சுழற்சி
அநேக பொழுதுகளில்
தூங்கி தூங்கி வழிகிறாள் அம்மா
தூக்கத்தில் புன்னகைப்பதாக
ஒருமுறை அடுத்தவீட்டு அக்கா சொன்னாள்
கழிவறையில் தண்ணீரைத் திறந்து
மூடாமல் அப்படியே பார்த்துகொண்டே நிற்கிறாள்
உடையை பத்து முறையாவது
மாற்றச் சொல்லி தினமும் அடம்பிடிக்கிறாள்
காலையா? மாலையா? தெரியாமல் குழம்புகிறாள்
ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறாள்
சாப்பிட்டு முடித்து சித்த நேரத்தில்
சாப்பாடு போடச் சொல்கிறாள்
முணுமுணுத்தபடி கடவுளிடம்
ஏதாவது வேண்டிக் கொண்டே இருக்கிறாள்
வீட்டில் காணாமல் போகும் பல
அவளது அலமாரியில் கிடைக்கிறது
சில சமயம்
சிறுவயது செய்திகளை நேற்று நடந்ததுபோல்
உற்சாகமாய் சொல்லத் தொடங்குகிறாள்
வாய்விட்டு சிரிப்பதை எப்போதோ தொலைத்திருந்தாள்
அவ்வப்போது பயமாய் இருப்பதாக பிதற்றுவாள்
இப்படிப் போகும் வாழ்வின்
அவளது கனவுப்பொழுதுகளில்
நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக
தினமும் கரைத்துக் கொண்டே வருகிறாள்
யாரும்மா நீ? என அவள் கேட்கப் போகும்
சபிக்கப்பட்ட கணத்திற்காக
காத்திருப்பது யுகமாய் நகர்கிறது
அதோடு எப்போது என் முறை எனவும்.
காதல் பழந்தேறல்
உன்னையும் என்னையும்
சொக்கட்டானாய் மாற்றி
காதலும் காமமும்
உருட்டி விளையாடுகின்றன.
காதல் வென்றால் காமத்தை நீயும்
காமம் வென்றால் காதலை நானும்
ஆராதிக்க விதிக்கப்படுகிறோம்.
நீட்டும் உன் கரங்களைப் பற்றும்போதெல்லாம்
பழந்தேறல் ஓடுகிறது நரம்பெங்கும்.
மௌன நிமிடங்களில்
அவரோகணத்தில் மீட்டப்படும்
உன் சீறியாழிசை அதிர்வுகள்
ஆரோகணத்தில் மிதக்கிறது எனக்குள்.
நிழலையும் நீக்கமற ரசிக்கிறோம்
நான் பார்க்காதபோது நீயும்
அதேபோல் நானும்.
நெருங்கி அமரும் தருணங்களில்
எதிரபாரா உன் முத்தங்களை
எண்ணிக்கொண்டிருக்கிறது மனது.
நம் தோட்டத்தில்
மொட்டவிழ்ந்து முதல்வாசம் வீசும் பூ
அற்றை நாளின் முல்லை சான்ற கற்பின்
நறுமணத்தை
மறக்காமல் அப்படியே வைத்திருக்கிறது
நம் காதலைப் போலவே !
போதிமரத்தின் தேடல்
சித்தார்த்தனைப் புத்தனாக
மாற்றிய போதிமரம்
தேடிக்கொண்டே இருக்கிறது
மற்றுமொரு
இராஜகுமாரனை வெகு காலமாய்
சூட்சுமத்தைக் காற்றின்வழி
அனுப்புகிறது அருகிருக்கும்
போதிமரத்திற்கு தன் இலையசைத்து
தம் விதைகளிலும் பொதிந்து
வைத்திருக்கிறது தலைமுறை
கடந்தாவது வரலாமென எதிர்நோக்கி
அதனருகில்
ஆசையை மனத்தில் சுமந்து
யோகிகள் வருகிறார்கள்
இளைப்பாறிய பின் கடந்துபோகிறார்கள்
போதியென அறியாமல்
முற்றும் துறக்கும்
ஞானத்தை வனமெங்கும் தேடியபடி
விசும்பல்
இன்றளவும்
மலர்த்திக்கொண்டே இருக்கிறது
மனத்துள் என்றோ
நுழைந்திருந்த சகியின்
உன்மத்த பிரியங்களின் சிறகசைப்பு
துவளும் போதெல்லாம்
மாயக்கைகளால் ஏந்தி
விரித்தவலையினுள் என்னை
இட்டு நிரப்புகிறது நானாய்
எதிர்நிற்கும் நீயெனும் இருப்பு
தேன் வீழ்ந்து மரிக்கும்
எறும்பின் அவசரத்துடன்
நெஞ்சம் அலைகிறது
காதல் சுழலின் மய்யத்தில்
விடம் பருகிய பௌவத்தின் அலைகளென
வாழ்ந்ததிலும் வாழ்வதிலும்
சிதறிக்கிடக்கிறது
நீ தந்த காதல்வலிகளின்
ஏகாந்த விசும்பல் ஒலி
மலையில் வழிந்தோடும்
அருவியில் சறுக்கிய
அன்றுதொடங்கி
கடும்புனலால்
இன்றுவரை நகர்த்திக்
கொண்டிருக்கிறாய் இலக்கற்ற
என் முற்றம் பொழியும் அன்பெனும்
வெய்யிலையும் மழைகளையும்!
மீள் செல்லும் ஒரு சொல்
திடீரென
நின்றுபோகும் உரையாடல்
ஏதோ ஒரு குற்றவுணர்வைச்
சட்டென விதைக்கிறது
எல்லா சொற்களும்
ஒரேயடியாய் மறைந்துவிட்டது போல்
சோகத்தை அப்பிவிடுகிறது மனத்துள்
அடுத்தவருக்கும் நமக்குமான
ஏதாவதொரு மெல்லிய
இழையோடிய நினைவுகளை
அங்குமிங்கும் தேடியலைகிறது
கனத்த மௌனம்
அது மீண்டுமொரு
உரையாடலைத் தொடங்கும் கணம்நோக்கி
காத்திருந்த மௌனம்
சொற்களற்ற உலகத்தைச் சுற்றிவருகிறது
சிக்கிமுக்கி கற்களின்
வெப்ப உரசலில்
பறக்கும் தீப்பொறி ஒளியாய்
பட்டென மறைந்துபோகிறது
உதடுவரை வந்துவிட்டு
மீள் செல்லும் ஒரு சொல்