திணைகள் பற்றி
இன்று தமிழ் இலக்கியம் எல்லைகளின்றி உலகம் தழுவிய நிலையில் உள்ளது. தமிழர்களின் வாழ்வியல் பரப்பு ஆக்கிரமிப்பு எல்லைகள் உலகம் முழுவது விரிந்து பறந்துள்ளன. பண்டைய தமிழர்களுடைய வாழ்வு முறை அகமாகவும் புறமாகவும் பகுக்கப்பட்டிருந்தாலும் ஐவகை நிலங்களின் வாழ்வு முறை இன்று எல்லைகள் தாண்டிச் சிதறிக்கிடக்கிறது. ஆதித் தமிழனின் தொடர் வாழ்வியலில் காட்டப்பட்ட ஐவகைத் திணைகள் தாய் நிலத்தின் சொத்தாக சொந்தமாக மட்டுமே கருதப்படுகிறது. மரபைக் கைவிட்டுவிடாமல் சொந்த மண்ணின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக தொழில் நிமித்தமோ வாழ்வாதாரத்தின் நிமித்தமோ புலம்பெயர்ந்து வாழும் தமிழனின் இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரப்படவேண்டும், அவை பேசப்படவேண்டும். அயலகத் திணைகளில் வாழும் தமிழர்களின் கரம் பற்றிக்கொண்டு கிழக்காசிய திணைகளின் காட்சிப்பொருள் மற்றும் கருத்துப்பொருள்களை உலகம் தழுவிய இலக்கியப் பெருவெளிப் பரப்பிற்குள் எடுத்துச்செல்வதும், இந்நிலங்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றின் நுட்பங்கள், மெய்ப்பாடுகள் அடுத்த கட்ட நகர்வை அடைவதற்காகவும், தனித்துவமான அடையாளம், தொழில் முறைகள், பழக்க வழக்கங்கள் , நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியல் பண்பாடுகளை முன்னிலைப்படுத்த வேண்டுமென்ற பொது நோக்கங்களுடன் தொடங்கப்பட்டது திணைகள் இணைய இதழ்.
மரபின் பாதையில் நின்று கொண்டு மரபைக் கைவிடாமல் நவீனத்தின் தனித்துவத்தை நோக்கி நகர்வது காலத்தின் தேவையாய் இருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூரிலிருந்து திணைகள் இணைய இதழ் தொடங்கப்படுகிறது. நிலக்கோடுகள் தாண்டி தமிழ்ப் படைப்பாளர்களைச் சமதளத்தில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது திணைகள். தொடக்கமாக தமிழ்க் கவிதைகளை முன்னிலைப் படுத்துவதை முதன்மையாகக் கொண்டாலும் தொடர்ந்து கலை, சமூக தளங்களிலும் தொடர்ந்து பயணிக்கவிருக்கிறது. . தமிழின் தரமான படைப்புகளை வெளியிடும் மிக முக்கியமான தளமாக திணைகள் செயல்படவுள்ளது. படைப்புகளின் வழியேதான் சமகாலத்தில் சமூகம் பற்றிய புரிதலை ஏற்படுத்தமுடிகிறது. திணைகள் சார்ந்து நவீன இலக்கியத்தோடு பயணிக்க விரும்பும் படைப்பாளர்கள் எவரும் கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நேர்காணல்கள் என எந்த வகையிலும் இதில் பங்களிப்பு செய்யலாம்.