பொது யுகம் 2536
அந்த மூத்த எழுத்தாளர்
நேர்காணலில்
அமர்ந்திருக்கிறார்
கடந்த காலத்திலிருந்து
யாரையாவது திரும்ப
அழைக்க நேர்ந்தால்
யாரை அழைப்பீர்கள்
அவர் சற்றும் யோசிக்காமல்
சொல்கிறார்
1996ல் இறந்து போன
என் மனைவி
ஒரு கணம் நிசப்தம்
மறுகணம்
அவர் மனைவி தோன்றுகிறார்
இது எப்படி சாத்தியம் அன்பே
எழுத்தாளர் தழுதழுக்கிறார்
உன்னால்தான் அன்பே
இருவரும் தழுவுகிறார்கள்
கொட்டும் மழையில்
வானில்
நீந்திச் செல்கின்றன
இரு தங்கமீன்கள்
ஒன்றை ஒன்று
துரத்தி விளையாடியபடி
(இந்திரா பார்த்தசாரதிக்கு…)