1
ஊருக்கு தெக்க
ஒசந்திருச்சு கட்டிடம்
ஒத்தப்பனையெல்லாம்
செத்தப்பனையாச்சே
ஊத்துப் போன வாய்க்காலும்
நாத்துப் பாவிய நெல்வயலும்
வித்துப் போச்சே விலைமகனுக்கு
களையெடுத்த கைகளை
கனலிட்டு சுட்டுவிட்டான்
கார்ப்பரேட் நலவாதி…
அரமரக்கா நெல் வெதச்சு
ஆடயுங்கோடயும் கதிரறுத்து
ஆதிக்கும் அய்யனுக்கும்
படியளந்து கையெடுக்கும்
சிற்றூரைச் சிதைத்துவிட்டான்
சிங்காரக் கோமாளி…
நான் பார்த்த நடுகையும்
குலவைச் சத்தமும்
குத்துக்காலிடும் நாற்று முடிகளும்
பூசிமெழுகிய வரப்பும்
சாம்பல் நாரையும்
சில்வண்டும்
சிவந்த அரிவாள் நண்டும்
நீர்த்தும்
நத்தைக் கவுச்சியும்
மீன் வாடையும்
மிதக்கும் பாசியும்
ஊசித் தட்டானும்
வீசிப் பறக்கும் உள்ளானும்
விழி திறக்கும் போதெல்லாம்
மின்னொளியாக நகர்கிறது
கடந்து போக முடியாமல்
காலைச் சூரியனாய்க் கசிகிறேன்..
2
இரவு முழுக்க
சுடரெழுப்பிய மாடத்தீபம்
விடிந்த பிறகும்
ஆறவில்லை
நிமிர்ந்து கொண்டே
சிவந்த கண்களாய்
தலைமாட்டின் மேற்புறம்
பூ வாடைகளுக்குள்
கசிந்துறும் ஈமக்குரல்களோடு
தழுவிக்கொண்டே
தலையணையோரத்தில்
நறுமணப் புகையுறும்
பத்திக்குச்சியினைப்
பார்த்துப் பார்த்து
அழும் சிறுகுழந்தை
முண்டியடித்துக் குடிக்கிறது
வற்றிப் போன மார்பின்
இளமித இரத்தத்தை.
3.
இடையபட்டியில்
கிடையமர்த்தியவனுக்கு
உடைந்தது மண்டை
அடைக்கலம் கேட்டதனால்…
ஒரே வழித்தட பேருந்து
இனம் பிரித்தது
மகளிருக்காக மட்டுமென்று…
சாக்கடையிலும் கூட
தனியாக ஓடியது
மேலத்தெருவும் கீழத்தெருவும்…
பாவம் என்ன செய்தது
குடிசை வீடு
உறங்கும் நெடிய இரவில்
பற்ற வைத்தது
சிறகில்லாத மின்மினி…