இகவடை பரவடை – குறுங்காவியம் – ஷங்கர் ராமசுப்ரமணியன்
-இன்பா
//அவளுக்கு
இதே சேயாற்றின்
இன்னொரு கரையான
சிந்து பூந்துறையில்
சிதையூட்டி
விடைகொடுத்தேன்
அப்போது நதி
காட்டியது எனக்குக் கருப்பு//
**
//பானையைத் தோளில் தாங்கி
அம்மாவைச் சுற்றும்போது
ஒரு சுற்றுக்கு
ஒரு துளை இட்டார்கள்
பானை அழுது உகுத்தநீர்
எனக்கு முதல் நீராகக் குளிர்ந்தது
வனைந்தவை எல்லாம்
போட்டு உடைக்கப்படுகிறது//
**
//குச்சிகால்கள்
கூம்பிச் சரிந்த முலைகள்
கோடாய் மாறிய யோனி
எலும்பு துருத்தி
ரத்தம் நீங்கிய வெளிர்கண்களுடன்
தன் கோட்டைக்குள் சென்று
அழுத்தி மூடிக்கொண்டாள்
என் அம்மா //
அவள் சாம்பல் என
வெள்ளைத்துணியில் கட்டிக்கொடுத்த
கலயத்தில் இல்லை
என் அம்மா//
.
பாரதிதாசன் இருண்ட வீடு, குடும்ப விளக்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட பதினான்கு காவியங்கள் எழுதியிருக்கிறார். கண்ணதாசனின் மாங்கனி, வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சிக் காவியம், சிங்கப்பூரில் பிச்சினிக்காட்டாரின் அதிகாலைப் பல்லவன், வெளிச்ச தேவதை என்று பல்வேறு காவியங்கள் புதுக்கவிதையில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் நிறைய காவியங்கள் அல்லது நீள் கவிதைகள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. காவியக் கவிதைகள் உலகெங்கிலும் உள்ள மக்களால் தங்கள் மரபுகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படியானவை பெரும்பாலும் புகழ்பெற்ற செயல்கள் வீரமாகவோ சோகமாகவோ வெளிப்பட்டிருக்கின்றன. கில்காமேஷ், ஹோமரின் இலியட் மற்றும் ஒடிஸி போன்றவை காவியத்தின் முதன்மையான உதாரணங்கள். காப்பியங்கள் தான் பெரும்பாலும் பெரும் மாற்றத்தையும் பேரலையையும் உண்டாக்குவதாக இருக்கின்றன. ஆங்கில இலக்கிய உலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற டி.எஸ்.எலியட்டின் வேஸ்ட் லாண்ட் -பாழ்நிலம் காவியத்திற்கான ஒரு புகழ்பெற்ற நீள் கவிதை. நவீன கவிதைமொழியில் எழுதப்பட்ட குறுங்காவியம் அல்லது நீள் கவிதைகள் மலையாளத்தில் பி.ரவிக்குமாரின் நசிகேதன், தமிழில் பிரமிளின் தெற்குவாசல், எம்.டி.எம் மாத்ரி, கலாப்ரியாவின் எட்டயபுரம், விக்கிரமாதித்யனின் நவபாஷாணம், போன்ற நீள் கவிதைகள் குறுங்காவியத்துக்கான முயற்சிகள். ஷங்கர் ராமசுப்ரமணியனின் இகவடை பரவடை அவ்வரிசையின் இன்னொரு வரவு.
தமிழ் நவீன கவிதைப் பரப்பில் மிக முக்கியமான கவிஞராக அறியப்படும் ஷங்கர் தனது கவிதையின் வழியாக உறவுகளையும் பிரியத்தையும் அன்பையும் நம்பிக்கையையும் வாசிப்பின் வழியாக தான் அடைந்தவற்றை இறுக்கிப் பிழிந்த சாறாக இந்த நூலில் மூலமாக இறக்கி வைத்துள்ளார் என்று சொல்லலாம். கலை இலக்கியத்தோடு அர்ப்பணிப்புடன் இயங்கிவரும் ஷங்கர் தனக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் சிறுவனின் மன நிலையோடு அவருக்கும் அவருடைய அம்மாவிற்கும் அவர் சந்தித்த உறவுகளுக்குமான பிடிப்பை இந்தப் படைப்பின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம். அவருக்கே உரிய எள்ளலும் துள்ளலும் இந்த நூலிலும் ஆங்காங்கே குறுக்கே வந்து நகைக்கவும் திகைக்கவும் வைக்கின்றன. இந்தக் குறுங்காவியத்தின் உள்ளடக்கத்தின் வெளிப்பாடு ஒரு குழந்தையின் மன நிலையில் சேயாற்றின் நினைவுகளில் தொடங்குகிறது. இலக்கிய ஆளுமை நிறைந்த திருநெல்வேலி வட்டாரத்தில் தான் சுற்றித் திரிந்த ஆற்றோர நினைவுகளையும் நடந்து வந்த பாதைகளையும் மெல்ல அசைபோட்டுக்கொண்டே வாழும் இடமான சென்னையின் சித்திரங்களைத் தாங்கிய வரிகள் ஒன்றன்பின் ஒன்றாக பின்னிப் பிணைந்துகொண்டே செல்கின்றன.
இவ்வுலகைவிட்டு பரவுலகிற்கு அடைக்கலம் தேடிச்சென்ற இவரது அம்மாவின் நினைவுகள் காத்திரமாக பதிவாகியிருக்கின்றன. புற்றின் வலியில் துடிக்கும் அம்மாவைக் கவனிக்கும்போதே பாதகத்தி, தன்னை அப்படியே படம்பிடித்துச் சொல்கிறாளென அவருடைய இயல்பான விளையாட்டுத் தனத்தோடு வலியை எளிமையாக கடந்துசெல்ல வைக்கிறார்.
இந்தக் குறுங்காவியத்தின் வழியாக ஷங்கரின் இலக்கிய வாசிப்பின் எல்லை பரந்து விரிந்திருப்பதைக் காண முடிகிறது. புதுமைப்பித்தனை விழுங்கிவிட்டது கபாடபுரம் என்று தொடங்கி, தான் கண்டறிந்த படைப்பாளர்களைக் கவிதைளில் நடந்து செல்ல வைத்திருக்கிறார். தெப்பக்குளத்தில் அதிர அதிர இறங்கும் மௌனி, கு.பா.ரா, பிச்சமூர்த்தி, லா.ச.ரா, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ந.முத்துசாமி, நா.முத்துக்குமாரென பலரும் இந்த நூலில் குடிவந்திருக்கிறார்கள். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தைத் தொடங்கிவைத்த வ.வேசு ஐயர் கல்யாண தீர்த்தத்தில் மூழ்கி இறந்து போனதைக் குறிப்பிடும்போது சேரன் மகாதேவியில் பெரியார் தொடுத்த கேள்விக்குப் பதில் சொல்லாத ஐயர் தன்னுடைய பெண் மூழ்கிய போது காப்பாற்றச் சென்றவர் திரும்பி வராமல் ஆற்றோடு போனதை ஐயர் பரிமாறியது சமபந்தியென்று போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்வது அவருடைய விமர்சன குணமும் அதில் எள்ளலும் விளையாட்டுத்தனமும் ஷங்கருக்குத் தவிர்க்க முடியாத ஒன்று.
ஒரு சில கவிதைகள் எப்போதும் வியப்பை தந்துகொண்டே இருக்கின்றன. கவிதைக்குளே ஓர் இரகசியமான மொழி இயங்கிக்கொண்டே வருகிறது. அப்படியான ஆழ் மன ரகசியங்கள் மொழியின் வழியே எதிர்பாராத சமயங்களில் வந்து விழுந்துவிடுகின்றன. வெறும் உணர்வுகள் மட்டுமே கவிதையைத் திறந்து விடுவதில்லை. கவிதைகள் கடத்தும் உணர்வுகள் இடம் பொருள் காலத்தைச் சார்ந்திருக்கின்றன. கவிஞன் உணர்வுகளை கடத்தும் அதே மன நிலையில் வாசகன் உள்வாங்க வேண்டியிருக்கிறது. காலமும் சூழலும் மாறும்போது உணர்வுகளின் வலிமை குறைந்து மொழி சற்றே தளர்ந்து போய்விட வாய்ப்பிருக்கிறது. காட்சிகளை முன்னிருத்திக் கவிதையை நகர்த்திச் செல்வது ஒரு வகையான கவிதைப் போக்காகச் சொல்லப்படுகிறது. எளிய மொழி நடையில் உறவினைக் காட்சிப்படுத்தி, பேசித் தீரா உணர்வுகளை அதன் கதைப் பரப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்கிறார்.
இகவடை பரவடை என்பதற்கான பொருளைச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இகம் -இவ்வுலகம், பரம்பொருளில் வரும் பரம்- விண்ணுலகம், இப்படியாக இகம் பரம் இரண்டையும் மையப்படுத்தி இகவடை பரவடை என்று சுவையான தலைப்பைக் கொடுத்துள்ளார். அம்மா சுட்டுக்கொடுத்த துளையிட்ட வடையின் நினைவுகளோடு பாட்டி சுட்டுக்கொண்டிருக்கும் துளையிடாத வடையையும் தொடர்பு படுத்தும் முயற்சியாக அந்த காக்கைத் தூக்கிச் செல்வது இகவடையா பரவடையா என்கிறார். ஒவ்வொன்றையும் தொட்டு எண்ணி இது அல்ல இது அல்ல என்று விலக்கிச் சென்று கடைசியிலே இகம் எல்லாம் தீர்ந்தபின் பரம்பொருளைத் தேடி செல்லும் கவிஞன் நிகழ்கணத்தில் கண்ட அழகான கனவுகளை, நினைவுகளை, ஏக்கங்களை , பிரிவுத்துயரை, சுயசரிதையின் ஒரு பகுதியை இந்தக் குறுங்காவியத்தின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
“மரம் பொதுவாய் தனியாய் இருக்கிறது
பூ பொதுவாய் தனியாய் இருக்கிறது
நிலவு பொதுவாய் தனியாய் இருக்கிறது”
“நான் என் அம்மாவிடமிருந்து
பிரிந்துவிட்டதை
நீ தனி
நீ தனி
நீ தனி
என்று தண்ணீர் போதிக்கிறது
தண்ணீர் சித்தார்த்தன்
தண்ணீர்தான் அசோகமரம்”
என்று ஷங்கரின் உச்சந்தலையில் சொட்டுச் சொட்டாய் இறங்கும் குளிர் நீர் ரகசியமாய்த் தனிமையை ரசிக்கும் ஷங்கருக்கு ஏதோ போதித்துக்கொண்டேயிருக்கிறது. நகுலனின் அடிப்பொடியாக ஷங்கர் நகர்ந்துகொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
கடந்த இருபது வருடங்களில் எட்டு கவிதை தொகுதிகளில் சொல்லமுடியாத கனங்களை, கணங்களை இந்த நூலின் வழி வெளிப்படுத்தியிருக்கிறார். சாதி, மத, அரசியல் வன்மங்கள் எதுவும் மாறாதது என்று மூர்க்கத்துடன் இறுதிப்பகுதி கொஞ்சம் விலகி எங்கெங்கோ சென்று இறுக்கமாகிறது.
//ஜே.கிருஷணமூர்த்தி
தனது கடைசிப்பேச்சு
இதுதான் என்று அறிவித்தவுடன்
அவருடைய பாக்கெட் கடிகரத்தை
மூடிய சத்தம் மடார் மடார் என்று
எனக்கு அறைந்துகொண்டிருக்கிறது//
//அடையாற்று வானம்
நாகலிங்கப் பூக்கள் அனைத்தும்
சட்டெனத் தன் தைலப்புட்டியை உடைத்து
அபூர்வமான நறுமணத்தை
நகரெங்கும் பரப்பியது
என்று சொல்லும்போது ஜே.கேயின் முகம் கண்ணாடியானது
கண்கள் கபாலத்தின் துளைகளானது//
//குயிலின் குரல் உரக்கக் கேட்கத் துவங்கியுள்ளது
பழைய செங்கோல் ஒன்றுடன் மடாதிபதிகள்
எமது நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது
குயிலின் குரல் உரத்துக் கேட்கக் துவங்கியுள்ளது//
//அம்மா இறந்த பிறகு கேட்கவே கேட்காத குயிலின் குரல் மீண்டும் உரக்கக் கேட்கத் தொடங்கியது//
//மரணத்திற்குப் பிறகு தான் அம்மா வளரத்தொடங்குகிறாள்
எனது மரணத்திற்குப் பிறகு தான் அவள் என்னிடம் வளரத்தொடங்கினாள்//
//அம்மா சென்ற பின் பூப்பதை நிறுத்தியது டெசர்ட் ரோஸ்//
இவருடைய கவிதைக்குரிய தருணங்களையும் கவிக் கூறுகளையும் கண்டு வியப்பாக உள்ளது. அன்பின் தேடலை நோக்கிய பயணத்தின் ஆழ்மன உணர்வுகளை, இறக்கிவைத்துவிட்டு அவற்றிலிருந்து தப்பித்து விடுதலையாகியிருக்கிறார். அம்மா என்பது எப்போதுமே எல்லோருக்கும் முக்கியமானவர்தான், எத்தனையோ பேர் எழுதியிருந்தாலும் இன்னும் இன்னுமென எழுதித் தீர்க்க முடியாதவள் அம்மா. அவளுடைய நினைவுகளுடன் கவிதை என்னும் உறுதியான கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார் ஷங்கர்.
இன்பா
30.12.2023