷப்பூரணா தேவிக்கோ நோபல் பரிசு வேண்டுமென குரல் கொடுக்க முடிகிறது.
நம் தமிழ் பண்பாட்டுக்கு அப்படி யாரும் இல்லை அல்லது அப்படி சர்வதேச அரங்கில் செல்வாக்கு உள்ளவர்கள் தமிழ் இலக்கியத்தின் மீது கவனமற்றவர்களாக இருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். சர்வதேச அளவில் செல்வாக்கு கொண்ட தமிழர்கள், அவர்கள் எத்துறை சார்ந்தவராய் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தின் மீது பரிவும் உலக அரங்குக்கு அதனை எடுத்துச்செல்லவேண்டிய கடப்பாடும் கொண்டவர்களாக மாற வேண்டும். அதற்கான செயல்திட்டங்களை நாம் வகுக்க வேண்டும்.
இன்னொன்று நம்முடைய நவீன இலக்கியச் சூழலுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது அவ்வளவாக இல்லை, அல்லது அறவே இல்லையெனச் சொல்லலாம். சர்வதேச அரங்கில் நம்மை எடுத்துச்செல்வதற்குப் பல்கலைக்கழகங்கள் ஒரு முக்கியமான வாகனம்.
உலகளவில் பிற மொழிகளில் அவற்றின் பல்கலைக்கழகங்கள் வழியாகவே இலக்கியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்காவில் சிற்றிதழ் மரபை வலுப்படுத்தியதே அதன் பல்கலைக்கழகங்கள்தான். பல்கலைக்கழகங்களுக்கு மாபெரும் பொறுப்பிருக்கிறது. இதனை இருதரப்பும் உணரவேண்டும்.
சர்வதேச அளவிலான விருது கமிட்டிகள் பதிப்பகங்கள் தமிழ் இலக்கியத்தைப் பொருட்படுத்தும்படியாகச் செய்வதில் தமிழுக்காக பரிந்துரைத்துப் பேசக்கூடிய சர்வதேச ஆளுமைகள் பல்கலைக்கழகங்கள் அரசு உட்பட பலருக்கும் மிக முக்கிய பங்கிருக்கிறது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இன்று சூழல்கள் மாறிவருகின்றன. தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் சர்வதேச அரங்கில் மெல்ல ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இது தொடக்கம் மட்டுமே. இப்படி ஒலிப்பதற்குமேகூட அதன் இலக்கியத் தகுதிக்கு வெளியே பல காரணங்கள் இருக்கின்றன. எப்படி இருந்தாலும் தமிழ் படைப்பாளிகள் தமிழ் எனும் தங்க வேலி கடந்து செல்வது ஒரு நல்ல விஷயம்தான். அதை நான் வரவேற்கவே செய்வேன். இது இன்னமும் அதிகமாக வேண்டும் என்பதே என் விருப்பம். விரைவில் அதற்கான சூழல் உருவாகும் என நம்புகிறேன்.
தம்ம
—
இருண்டஆழமானபள்ளத்தில்
தலைகீழாய்கவிழ்வதுபோல்
ஒருவருகை
உங்களின்மிருகத்தனத்துக்கு
சற்றும்குறைந்ததில்லை
இப்பள்ளத்தின்மிருகத்தனம்
உங்கள்ஆன்மாவின்இருளுக்கு
சற்றும்குறைந்ததல்ல
இந்தப்பள்ளத்தின்இருள்
இருட்டுஇருட்டைஉற்றுநோக்குகிறது
புரிதல்அமர்ந்திருக்கிறதுஇருட்டாய்
கற்றல்அமர்ந்திருக்கிறதுஇருட்டாய்
இருட்டுஎழுந்து
இருட்டுக்குள்செல்வதுபோல்
இருட்டைத்திறந்து
இருட்டில்நுழைவதுபோல்
ஒருவிடைபெறல்
இருண்டஆழமானபள்ளத்தில்
தலைகீழாய்கவிழ்வதுபோல்
- இளங்கோ கிருஷ்ணன்
நீள் கவிதைகள் குறித்து உங்களுடைய பார்வை என்ன?
தமிழில் நவீன கவிதைமரபு உருவான காலம் தொட்டே நீள்கவிதை அல்லது நெடுங்கவிதை எழுதும் பழக்கமுள்ளது. சி.மணி, பிரமிள், கலாப்ரியா போன்றவர்கள் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர்கள்.
தமிழில் நீள்கவிதைகள் எழுதுவதென்பது எப்படியானது என்கிற குழப்பம்தான் பலரை நீள்கவிதை எழுதவிடாமல் செய்கிறதென நினைக்கிறேன்.
உலக அரங்கில் மிகப்பெரிய கவிஞர்கள் பலரும் நீள்கவிதை எழுதியிருக்கிறார்கள். நீள்கவிதை என்பது ஒரு கவிஞனின் ஆளுமையின் வெளிப்பாடு. ஒரு கவிஞன் ஒரு சிறிய தனிக்கவிதை எழுதுவதை விடவும் நீள்கவிதை எழுதுவதில் கவிதையின் சாத்தியம் மேம்படுகிறதென கருதுகிறேன்.
ஒரு நீள் கவிதையைக் கதையாக நீட்டிச்செல்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது பெரும்பாலும் நாவல் என்ற வடிவத்தால் கலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டது.
இன்று காவியம் என்கிற பழங்கால பேரிலக்கிய வடிவத்தின் சவாலை நாவல் அதைத் தொடர்ந்து சினிமா ஆகிய கலை வடிவங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்கின்றன.
கவிதைக்குள், குறிப்பாக நீள் கவிதைக்குள் ஒரு கவிஞன் எதிர்கொள்ளவேண்டிய சவால் என்பது இக்காவியப் பண்புள்ள ஒரு கவிதையை எழுதிக்காட்டுவதுதான்.
அது பழைய காவியங்களைப் போல அல்லாததாக இருக்கவேண்டும். ஏனெனில் சினிமாவும் நாவலும் பிறந்துவிட்ட பிறகு கவிதையென்பது காவியப் பண்பை அடைய என்ன மிச்சமிருக்கிறதோ அதைத் தொட வேண்டும். அதுவே நீள்கவிதையின் உண்மையான சவால்.
தீவிர இலக்கியம் மரபார்ந்த விசயங்களை அல்லது வரலாற்றை மறுஆய்வு செய்துகொண்டிருக்கிறதா?
ஆமாம். நவீன இலக்கியம் என்பதே மரபான விசயங்களுக்கு எதிரானதுதான். மரபு தத்துவயியல், மரபு ஆன்மீகவியல், மரபு சமூகவியல் ஆகிய அனைத்துக்கும் நேரெதிரானது. மானுட விடுதலையை, சமூக விடுதலையை, அனைவரும் சமம் என்கிற சமூகக்கருத்தியலை ஆழமாக முன்வைத்து தனிமனிதவாதம், விஞ்ஞான வாதம், இயற்கை முதன்மை வாதம் ஆகியவற்றைப் பேசுவதே நவீன இலக்கியத்தின் முதன்மையான பணி.
நவீன இலக்கியத்தின் மைய விசை இதுதான். இதனோடு முரண்பட்டு உரையாட முயன்ற விசைதான் மரபார்ந்த சிந்தனைகள் மரபார்ந்த கவித்துவங்கள் மரபார்ந்த தத்துவங்கள் மரபார்ந்த பண்பாட்டுப் பழக்கங்கள் எல்லாமும்.
பிற்பாடு பின் நவீனத்துவமும் வருகிறது. பின் நவீனத்துவம் ஒருவகையில் மரபிற்கும் நவீனத்திற்கும் இடையில் ஒருவித சமரசத்தை உருவாக்க முயல்கிறது. அதன் கலையார்ந்த விளைவுகளைத் தான் நாம் உலகெங்கும் காண்கிறோம்.
பின் காலனிய பின் நவீனத்துவம் நிகழ்ந்துவிட்ட பிறகு நவீன இலக்கியத்தால் அல்லது தீவிர இலக்கியத்தால் மரபைக் கண்டுகொள்ளாமல் நகர்ந்துசெல்லமுடியாது. அதே சமயத்தில் அது மரபைக் கொண்டாடுவதுமல்ல. மரபை விமர்சிப்பது மரபில் இருக்கும் ஆக்கப்பூர்வமான பக்கங்களை எடுத்துக்கொள்வது, மரபை ஒரு பொருட்படுத்தத்தக்கத் தரப்பாக வைத்துக்கொண்டு நவீன சிந்தனைகளை மீளுருவாக்கம் அல்லது புத்துருவாக்கம் செய்வது ஆகியவை தீவிர இலக்கியத்தின் தலையாயக் கடமையெனக் கருதுகிறேன். இன்று நவீன இலக்கியம்தான் நிலைவிசை (Static Force). மரபு என்பது முயங்கு விசைதான் (Counter Force)
ஒரு படைப்பிலக்கியவாதியாக நீங்கள் இடதுசாரியா வலதுசாரியா என்பது கவிஞர் வெய்யில் உங்களிடம் முன் வைத்த கேள்வி.
இலக்கியம் என்பதே ஒரு முழுமையான அறிதல் முறை என நம்புகிறவன் நான். என்னளவில் எப்போதுமே மனித நேயச் சிந்தனைகளுக்கு மானுட ஆதரவு தத்துவங்களுக்கு ஆதரவாளன். சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் பாகுபாடுகளையும் பாரபட்சங்களையும் வெளிப்படையாகவே கண்டிப்பவன் நான். மற்றபடி ஒரு இடதுசாரி என்பவன் சமூகப் பார்வையில் வர்க்க நோக்கும், கருத்தியல் பார்வையில் பொருள்முதல் வாதமும் கொண்டவன் என்பார்கள். நான் கருத்தியல் பார்வையில் பொருள்முதல் வாதத்தைப் பிரதானமாக ஏற்றுக்கொண்டவன். அதே சமயத்தில் கருத்து முதல்வாதத்தில் ஆதரமாக இருப்பதை மறுப்பவனும் அல்ல. சமூக நோக்கில் வர்க்கப்பார்வை என்பது இன்றைய தேதியில் நம் தேசத்திற்குச் சாத்தியமற்றது என்று கருதுகிறேன். எனவே என்னையொரு அரை இடதுசாரி என்றே சொல்லமுடியும். நிச்சயமாக வலதுசாரி அல்ல. வேண்டுமானால் இடது லிபரல் என்று சொல்லலாம்.
பத்திரிகையாளர். நவீன கவிஞர், பாடலாசிரியர், இளங்கோ கிருஷ்ணன் யாராக இருக்க ஆசைப்படுகிறார்?
நான் அடிப்படையில் ஒரு எழுத்துக் கலைஞன், என் அகம் அப்படித்தான் உணர்கிறது என்கிறபோது ஒரு இலக்கியவாதி என்பதுதான் என் பிரதானமான அடையாளம். நான் அப்படித்தான் சமூகத்தின் மனதில், நினைவில் இருக்க ஆசைப்படுகிறேன். பத்திரிக்கையாளன், பாடலாசிரியன் என்பதெல்லாம் வருமானத்தின் நிமித்தம் கட்டிக்கொண்ட வேஷங்கள். ஐரோப்பிய மொழிகளைப் போல ஒரு எழுத்தாளனாக மட்டுமே வாழ்ந்து வாழ் நாளைக் கழித்துவிடமுடியுமென்ற சூழல் இங்கு உருவாகுமானால் நான் பத்திரிக்கையையும் சினிமாவையும் விட்டு ஓடி வந்துவிடுவேன். இவ்வகையிலான பொருள்வயின் தொடர்பு மட்டுமே அவற்றோடு உண்டு. என் ஆன்மாவில் என்னைக் கவிஞன் என்றே உணர்கிறேன். கவிஞன் என்றே நான் விளிக்கப்படவேண்டுமென்று நினைக்கிறேன். எப்படி ஷேக்ஸ்பியர் முப்பத்து சொச்சம் நாடகங்கள் எழுதியிருந்தாலும் அவரைக் கவிஞர் என்றே அழைக்கிறார்களோ அதுபோல.
யம கதை
யமன் சொன்னது:
வெறிகொண்ட ஆண் மந்தி
பலாக்காய்களைப் பிய்த்தெறிகிறது.
சடசடவென குளத்தில் இறங்கி
நீர்ப் பாம்புகளைப் பிடித்து
படார் படாரெனத் தரையில் அறைந்து கொல்கிறது
மரக்கிளைகளை முறித்து
புலிக்குறளைகள் மீது வீசுகிறது
மண்வாரித் தூற்றி அரற்றுகிறது
அதோ
அங்கு ஒரு குட்டிக் குரங்கு
நீலம்பாரித்து
வாய்ப்பிளந்து மரித்திருக்கிறது
நசிகேத !
-இளங்கோ கிருஷ்ணன்
இவரது நூல்கள்
காயசண்டிகை (கவிதை)
பட்சியின் சரிதம்(கவிதை)
பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் (கவிதை)
வியனுலகு வதியும் பெருமலர்(கவிதை)
மருதம் மீட்போம் (கட்டுரை)
இணைப்பு:
முகநூலில் நான் எழுதி வந்த பருந்து தொடாத வானம் கட்டுரையிலிருந்து,
ஒன்றும் ஆகிவிடாது நண்பா
சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் மிக முக்கியமான கவிஞராக இளங்கோ கிருஷ்ணனின் அறிமுகம் எதேச்சையாகத்தான் அமைந்தது. இவரது கவிதைகளை அதற்கு முன்பு பெரிதாகப் படித்திராதபோதும் அவருடைய தீர்க்கமான பேச்சு முதலில் பிடித்துப்போனது. பிறகு தான் இவரது கவிதைகளை முழுமையாக வாசிக்க ஆரம்பித்தேன். வரிகளில் காணப்படும் வசீகரமும் சரளமாகப் பின்னப்பட்ட சொற்திரட்டும் கவனிக்க வைத்தன.
பெரும்பாலான கவிதைகள் எளிய மனிதர்களின் இயல்பான வாழ்க்கைத் தளத்தைத் தொடுவதாகவும் இருந்தன. இவருடைய எல்லா பேச்சுக்களும் கவிதைப் பற்றியும் கவிதையியல் பற்றியுமே இருந்தன. இலக்கியத்தின் மீது அதீத மோகம் கொண்டவர். இவரது கவிதைப் பயணிக்கும் பாதையைப் பற்றி எந்த முன்முடிபையும் எடுக்க முடியாதபடி கவிதைகள் வெவ்வேறு பாணியில் வெவ்வேறு தளங்களில் பயணிக்கின்றன. இவரது வசனக் கவிதைகளைவிட எள்ளல் கவிதைகள் அதிகம் கவர ஆரம்பித்தன.
குறியீடு படிமம், காய்ச்சிய சொற்கள், கவிதையின் தளம், அதனுடைய கட்டுமானம், கவிதை சொல்லும் நயம், சூட்சமமான உள்ளடக்கம், கவித்துவம், சம்பவங்களோடு விரியும் அனுபவங்கள், கவிதையை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் தொனி, நுண்ணிய அனுமானங்கள், நுட்பமான பார்வை அதை தடங்களின்றி எழுதிக் காட்டும் மனப்பாங்கு ஆகியவை இளங்கோவின் கவிதைகளில் ஆச்சர்யமூட்டுபவை.
தனிப்பட்ட முறையில் பள்ளிகொண்டேசுவரம் போன்ற கவிதைகளுக்கு அர்த்தம் சொல்லுங்கள் என்று நச்சரித்துமிருக்கிறேன். அர்த்தம் சொல்பவர்களுக்குப் பத்தாயிரம் பொற்காசுகள் தரப்படுமென்ற செய்தியை முக நூலில் பதிவிட இறுதியில் நானே சொல்லிவிடுகிறேன் அதை என்னிடமே கொடுத்துவிடுங்களென்றார்.
கார் கதவைத் திறந்துவிட்டு
கேட்கிறான் புத்தன்
போலாமா மேடம்.
என்பதைத் தவிர மற்ற வரிகளுக்கான அர்த்தத்தைத் தேடி அவரிடமே கேட்க நேர்ந்தது. அந்தளவுக்குக் கவிதைகளை அடுக்கடுக்காக வரலாற்றையும் புராணக்கதைகளையும் உள்ளடக்கிய கவிதை, அது உடைபடும் தருணத்தைக் கண்டறிவது சவாலாக இருந்தது.
உளவியல் பார்வையோடு கவிதைகளுக்குச் சொல்லும் விளக்கங்களை அதற்கான பின்னணிகளோடு சேர்த்தே விளங்க வைத்திடுவார். . அவருடைய படைப்புகளில் வேறுபட்ட அக,புறவியல் பண்புகளோடு பல்வேறு கோணங்களில் ஆழமான கவிமனம் நிரம்பித் ததும்பும் கணங்களையும் கண்டிருக்கிறேன்.
இளங்கோவின் கவிதைச் சூழல் எல்லைகளைக் கடந்து தனித்துவமான கவிமொழியோடு நிறைய இண்டர்டெக்ஸ்டுவல் மேலெழுந்து நிற்கும். நான் அதிகம் ரசித்தது இவரது மொழியின் வீச்சு. இனிமையான, கூர்மையான, தெளிவான, மயக்கமான மொழி நடை கைவரப்பெற்றவர்.
கவிதை, காதல் சார்ந்த கசப்புகள், கோபங்கள், சோர்வுகள், அவமதிப்புகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள் எவற்றை எழுதினாலும் தன் எழுத்தின் மீதான அதீத நம்பிக்கை கொண்டவர்.
கண்களை மூடி மூடித் திறக்கும் பூனைக் குட்டியைப் போல் எனக்குக் கைவந்தும் கைவராமல் மொழி நடை பிடிபடாமல் போனபோது இது தான் கவிதை என்று சுட்டிக்காட்டிய பல்வேறு தருணங்களிலிருந்து அதிகம் கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போதுதான் நவீனம் அதிகமாகப் பிடிபட தொடங்கியது என்பதை நேர்மையாகச் சொல்வதில் தவறில்லை.
வரலாறு, தத்துவம், கலை, இலக்கியம், சமூகம், என தனது வட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறார் இளங்கோ. பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் தொகுப்புதான் முதலில் நான் வாசிக்கத் தொடங்குகிறேன். பெரும்பாலும் இவருடைய கவிதைகள் ஒன்று விடாமல் படித்திருக்கிறேன். பிடித்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. .
இன்று காலை கழிப்பறையில் ஒரு கரப்பானுக்கு ஜலசமாதி தந்தேன் என்பது போன்ற வரிகள் ஈர்த்தன.
மேசையில் இருந்து தவறி விழுந்த நாளொன்றில் தலையில் பலத்த அடிபட்டுப் பைத்தியம் பிடித்துவிட்டது என் பேனாவுக்கு
என்று பேனாவைப் பற்றிய கவிதையின் இறுதியில் பேனா எனக்கொரு கொலை மிரட்டல் விடுத்தது என்ற எள்ளலோடு முடியும் இந்தக் கவிதை. தொடக்கக் காலத்தில் இருந்த எள்ளல் தன்மை மறைந்து சமீபத்தியக் கவிதைகள் முதிர்ச்சியடைந்து பொறுப்புடன் வருவது போல் தோன்றுகிறது.
கடவுளைத் தேடிச் செல்லும் வழியில் ஆக மோசமான கவிஞனைச் சந்தித்தேன் சொற்களை ஒவ்வொன்றாய் துள்ளத் துடிக்கச் சிதைத்துக் கொண்டிருந்தான் உன் மொழியில் ஏன் இத்தனை வன்முறை அவை அலறுவது கேட்கவில்லையா என்றேன் சொல்லுக்கும் பொருளுக்குமான எதேச்சையற்ற உயிர் தொடர்பை நறுக்கிப் பார்த்திருக்கிறாயா என, நான் அவ்வளவு மோசமான கவியல்ல என்ற கவிதையில் வருவது போல் எனக்கும் அடிக்கடி நிறைய பேரிடம் கேட்கத் தோன்றியிருக்கிறது. ஆனால் கேட்டதில்லை என்றாலும் என்னையும் அடிக்கடி இந்தக் கவிதை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
பின்நவீன வாழ்வின் மீதான மனநிலையைப் பேசும் கவிதைகளாக வந்திருந்தது. காய சண்டிகை, பட்சியின் சரிதம். தன் சுயத்தை. வெளிக்காட்டிக்கொண்டே தன் முகத்தையே கோமாளி முகம் போல் ஆக்கிக்கொண்டு கவிதைத் தீக்குச்சியைக் கொளுத்துபவை இதிலுள்ள கவிதைகள் என்கிறார்.
குழந்தைக்கு இப்போது டிரெண்டிங்கில் உள்ள புதிய உடைகளை வாங்கித் தருகிறோம், புதிக பைக்கை வாங்கித்தருகிறோம், ஆனால் கவிதை என்று வந்தால் மட்டும் பழையதையே பயிற்றுவிப்போம் என்றால் என்ன பொருள்? என்றொரு நேர்காணலில் சொல்லியிருப்பார். அப்படியே நவீன, பின் நவீனத்துவ கவிதைகள் பற்றிய தீவிர உரையாடலை முன்னிறுத்த முனைந்துகொண்டிருக்கிறார். தீவிர இலக்கிய வட்டத்திலிருந்துகொண்டு பேரிலக்கிய உரையாடல்களைத் தொடங்கவேண்டுமென்ற ஆவலில் அறிதல் கலை இலக்கியவெளியை இருவரும் தொடங்கினோம். அதன் வழியாகப் உலகளாவிய பேரிலக்கியங்கள் பற்றிய கலந்துரையாடல் கூட்டங்கள் தமிழின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளைக் கொண்டு நடத்தினோம். அதற்கான வரவேற்பு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.
மரணத்தின் பாடல்களில் வரும் உதிர்தல் கவிதை வாய் பிளந்து நிற்கவைத்தது
உதிர்தல்
இவ்வளவு பெரிய பூமியில்
ஒரு பூ உதிர்ந்து
என்ன ஆகிவிடப் போகிறது
நண்பா என்றான்
இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில்
இந்தப் பூமியே
உதிர்ந்தாலும் ஒன்றும்
ஆகிவிடாது நண்பா என்கிறான்.
இவரது ஒவ்வொரு சொல்லிலும் செல்லிலும் செயலிலும் நவீனத்தை உணர்த்திக்கொண்டே நகர்ந்துகொண்டிருக்கிறார் இளங்கோ. தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை நிலை நிறுத்திக்கொண்டு நவீன சாலையில் வேக நடைபோடுங்கள் நண்பா என்று சொல்லத் தோன்றுகிறது.