கடல் நாகங்கள் பொன்னி – கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை
அயலகக் கவிதைகளைப் பொறுத்தமட்டில் அதன் வாசிப்பு என்பது சன்னலுக்குள்ளிருந்து வெளியில் நடக்கும் சம்பவங்களை வேடிக்கைப் பார்ப்பது போல் தான் கவனிக்கப்படுகின்றன. நானோ
சன்னலுக்கு வெளியே நிகழும் சம்பவமாய் இருக்கிறேன். அப்படியானதொரு அடுக்குமாடியின் சன்னலை விட்டு கீழிறிங்கும் நாகமொன்று வளைந்து நெளிந்து இந்த நகரத்துக்குள் புகுந்து வெளியில் வருகிறது. இந்த நாகம் மொழிக்குள் அதீத ஆர்வத்துடன் நுழைந்து ஓடினாலும் சில நேரங்களில் திக்கற்றுப்போயும் திரிந்துகொண்டிருக்கிறது. என் அகந்தையையும் ஈஸ்ட்ரோஜனையும் தின்றுகொண்டிருந்த நாகம் மெல்ல இறங்கி வெளியில் சென்றுகொண்டிருக்கிறது.
புலம்பெயர் திணையைக் காதலிக்கும் பொன்னி சிரித்துக்கொண்டே துள்ளித் திரிந்து கவிதைகளுக்குள் கால் நீட்டி அமர்ந்திருக்கிறாள். நிலவுப் படகிலேறி தேசம் தாண்டி வந்தவள் இதுவரை தான் சேகரித்தவற்றை நெஞ்சம் நெகிழ இக்கவிதைகளின் வழி ரேகையைப் பதித்திருக்கிறாள். தனக்கான உயிர்ப்பைத் தானே தேடித் தின்று கொண்டிருக்கிறாள்.
கரையோரம் நின்று வெற்றுவெளியில் அடிவானத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் கடலைப் பார்ப்பது அவ்வளவு பிடித்திருக்கிறது. கடலும் வானமும் தொட்டும் தொடாமலும் இருப்பதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மனம் தானாக விரிந்து குளிர்வதை உணர முடிகிறது. அந்தக் குளுமையை எழுதுகையில் முட்டி முட்டி மோதி கரைகளுக்குக் குதிரைகளையோட்டி வரும் அலைகளின் முதுகிலேறும் வீரனைப் போல் ஏறி அமர்ந்துகொள்கிறேன். அதே மனநிலையில்தான் சிங்கப்பூரின் சமூக அசைவுகளையும் இயல்புகளையும் ஓரளவு என்னுடைய கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறேன். இன்னமும் சொல்லாதவை ஏராளம், எங்கும் பதியப்படாதவை வலிமை இழந்துவிடாமல் இன்னும் மிச்சமிருக்கின்றன.
என் கவிதைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை என்னால் உணரமுடிகிறது. அடுத்தக் கட்ட நகர்வு என்று சொல்லமுடியாவிட்டாலும் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து கால்மாட்டில் நிற்பது போன்ற ஓர் எளிமையான நகர்தல் என்று நினைக்கிறேன்.
வெளியீடு: சால்ட் பதிப்பகம்