சுலைஹா
மேலும்
உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால்
நான் அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள்
கல்லும் கல்லும் மோதிவரும்
நெருப்புப் பொறிகளால் உருவானவள்
இங்கிருந்தும் அங்கிருந்தும்
தாவுகின்ற மின்னொளி
கடந்தகால சாபங்களிலிருந்து மீண்டவள்
எதிர்காலச் சவால்களை வென்றவள்
ஒட்டகங்களைப்போல்
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி
ஒளியை அணிந்திருப்பவள்
உப்புக் குவியலைப்போல் ஈரலிப்பானவள்
“இறுமாப்பு“ என்னும் தாரகைகளாக
வீசியெறிந்திருக்கிறேன் என் பருவங்களைக்
கண்களிலிருந்து காதலை பொழியச் செய்பவள்
கனவுகள் காண ஏங்கும் கனவு நான்
என் உடல் செஞ்சாம்பல் குழம்பு
கத்திகளால்
கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள்
காதலால் கத்தியை உடைத்தவள்
நான் யூசுப்பைக் காதலிப்பவள்
சுலைஹா
கறிவேப்பிலை மரத்தில் அன்பைப்பழகுதல்
கொழுத்த மழைக்காலத்தின் பிறகு
செழித்து அடர்ந்திருக்கும்
இலைகள் மட்டுமேயான கறிவேப்பிலை மரத்தினை
எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அன்பின் பெருவிருட்சமாக
சமையலறை இடதுபக்க மணலில்
மிகவும் துணிச்சலுடன் நிற்கிறது
அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப
ஆய்ந்து செல்கின்றனர்
இலைகள் மணமாகவும் ருசியாகவும்
இருப்பதில் மகிழ்வுடனும் திருப்தியுடனும்
விபரம் அறியாதவர்கள்
திருடியும்
கந்துகளை முறித்தும் விடுகின்றார்கள்
குருத்து இலைகளை ஆய்கின்றனர்
குருத்துகள் எளிதில் வாடிவிடக் கூடியன
பேராசைமிக்க வியாபாரி வருகிறான்
அவனது தோற்றத்தில், பேச்சில்
எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்
எந்தவொரு இலையையும் விடாமல்
உருவிச் செல்வதே அவனது குறி
பின்பு
அதே மரம்
அவனே வியந்து மிரளும் அளவுக்கு
துளிர்த்து அடர்ந்து செழித்துவிடும்
எதையுமே இழக்காத மாதிரி
கறிவேப்பிலை மரக்கந்துகளில்
சிறு குருவிகள் அசைந்து விளையாடின
இலைகளுக்குள் புகுந்து, மறைந்து
தாவித் தாவி ஏதோவெல்லாம் பேசின
மரத்தின் ஒளிரும் முகம்
பளிச்சிடும் பிரகாசம்
வேறு ஒருபோதுமே காணமுடியாப்
புது அழகுடன் இருந்தது
இரண்டு பெண்கள்
முழு அர்த்தத்தில்
நம்மைப் பகிர்ந்தபடி உரையாடிக் கொண்டிருந்தோம்
கண்ணாடி வானம்
நானுமாகி நீயுமாகியிருந்தோம்
நம்மைத் தொந்தரவு செய்யாமல்
மூன்று இரவுப் பறவைகள்
ஒன்றையொன்று தொடர்ந்து செல்கின்றன
காற்றை உடைத்து
அளவுக்கு மீறிய அகண்ட சிறகுகளினால் அலையெழுப்பி
உடைந்த காற்றுத் துண்டங்கள்
கண்ணாடியில் பட்டுச் சிதறுகின்றன
தொலைவில்
ஏதோ தவிப்புடன் துடித்துக்கொண்டிருந்த ஒற்றைவெள்ளி
அடுத்த வீட்டு நிழல் மூக்குக் கூரை முகட்டில்
மூக்குத்தியென ஜொலிப்பதைப் பார்த்திருந்தோம்
உனது கூடு நிரம்பி தேன் வழிந்து கொண்டிருந்த
மாயப்பொழுதைச் சொல்லிச் சிரித்தபடி
நீ ஏக்கமுற்ற பொழுது
மற்றுமொரு பறவை பறந்து செல்கிறது
நான் திகட்டும்வரை உணவூட்டியதில்
நிலா ஓரமாய்ச் சென்று அமர்ந்திருக்கலாம்
ஒவ்வொரு ஓலை மடிப்புகளிலும்
தன்னை ஒழுகவிட்டிருக்கும்
விசுவாசமான தூய்மையான அதன் ஒளியைப் பூசுகின்றேன்
விரல்களில் விசித்திரமாய் நீ பார்க்கும்
அவ்வொளிச் சாறு
அதிசயமான பானமாகிவிடுகின்றது
நாம் முடிவற்றுப் பருகப் பருக
தாகங் கொண்டு இரண்டு பெண்களை அருந்தும் இவ்விரவு
இதற்குமேல் இல்லையென்ற
அற்புதத்தைச் சுவைத்துவிட்ட திளைப்பில்
சாய்ந்து செல்கின்றது
அந்தமற்ற கண்ணாடி வானம்
நானுமாகி நீயுமாகிக் கிடந்தோம்
குறிஞ்சியின் தலைவி
இரண்டு குன்றுகள்
அல்லது தளும்பும் மலைகள் போன்ற
முலைகளுக்கு மேல் உயர்ந்து
அவள் முகம் சூரியனாகத் தக தகத்தது
இரண்டு விலா எலும்புகளால் படைக்கப்பட்டவள்
பச்சிலை வாடைவீசும் தேகத்தால்
இச்சையெனப் பெருக்கெடுத்தோடும்
மலையாற்றைப் பொன்னாக்குகிறாள்
வேட்டையின் இரத்த வீச்சத்தை உணர்ந்து
மலைச்சரிவின் பருந்துகள் தாளப்பறக்கின்றன
மரக்குற்றிகளால் உயர்த்திக்கட்டப்பட்ட
குடில்களில் படர்ந்த மிளகுப்பற்றை
மணம்கசியும் கறுவாச்செடி
கோப்பிப்பழங்களும் சிவந்திருந்தன
நடுகைக் காலத்தில் தானிய விதைகளை வீசுகிறாள்
சுட்டகிழங்கின் மணத்தோடு
பறைகளுடன் மகுடிகளும் சேர்ந்து ஒலியெழுப்ப
ஆரம்பமாகின்றது சடங்கு
களிவெறி… கள் சுகம்…
மூட்டிய நெருப்பைச்சுற்றி வழிபாடு தொடங்கிற்று
வளர்ப்பு நாய்களும்… பெட்டிப்பாம்புகளும்… காத்துக்கிடக்கின்றன
மாயஆவிகளை விரட்டி
பலிகொடுக்கும் விருந்துக்காகத்
தீர்ந்த கள்ளுச்சிரட்டைகளைத் தட்டி
விளையாடுகிற சிறுசுகள்
வாட்டிய சோளக்கதிர்களைக் கடித்துத்திரிகின்றனர்
பிடிபட்டு வளையில் திமிறும் உடும்பைக்
கம்பினில் கட்டி… தீயிலிட்டு…
அதன் வெந்த இறைச்சியை மலைத்தேனில் தொட்டு
கணவன்மார்களுக்குப் பரிமாறுகின்றாள் குறத்தி
தும்பி சிறகடிக்கும் கண்கள் விரித்து
இரவுச் சுரங்கத்தின் கறுப்புத் தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளை
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
‘போர் தேவதையின் கண்களாக உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்’
அவளது குரல் … மலைகளில் சிதறி ஒலிக்கின்றது
‘பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்’
காற்றில் வசிப்பவன் …
காலத்தைத் தோன்றச் செய்வபன் …
இன்றென்னைத் தீண்டலாம் !!
அக்காவுக்குப் பறவைபோல சிரிப்பு
உயரத்தில் அவ்வளவு உயரத்தில்
அக்காவை வைத்திருந்தோம் இன்னொரு தாயாக
அவளது கரங்கள்
எப்போதும் வற்றாது கிளை பிரிந்தோடும் நீரோடை
அதன் கரையின் குளிர்மையில்
தங்கைகளும் தம்பிகளுமாக விளையாடிக்கொண்டிருந்தோம்
பொறுப்பு வாய்ந்த முடிவுகளை
அவளிடமிருந்துதான் நாங்கள் பெற்றுக்கொள்கிறோம்
சமமான நம்பிக்கை
சமமான அன்பு
எப்போதும் வண்ணங்கள் வெளிப்படும்
ஆகாயம் அவளாகினாள்
மென்மையாக ஊறுகின்ற குளிர்காலத்தில்
செடிகளைப் பிடுங்கி நடுவதும்
தென்னோலை உரசல்களைப்போன்று
பாடலிசைப்பதுமாக அலைவாள்
அன்பூறும் நேரத்தில்
பொங்கும் அன்போடு அவள் கரம்பிடித்துச் சுற்றுவேன் சுழற்றுவேன்
அப்போது அக்காவின் சிரிப்பு
பறவையைப்போல் பறந்து செல்லும்
நான் இன்னும் அவள் சிரிப்பதற்காய்
கிறு கிறுத்து ஆடும் பொன்வண்டு
பின்பொரு நாள்
ஈயக் கரைசல் துளிகள் அவள் கண்களில்
கசிந்ததைப் பார்த்தேன்
நானோ புதிர்கள் புரியாத குட்டிப் பெண்
தூண்டில்போட அழைத்துவந்தோம்
அக்காவைப்
பாசி படிந்த குளக்கரையில் கால்களை விட்டு
நீரை ஆர்வமின்றி அலைபவளிடம் கேட்டேன்
இந்த குளத்திப் பூச்சிகள்
வரிசையாக எங்கே செல்கின்றன
‘கனவுகள் முடியும் இடத்திற்கு என்றாள்’
கலைந்து ஒழுங்கில்லாமல் கிடந்த அவளது
நீண்ட கூந்தலைப் பின்னி முடித்தபொழுது
அக்கா என் மடியிலே நித்திரையாகியிருந்தாள்
அதன் பிறகு வேறொருபோதும்
பறவைகள் சிறகடித்துச் செல்லும்
சிரிப்பை அக்கா சிரிக்கவேயில்லை
பெண்
மழைக்கு முன்பே
காற்று குளிர்ந்துவிடும்போது
இலைப் பச்சையாக மாறிவிடுகிறேன்,
அடி நிலத்தின் கீழ்
திரவியமாய் விளைகிறேன்
பித்தமேற்றும்
ஆர்ப்பரிக்கும் கடலில்
உப்பை விழுங்கிய ஆகாயம்
கனவும் விஷமுமான
மந்திரம் நான்
காலங்களின் மீது
அறைகூவல் விடுக்கும்
சொல் ஒன்றின்
இடதும் வலதுமாவேன்
என்னை
எங்கு ஒளித்து வைக்க முடியும்..
– அனார்
படங்கள்: இணையம்