1
வெள்ளிக்கிழமை மதியம்
தனிமைப் பொழுது மெல்ல
ஓய்வு கேட்டு மந்த நடைபோடுகிறது
உடலற்ற கபாலத்தைத் திருகி
ஒளிச்சிதறல்களுக்கிடையே
இழுத்துப்பிடித்து வேலையை முடிக்கிறேன்
வாரத்தின் ஐந்து நாட்களும்
ஓநாய் தினங்களாகி
இருபத்து நாலுங்கீழ் ஏழு பொழுதும்
ஒளியின் முடிச்சிக்குள் புதைகிறது விழிகள்
நடு இரவு உடைந்துபோகிறது
பகலை மீண்டும் மிதித்து
கணிப்பொறியில் சிக்கிச் சிதறி
உதிரவெளியெங்கும் விரல்களில் சுருக்கம்
கண்ணாடிக்குள் ஆடும் பொம்மையாய்
எஞ்சியிருக்கும் தலை எதற்கென்று தெரியாமலே ஆடுகிறது
ஞாயிறு மதியத்தில் பிரியாதத் தூக்கத்துடன்
யானைக்குப் பிறந்த வாரயிறுதியில்
காலம் குரைத்து உருளுகிறது
எந்த வேலையும் செய்யாமல்
எந்தச் சொற்களையும் கேட்காமல்
எந்தக் கருவியையும் நோண்டாமல்
படுக்கையறையில்
சும்மா இரு, சும்மா இருவென
உள்வெளி ஓயாமல் அரற்றி
ஒரு கணத்தில் மடிகிறது
2.
தினமும் அதிகாலை
ஆற்றைப் பார்க்கப் போய்விடுகிறேன்
தண்ணீர் என் கண்களை நனைக்காமல்
அந்த நாளைக் கடப்பது கடினமாக இருக்கிறது
எப்போதும் நீர் ஓடுவதில்லை
ஆற்றில் நீரில்லையெனில்
மனம் காய்ந்துபோகிறது
கருமேகங்கள் காற்றில் உருகிக் கரைந்து
மழை பெய்து நின்றவுடன்
ஆறு நிரம்பி ஓடுகிறது
கூட்டம் கூட்டமாய் மீன்கள்
மென்னுடலைச் சிலுப்பித்
துள்ளி விளையாடுகின்றன
நானும் நீர்த்துளியாகிறேன்
வெயில் அதிகமாகும்போது
மேகம் மீண்டும் நீரை உறிஞ்சிகொள்கிறது
ஆற்றுக்குள் துள்ளியோடிய மீன்கள்
மூக்கை மட்டும் வெளியில் நீட்டி
பறந்து போகும் குருவிகளை எட்டிப்பார்க்கின்றன
இன்று ஆற்றுக்குள் ஈரமில்லை
மணல் மட்டும் திரிகிறது
மணல் தன் படுக்கையை விரித்திருக்கிறது
ஆற்றில் கரை விளிப்புகள் சரிகின்றன
இங்கிருந்த மீன்களையெல்லாம்
எங்கே அனுப்பியது
ஈரமில்லாத ஆறு
3.
நடைபயிற்சியை முடித்துவிட்டு
பூங்காவின் நடைபாதையின் வழியாகத்
திரும்பி வந்துகொண்டிருந்தேன்.
மழை தூறத் தொடங்கியது
ஓரிரு மழைத் துளிகள் தலையில்
தெறித்து விழுந்தன
ஒதுங்குமிடம் தேடி ஓடிச்சென்று
சாரலடிக்காத இடத்தில்
ஒதுங்கி நின்றுகொண்டேன்.
மழையின் வெளியில்
குடிகொண்டிருந்தது மௌனம்
சாலையில் நீர்த்துளிகள் தத்தளிக்க
ரௌடி மழை கொட்டத் தொடங்கியது
இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.