1.
ஒரு நதிக்குள்
நிறைய நதிகள் இருக்கின்றன
அதில் ஒன்று
ஒரு மூலையில்
கூழாங்கற்களை
ரகசியமாய்
சேகரித்துக்கொண்டிருக்கிறது
ஒன்று கரையை
எட்டியெட்டிப் பார்க்கிறது
ஒன்று பாறையில் ஏறி
வழுக்கி விழுகிறது
சிலதுகள் அமைதி
சிலதுகள் சேட்டை
ஒன்றிற்கு நீச்சல் தெரியவில்லை
ஒன்றிற்குப் பாடத் தெரிகிறது
ஒன்றை ஒன்று முந்துகிறது
ஒன்றை ஒன்று பிடித்து இழுக்கிறது
குழந்தைகள்
கூட்டமாகச் சென்றாலும்
குழப்பமாக இல்லை
கூட்டமாகச் செல்லும்
நதிகளைத்தான்
நாம் நதி என்கிறோம்
2.
மழை பெய்துகொண்டிருந்த ஊரிலிருந்து
மழை பெய்யாத ஊருக்குள்
நுழைகிறது என் வாகனம்
அலுங்காமல் துடைக்காமல்
காரின் மேல் இருத்தி
அழைத்து வருகிறேன்
கொஞ்சம் மழையை
அதிகாலை மலரைப் பார்ப்பதுபோல்
எனது காரை
அதிசயமாய்ப் பார்க்கிறது
ஊர்
காரின்மேல் குந்தியிருந்து
தனது குட்டிக் கண்களை
உருட்டி உருட்டி
மழை பெய்யாத ஊரை
முதல்முறையாகப்
பார்க்கிறது மழை
3.
பரவாயில்லை – வானம் சொன்னது
*
மொட்டை மாடியின்
ஒரு முனையில்
வெகுநேரம் தனியே நின்றிருந்தவனை
வானம் மெல்லத் தொட்டது
ஒரு மொட்டென நீண்டு
அசைந்து நின்றவனிடம்
அது சொன்னது
“உனக்கும் உன் வீட்டிற்கும்
சம்மந்தமே இல்லை”
விருப்பம் இளக
தளர்ந்து வந்தவனிடம்
அது கேட்டது
“கீழிருந்து மேலே
என்ன கொண்டுவந்தாய்?”
அவன் இரண்டு கைகளையும்
விரித்துப் பார்த்தான்
அதில் ஒன்றுமே இல்லை
“பரவாயில்லை”
வானம் சொன்னது
பேச்சை மாற்றுவது போல்
வெயில் காற்றென அசைந்தது
அவன் தோளில்
கைபோட்டு ஆகாயம்
தூரத்தில் எதையோ காண்பித்தது
தகதகவெனும் வானின் நிறமேறி
உள்ளும் புறமும் ஒன்றுமின்றி
கிட்டத்தட்ட
வானமாகியிருக்க வேண்டியவனை
அன்று அவன்
ஆடைதான் தடுத்தது
4.
மலைமேல் ஒரு பட்டாம்பூச்சி
மண்ணிற்கருகில்
பறக்கிறது
ஆனந்த் குமார்