1)
அந்த வளாகத்தைச்
சுற்றி வளைத்துவிட்டார்கள்
நேற்று முதன் முதலில்
இடது பக்கச் சுவர்களை உடைத்தார்கள்
பாதையோர மரக்கிளைகள் முறிந்து
இலைகள், பூக்கள் நசுங்கின
நீள்வட்ட சக்கர வாகனம் உருண்டு சென்றது
மேற்கூரைகளை இடிக்க
கடகட சத்தத்துடன் தூண்கள் சரிந்தன
சிமிண்டுக் குவியல்
தூசியைக் கிளப்பியது
உடைத்து நொறுக்கிய
சுண்ணாம்புச் சில்லுகளை
வண்டியில் அள்ளிப்போட்டுச் சென்றார்கள்
இன்று காலை
இங்கு புதிதாக முளைத்திருக்கிறது புற்தரை
இங்கு ஒரு கட்டடம் இருந்தது
அது இருந்த இடமிருக்கிறது
2)
நான் தனியாக இருக்கிறேன்
உன்னை நினைத்துக்கொண்டு
நீயில்லாத இடங்கள் சலிப்பாக இருக்கின்றன
நேற்று நன்றாகச் சிரித்துப் பேசினோம்
சிறு உரசல்தான் என்றாலும்
நீ நகர்ந்ததும்
நீயில்லாததை உணர்கிறேன்
சாலைகளில்
உன்னை நினைத்துக்கொண்டே
நடந்து செல்கிறேன்
இன்னும்
தனியாகத்தான் இருக்கிறேன்
உன்னை நினைத்துக்கொண்டே