Skip to content Skip to footer

சிறப்பிதழ் – 2

கவிஞர் பச்சோந்தி

1984-ல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த கவிஞர் பச்சோந்தியின் இயற்பெயர் ராச கணேசன். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள் ஆகிய தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார் பச்சோந்தி. கணையாழி, விகடன் இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ள பச்சோந்தி இப்போது நீலம் இதழில் பணியாற்றி வருகிறார். பச்சோந்தி, பீஃப் கவிதைகளை எழுதி அது தொகுப்பாக வெளிவரும் வேளையில் அதிலுள்ள சில கவிதைகள் வழியாக, பச்சோந்தியை தீவிரமான ஒரு குரலாக உணர்ந்தேன். இவருடைய பீஃப் கவிதைகள் தொகுதி, நூற்றாண்டு காணப்போகும் நவீன கவிதை வரலாற்றில் தனித்துவமானது. பார்ப்பவன் காட்சிகள் வழியாகவே, தனது விமர்சனத்தை நிகழ்த்தும் கவிதைப் பாணி இவருடையது. பீஃப் கவிதைகளிலும் இவர் உருவாக்கிய வெவ்வேறு விதமான காட்சிகள் என்னை ஈர்த்தது. பீஃப் கவிதைகள் வழியாகவே அன்றாட எதார்த்தத்தை நெருக்கமான காட்சிகளாக்கி, அந்த யதார்த்தத்தைக் கடந்த உணர்வை உருவாக்கிய பச்சோந்தி, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘சென்னையின் விளிம்புநிலை வாழ்க்கை’ என்று சொல்லத்தக்க அடையாளத்துடன் ஒரு கவிதை வரிசையை எழுதிவருகிறார். பார்ப்பவன் காட்சிகள் வழியாக நடத்தும் நாடகம் தீவிரம் கொண்டு, கூடுதலான மாயத்தன்மையை இந்த வரிசைக் கவிதைகளில் பார்க்கிறேன். அதையொட்டி பச்சோந்தியிடம் ஒரு நேர்காணல் நடத்துவதன் வழியாக, அவரது கவிதை உலகம் மேலும் நெருங்கும் என்ற அடிப்படையில் ஒரு உரையாடலை நடத்துவதற்கு நினைத்தேன். நேரிலும் எனக்கு நன்கு பரிச்சயமான பச்சோந்தி, பரிச்சயமில்லாத உக்கிரத்துடன் ஒவ்வொரு கேள்வியிலும் வெளிப்பட்டிருக்கிறார். கோபம் எதற்கு, நிதானம் நிதானம் என்று சொல்லியும் அவர் அப்படியாக வெளிப்பட்டிருக்கிறார். மிகத் தனியாக, மிகத் தனிமையாக இந்தப் பதில்களில் அவர் வெளிப்பட்டிருக்கிறார். அவரது தனிமையின் உலகை எனது கேள்விகள் ஊடுருவாதது மட்டும் அல்ல, ஸ்பரிசிக்கக் கூட முடியாத தோல்வியையும் அடைந்துள்ளன. பதில்களின் வழியாக பச்சோந்தி வெற்றியடைந்திருக்கிறார். பெருந்தொற்றின்போது, விகடன் நிறுவனத்திலிருந்து முறைகேடாக வேலைநீக்கம் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவரான பச்சோந்தி, பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றவர்கள் யாரும், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வல்லாதிக்கம் கொண்ட நிறுவனம் ஒன்றோடு போராட முன்வராத நிலையில், தனியொரு நபராகப் போராடி ஆறுதலான இழப்பீடையும் தற்போது பெற்றுள்ளார். இந்த நேர்காணலில் தன் கவிதை வீட்டின் உள்ளிடங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். அந்த வகையில் இந்த அனுபவம் எனக்கு பெருமதியானது.   

என் கால்கள் தான்தோன்றித்தனமாக அலைபவை – கவிஞர் பச்சோந்தி நேர்காணல்

கேள்விகள்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

உங்கள் கவிதைகளில் வெளிப்படும் மொழி இறுக்கி நெரிக்கப்பட்ட ஓர் உணர்வைத் தருகிறதே? 

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். மனம் என்னும் சட்டியில் அன்பு இருந்தால் அன்பு, வெறுப்பு இருந்தால் வெறுப்புதான். நம் காலத்தில் யாரிடமும் அமைதியில்லை, யாரிடமும் நிறைவு இல்லை, யாரிடமும் நிலைத்த தன்மையில்லை. சக மனிதருடன் ஏன் வீட்டில் உள்ளவர்களோடுகூட எந்த அளவுக்கு உரையாடுகிறோம்? எதிரில் தென்படும் மனிதரின் முகத்தை நேருக்கு நேராக எங்கே பார்க்கிறோம்? யாரேனும் கேள்வி கேட்டால் அதற்குரிய பதிலைச் சொல்கிறோமா? மாறாக நாம் ஒன்றை அவரிடம் திணிக்கத்தான் முயல்கிறோம்? நம்முடைய வாழ்வே இறுக்கி நெரிக்கப்பட்ட ஒன்றாகிப் போனது. வாழ்வின் வெளிப்பாடுதானே மொழியும். ஆக, என் கவிதைகளிலும் ஆங்காங்கே இதன் தன்மை இருக்கிறதுதான். ஆனால், முழுவதுமாக என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  

நீங்கள் இப்போது எழுதிவரும் சென்னை வரிசைக் கவிதைகளில் வானம்பாடித் தன்மையும் திரைப்பாடல்களிலேயே பழசாகிவிட்ட படிமங்களையும் தைரியமாகப் பயன்படுத்துகிறீர்கள். ஒரு சர்ரியல் ஓவியத்தன்மையும் இருக்கிறதாக உணர்கிறேன்…. 

சி.மோகனின்`நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்’ விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்தது. அப்போது விகடன்.காம் பிரிவில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். என் அன்றாட அலுவல் பணிகளை முடித்துவிட்டுத் தடம் இதழில் இடம்பெறும் படைப்புகளைப் படித்துக் கொடுக்கும் பணிகளையும் செய்து வந்தேன். கிளாடு மோனோவின் இம்ப்ரஷனிஸம், பால் செசானின் பின் – இம்ப்ரஷனிஸம், வான்காவின் வெளிப்பாட்டியம், பால் காகினின் குறியீட்டியம், பிகாஸோவின் க்யூபிஸம், வாஸ்ஸிலி காண்டின்ஸ்கியின் அரூப ஓவியம் உட்பட பதினொரு ஓவியர்கள் அறிமுகமானார்கள். இவர்களில் `கனவின் புகைப்படங்கள்’ என்னும் தலைப்பிலான கட்டுரையில்  இடம்பெற்ற சல்வடார் டாலியின் ஓவியங்கள் பிரமிப்பைக் கொடுத்தன. ஏற்கெனவே பார்த்த சிலுவை, கடிகாரம், ஒட்டகச் சிவிங்கி, யானை, குதிரை போன்ற கருப்பொருள்களை வேறொரு கோணத்தில் அவை காட்டின. கனவுலகில் மட்டும் கண்டதை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுத்தன. `கனவுப் பிரதேசங்களையும் ஆழ்மன இயல்புகளையும் கலையில் வெளிப்படுத்துவதற்கான படைப்புச் செயல்முறைகளைக் கண்டடைவது’ என்ற சர்ரியலிஸத்தின் தீர்க்கமான குறிக்கோள்; டாடாவாதிகளை மட்டுமல்ல என்னையும் வெகுவாக ஈர்த்தது. மீசையால் எட்டுப் போடும் டாலியின் உருவத்தைத்தான் என் முகநூலின் புரொஃபைலில் பெரும்பாலும் வைத்திருப்பேன். `There is only one difference between a madman and me. The madman thinks he is sane. I know I am mad.’ என்கிற டாலியின் மேற்கோள் எனக்கு மிகப் பிடித்தமானது மட்டுமல்ல நெருக்கமானதுகூட. 

வானம்பாடித்தன்மை என்று நீங்கள் எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. `கலை மக்களுக்கானது’ என்ற வானம்பாடிகளின் கருத்தில் உடன்படுகிறேன். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாச் சடங்குகளிலும் திரைப்பாடலைக் கேட்டு வளர்ந்த வாழ்வியலைக் கொண்டவன் நான். அதன் பாதிப்பு என் கவிதையில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. பழைய படிமங்களைச் சுட்டிக் காட்டினால் `தைரியமாகவே’ அதுகுறித்து உரையாடலாம்.

 

பீஃப் கவிதைகளிலும் சரி, இப்போது எழுதிவரும் கவிதைகளிலும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து, பூக்கட்டுவது போலக் கோத்துக்கொண்டே போவது உங்களுக்கு உகந்த வடிவமாக இருக்கிறதா? அதிலிருந்து வெளியே வருவதற்கு முயல்கிறீர்களா? அல்லது அதைத்தான் உங்களது வலு என்று கருதுகிறீர்களா? 

ஒரு கருப்பொருளா, ஓராயிரம் கருப்பொருளா என்பதை என் பயணம்தான் தீர்மானிக்கும். என் மூன்றாவது கவிதை நூலான `அம்பட்டன் கலயம்’ முதல் நூலைப் போன்றே என் கிராமத்தை மையமிட்டு உருவானதுதான். ஆனால், அக்காலகட்டத்தில் நிகழ்ந்த கஜா புயல், எட்டு வழிச் சாலை என்னும் இரு பெரும் சம்பவங்கள் என்னை நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று என் கன்னத்தில் அறைந்து கேட்டன. எனவே, கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்றேன். குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டேன். அங்கு வனங்களும் குடியிருப்புகளும் பறவைகளும் விலங்குகளும் பயிர்களும் நிலைகுலைந்திருப்பதைக் கண்டேன். சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது அடிமலைப் புதூர் என்னும் மலைக் கிராமத்தில் உண்ணாமலை என்னும் மூதாட்டி காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து ஓங்கிய கை என்னை மிகவும் உலுக்கியது. மேலும், கிழங்கின் வேர்களையும் மரங்களைம் கட்டிக்கொண்டு அழுதனர். வயதான ஒருவர் கிணற்றுக்குள் குதித்தது என அக்காலகட்டத்தின் மக்கள் எதிர்ப்பு, பலவடிவங்களில் எதிரொலித்தது. கட்சி, இயக்கம், அதிகாரம், ஆயுதம் என எந்தப் பின்புலமும் இல்லை. என்னிடம் இருக்கும் கோபத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்த கிடைத்த ஒரே வழி என் எழுத்துதான். இப்படி என் கிராமம், கஜா புயல், எட்டு வழிச் சாலை, சென்னையின் விளிம்பு நிலை மனிதர்கள், கோயம்பேடு சந்தை எனப் பன்முகத்துடன் எழுதப்பட்டதுதான் அம்பட்டன் கலயம். ஆனால், அந்தப் பன்முகத்தை நான் தெரிவு செய்யவில்லை. பீஃப் கவிதைகளில் இடம்பெறும் முன்னறிமுகமற்ற பல பிரதேசங்கள் திட்டமிட்டது அல்ல. எழுதுவதுதான் என் வேலை, அதற்காக நான் மேற்கொள்ளும் பயணம், அதன் தன்மையை, வடிவத்தை சுவீகரித்துக்கொள்கிறது. பலம், பலவீனம் இரண்டும் சமவிகிதத்தில் என்னை ஊடாட்டும். குளிர்சாதன வசதியுள்ள அறையில் சுழலும் மின்விசிறிக்கும் கீழ் அமர்ந்து சங்கத்தையும் மேற்கத்திய தத்துவங்களையும் முற்போக்குக் கருத்தியலையும் நகல் எடுத்துக் கவிதை எழுதும் வித்தையில் துளியும் எனக்கு விருப்பமில்லை.

 

நான் கவிஞன் என்ற உணர்வை எப்போது அடைந்தீர்கள்… 

ஆயிரமாயிரம் தொன்மையான வரலாறு நம்முடையது என்று சொல்வதற்குக் கல்வெட்டும், கவிதையும்தாம் சான்றாக இருக்கின்றன. அக்காலக் கட்டத்தின் பண்பாடு, உணவு, உடை, இருப்பிடம், தொழில் என்று எதுகுறித்தும் கவிதைகள் மூலம்தான் அறிந்துகொள்கிறோம். மாபெரும் இலக்கியங்கள் படைத்த புலவர்களின் உண்மையான உருவம் நம்மிடம் இல்லை. ஒரு பக்கம் புனைவுகளுக்கு உண்மைத்தன்மையைக் கூட்டி புராணங்களை வளர்க்கிறோம். இன்னொரு பக்கம் உண்மையான வாழ்வை எழுதிச் சென்ற திருவள்ளுவருக்குப் புனைவான உருவம் கொடுக்கிறோம். மேலும் ஒரு படி சென்று வள்ளுவன் பார்ப்பனனா இல்லை பறையனா என்று சாதிய அடையாளத்தைத் தொடுக்கிறோம். முற்காலத்திலும் சமகாலத்திலும் கவிஞன் என்கிற உணர்வை அடைந்ததால் சமூகத்தில் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. அப்படியான உணர்வு எப்படி இருக்கும். அப்படியோர் உணர்வு எனக்கு இல்லை. இயல்பான மனிதருக்கு இருக்கும் அகந்தை, காதல், காமம், சிரிப்பு, அழுகை, பசி, சில்லறைத்தனம், உன்னதம் என எல்லாம் நேரத்திற்குத் தகுந்தபடி தோன்றி மறையும். இப்படி ஏதேதோ வந்துசெல்கிறது. ஆனால், நீங்கள் குறிப்பிடும் கவிஞன் என்கிற உணர்வு எப்போது வரும் என்று தெரியவில்லை. என் கிராமத்திற்கு இன்னும் வராத பேருந்தைப்போல இப்போதைக்கு அது வராமல் இருக்கட்டுமே.

 

இது மிகவும் புத்திசாலித்தனமான,அதேவேளையில் சுவாரஸ்மான பதில். சாமர்த்தியமாகத் தெரிந்தாலும் என்றாலும் இது சரியான பதிலில்லை. உங்களுக்கு பொயட் என்கிற போதம் இருக்கு. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் பொயட்டைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அந்த உயிர்நிலையின் தன்மையைப் பற்றிக் கொஞ்சம் பேச முயற்சி செய்யுங்களேன் பச்சோந்தி. 

2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி நண்பருடன் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தேன். எல்லா வகையிலும் சமபலமற்ற இருவரில் பலமற்ற ஒருவன் எந்த அளவுக்கு அவமானப்படுவானோ, அகச்சிக்கலுக்கு ஆளாவானோ அத்தனையையும் அனுபவித்தேன். அப்படியான சூழலில் எனக்குக் கிடைத்த சிறு சிறு வருமானத்தில் புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். தொடர்ந்து கிராமப் பின்புலம் சார்ந்த படைப்புகளையே அதிகம் வாசித்தேன். அவ்வாறான வாசிப்பில் `எங்கே நான், எங்கே என் கிராமம்’ என்ற தேடலில் ஏமாற்றமே எஞ்சியது.  ஒருமுறை என் கிராமத்தில் எடுத்த நான்கு நிழற்படங்களையும் போட்டோஷாப்பில் இணைத்து அதில் ஒரு கவிதை எழுதிக் கணையாழிக்கு அனுப்பினேன். `கவிதையாகவில்லை, படம் யோசிக்க வைக்கிறது’ என்னும் பதில் மின்னஞ்சலின் வழியாகக் கிடைக்கப் பெற்றேன். `படம் யோசிக்கவைக்கிறது’ என்னும் சொற்கள் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டன. அச்சொற்களை ஏந்திக்கொண்டு எழுத ஆரம்பித்தேன்.   

நா.முத்துக்குமாரின் `தூர்’ கவிதைதான் என்னாலும் நவீனக்கவிதையை நோக்கி நகர முடியும் என்கிற பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. அவரின் `பட்டாம்பூச்சி விற்பவன்’ என்னும் கவிதை நூல் என் பால்ய காலத்தைப் பிரதிபலித்தாலும் போதாமை நிறைந்ததாக இருந்தது.  `மாடுகளின் காலடிச்சுவடுகள்’ என்னும் கவிதை இயக்குநர் ராம் நடத்திய காட்சி இணையதளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து `குடிசைக் குடைக்குள் குட்டை’ என்னும் கவிதை கணையாழியில் வெளியானது. இவை இரண்டும் என்னாலும் கவிதைகள் எழுத முடியும் என்னும் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தன. ஒரு புறம் வியாபாரத்தில் அதிருப்தியும் மறுபுறம் பிரசுரம் பெற்ற கவிதைகளால் மிகப் பெரிய அக எழுச்சியும் உண்டாகின. வியாபாரமா, இலக்கியமா என்னும் கேள்வி தொடர்ந்து என்னைத் துரத்த ஆரம்பித்து. இதனூடாக கணையாழியில் உதவி ஆசிரியர் பணி கிடைத்தது. ஒருகட்டத்தில் வியாபாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு இலக்கியத்தைத் தெரிவு செய்தேன்.   

முதல் தொகுப்பு வெளியீட்டு விழாவில் கல்யாணராமனும் சீனு ராமசாமியும் நிகழ்த்திய உரை மிகவும் உற்சாகமாக இருந்தது. இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய பழமலய், குட்டிரேவதி இருவரும் என்னுடைய தனித்தன்மையைச் சிலாகித்தனர். கிட்டத்தட்ட ஏழு மாவட்டங்களில் நூல் அறிமுக விழா நடைபெற்றது. இந்நூலை வாசித்த செல்மா பிரியதர்ஸன் என்னை போனில் தொடர்புகொண்டு நேரில் சந்திக்க அழைத்தார். சாராம்சமாக இவர்கள் எல்லோரின் குரலும் `இவன் அசலானவன்’ என்று உரக்கச் சொன்னது.  

`இலக்கியம் சோறு போடுமா’ என்கிற தேய்ந்த சொல்லாடல் இன்றும் சமூகத்தில் உலவுவதைக் காண முடிகிறது. உணவு, உடை, இருப்பிடம், பணி, செல்வாக்கு, அதிகாரம், பொருளாதாரம், காமம் இவற்றோடு சாதி, மத அடையாளம் என அனைத்தையும் இலக்கியம் கொடுக்கிறது. இதன் படிநிலைகள் ஏற ஏற இலக்கியத்தைக் கைவிட்டுவிட்டு மற்ற அனைத்தையும் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும் போக்கு மிகவும் துல்லியமாக நடைபெறுகிறது. அவரவர் திறமைக்கு ஏற்ப, சாமர்த்தியத்திற்கு ஏற்ப அந்தந்த நிலையை அடைகின்றனர். கவிதை எழுதுவதையும் வாசிப்பதையும் தவிர்த்து வேறு எந்தச் சாமர்த்தியமும் எனக்குக் கைகூடவில்லை அல்லது அவற்றிற்கு நான் ஒப்புக்கொடுக்கவில்லை. இயல்பாகவே என் கால்கள் தான்தோன்றித்தனமாக அலைபவை. அவ்வாறான அலைக்கழிப்பில் என்னையே மறத்தலும் உலகையே உற்றுநோக்கலும் இரண்டும் நடக்கும். இரண்டாவது நிகழும்போது படைப்புகளாகின்றன. இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றில் இன்னும் எழுதப்படாத வாழ்க்கை ஏராளம் உண்டு. அவற்றில் கொஞ்சம் என்னால் எழுதப்படும் என்னும் அபாரமான கனவு மட்டுமே சிறிதும் குன்றாது கனலாய் எரிகிறது. 

 

கவிதை எழுதுவதையும், கவிதைக்கான கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும் உங்களது முறைப்பாட்டைச் (process) சொல்லுங்கள்? 

பதின்ம வயதின் தொடக்க காலத்தில் என் கிராமத்தை விட்டுப் பெருநகரத்திற்குக் குடிபெயர்ந்தேன். அப்போதெல்லாம் தீபாவளி அல்லது பொங்கலுக்கு என வருடத்திற்கு ஒருமுறைதான் சொந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். ஓரிரு வருடங்கள் அப்படியான சூழலும் இருக்காது. ஒவ்வொரு முறையும் கிராமத்திற்குச் செல்லும் போதும் விருப்பத்திற்குரிய யாரோ ஒருவர் இறந்து போயிருப்பர், ஏதோ ஒரு குடும்பம் வேறுவோர் ஊருக்கு இடம்பெயர்ந்திருக்கும், தாயம் ஆடிய திண்ணை வீடுகள் குட்டிச் சுவராகி இருக்கும், பசுமையான நிலம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாலையாகியிருக்கும். நான் பார்த்த மண்ணும் மனிதர்களும் எங்கே சென்றனர், எப்படி இந்த வெறுமை ஏற்பட்டது என்கிற கேள்விகள் எழும். இவர்களை மறுமுறைப் பார்ப்பேனா என்கிற ஏக்கம் இடைவிடாது என்னில் தேங்கிக் கிடந்தது. ஆனால் நாளாக நாளாக மண்ணும் மனிதர்களும் மேலும் மேலும் மர்மமாகின. பால்யத்தில் கண்ட கிராமத்தை, கிராமத்து மக்களை மீண்டும் காண முடியுமா என்கிற ஏக்கத்திலும் எத்தனிப்பிலும்தான் என் எழுத்து பிறந்தது. அப்படி முழுக்க முழுக்க என் கிராமத்தை மட்டுமே எழுதியதுதான் முதல் நூலான `வேர்முளைத்த உலக்கை’. இந்நூலை மட்டும் எழுதினால் போதும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும் பல்வேறு விதமான இழப்பையும் நெருக்கடிகளையும் என் நிலமும் மக்களும் சந்திப்பதால் அவை என்னைத் தொடர்ந்து எழுத உந்துகின்றன. மற்றபடி முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு நான் எழுதவில்லை. இப்படியான யுக்திகளை அங்கங்கே நிகழ்வுகளிலும் பலரின் உரையாடலின் வழியும் கேட்கிறேன். ஆனால், அது என்னவென்று தெரிந்துகொண்டு ரொம்பவும் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுவேன்.   

 

கவிதை ஒரு வாளாகட்டும் என்ற முழக்கத்துடன்தான் தலித் கவிதை கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பிறக்கிறது. உங்கள் கவிதைகளில் புகாரோ, சவாலோ, கேள்விகளோ, விசாரணையோ, பாதிக்கப்பட்ட தன்னிலையின் ஓலமோ சின்ன அளவில் கூட இல்லையே… 

தலித் என்னும் மராட்டியச் சொல்லுக்கு மண்சார்ந்த என்கிற பொருளுண்டு. கரிசல், வண்டல், நாஞ்சில், கொங்கு என்ற நிலப்பரப்பின் அடைப்படையில் எழுத்துகளைப் பிரிக்கும் போக்கு நவீன இலக்கியத்தில் உண்டு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று திணைகளின் அடிப்படையில் சங்க இலக்கியம் உண்டு. தமிழ்ச் சமூகம் வரையறுக்கும் `தலித் இலக்கியம்’ இவற்றில் எந்த வகையைச் சேர்ந்தது. பொதுவாகச் சாதியின் அடிப்படையில் இதை அணுகுவதைத் தொடந்து பார்த்து வருகிறேன். ஏற்கெனவே இமயம் எழுப்பிய கேள்வியையே இங்கு நானும் கேட்க விரும்புகிறேன். பள்ளன், பறையன், சக்கிலியன் எழுதுவதுதான் தலித் இலக்கியம் என்றால் பார்ப்பனர் எழுதுவதைப் பார்ப்பன எழுத்து, பிள்ளைமார் எழுதுவதை பிள்ளைமார் எழுத்து, தேவர் எழுதுவதை தேவர் எழுத்து, கவுண்டர் எழுதுவதை கவுண்டர் எழுத்து இப்படி செட்டியார், முதலியார் எழுதிய எழுத்துகளை அந்தந்தச் சாதியின் அடையாளத்துடன் இதுவரை ஏன் வரையறை செய்யவில்லை.  

பள்ளிக்கூடத்திற்குப் படிக்கச் சென்றால் அங்கே இந்தச் சாதிப் பிள்ளைகள் எல்லாம் கையைத் தூக்குங்க அல்லது எழுந்து நில்லுங்க என்று சொல்கிறார்கள். எழுந்து நிற்பதாலும் அவமானத்தையே சந்திக்கிறோம். பணியிடங்களிலும் சாதி பார்த்துதான் என்ன வேலை தரலாம் என்கிற முடிவுக்கு வருகிறார்கள். எல்லாவற்றிலிருந்தும் விட்டுவிடுதலையாகி எழுத வந்தால் இங்கேயும் `தலித் கவிதை’ என்று முத்திரை குத்துவது எந்தவிதத்தில் நியாயம். இப்படியான சிந்தனையில், வரையறையில் முதலில் திருத்தம் தேவை. மற்றபடி வாள், முழக்கம் என்று தொடங்கிய உங்கள் கேள்வியில் அடுக்கடுக்காக இடம்பெறுகிறது நெடிய…… ஓக்கள்தான். 

 

உங்கள் கவிதை உலகத்தின் மீது தாக்கம் செலுத்திய கவிஞர்கள், படைப்பாளிகளைப் பற்றிச் சொல்லுங்கள்…

எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவுக்குக் கடந்த பத்தாண்டு காலமாய் மைய அரசின் ஆட்சியில் நிம்மதியற்ற வாழ்வை வாழ்ந்து வருகிறோம். எதையும் தட்டிக் கேட்கும் ஊடகங்களும் சனாதனத்திற்கு விலைபோய்விட்டன. எதுகுறித்தும் இங்கு இருக்கும் எழுத்தாளர்களுக்குக் கவலையில்லை. இன்னொரு பக்கம் நரன், வசுமித்ர போன்றவர்கள் `Banned poems’, `தடைசெய்யப்பட்ட புத்தகம்’ என்று வெறுமனே கவன ஈர்ப்பைக்கொண்டு காமெடி செய்கிறார்கள். தீவிரவாத அமைப்போ, மைய அரசோ அல்லது வேறு எந்த இயக்கமோ இவர்களின் படைப்பைத் தடைசெய்தனவா?. இப்படியான போக்கு சலிப்பையே உண்டு பண்ணுகிறது. இதையெல்லாம் மீறிப் பகடியை வெளிப்படுத்துவதுதான் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த கலைவடிவம் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய கேலிக்கூத்து. 

தேவதச்சன், கோணங்கி, யவனிகா ஶ்ரீராம் இப்படியான மூத்தோரின் பாதிப்பில் கவிதைகள் எழுதத் தொடங்கும் போக்கைக் கவனிக்கிறேன். ஆளுமைகளின் தாக்கத்தில் கவிதை எழுத வரவில்லை என்பதை மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சமீபத்தில் சகக் கவிஞருடன் உடையாடும் போது `சிலர் மேற்கத்தியத் தத்துவங்களைக் கவிதையாக்குகிறார்கள், அதற்கு நேரிடையாக மேற்கத்திய தத்துவங்களையே படித்துவிடுவேன் அல்லவா’ என்றார். `நீங்கள் உட்பட சிலர், சங்க கவிதைகளையே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் அதற்கு நான் சங்கக் கவிதைகளையே படித்துவிடுவேன் அல்லவா’ என்றேன். இப்படி நகல் எடுக்கும் தன்மையில் இருந்து விலகி சுய சிந்தனையோடு, எதற்கும் விலைபோகாத, சாதி மதப் பெருமிதமற்ற ஒருவரைத் தமிழில் இதுவரை கண்டதில்லை. 

என்னைப் பாதித்த கவிஞர்கள் என்று சொல்ல தமிழில் ஒருவருமில்லை. அப்படிப் பாதித்த ஒன்றிரண்டு பேரும் அதிகாரத்தின் கைக்கூலிகளாய், நான் வாள் எடுத்தவன், ஏர் பிடித்தவன் என்று சாதிப் பற்றாளராய், உழைத்து வாழத் தெரியாதவராய், சுய புத்தி இல்லாதவராய் இருக்கின்றனர். 

 

நீங்கள் நிறைய வாசிப்பவர்…மொழிபெயர்ப்பு இலக்கியம் உட்பட….அவர்களும் உங்கள் உலகத்தின் மீது தாக்கம் செலுத்தவில்லையா?

உலக இலக்கியம் படித்துவிட்டு நான் கவிதைகள் எழுத வரவில்லை. சிறுவயதில் என் ஊரின் கிழக்கே இருந்த கரந்தமலையில் இருந்து உதிக்கும் சூரியன், மாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மறையும். இவ்விரண்டு மலைகள்தான் பூமியின் எல்லைகள் என்று சிறுவயதில் நினைத்திருந்தேன். அப்படியான நினைப்பினூடே மலைக்குச் சென்று தொரட்டிப் பழமும் நெல்லிக்காயும் பறித்துத் தின்றிருக்கிறேன். வளர, வளரத்தான் அதற்கு அப்பால் உள்ள நிலங்களை அறிந்துகொண்டேன். அதுபோல் எழுத வரும் போது உலக இலக்கியம் என்கிற பிரக்ஞை இல்லை. பிற்பாடு அப்படியான போக்கு இருப்பதை வாசிப்பின் ஊடே அறிந்துகொண்டேன். எழுத்து வேறு, வாழ்வு வேறு என்று பிரித்தறிய முடியாதபடி இயங்கும் படைப்பாளிகளை மிகவும் பிடிக்கும். இப்படிச் சொல்வதற்கு உலக அளவில் நிறைய பேர் இருந்தாலும் இப்போதைக்கு நினைவில் எழுபவர்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். `நான் இறக்கும் தறுவாயில் ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவும் இருந்தால்தான் என் ஆன்மா சாந்தியடையும் என்னும் கண்ணதாசனின் வனவாசம் என் பதின்பருவத்தில் அதாவது இலக்கியம் உலகிற்குள் அறிமுகம் ஆகுமுன்னே என்னை மிகவும் பாதித்திருந்தது. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலக்கியம் வாசிக்கத் தொடங்கும் போது, கேரள நவீனக் கவிதையின் சொத்து என்று அறியப்படுகிற பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் `சிதம்பர நினைவுகள்’, தன் வீட்டை விட்டு ஓடி இந்தியாவெங்கும் சுற்றியலைந்து பத்தாண்டுகள் கழித்து மீண்டும் வீடு திரும்பிய பஷீரின் நாடோடித்தன்மை இப்போதும் சிலிர்ப்பை உண்டாக்குபவை. கண்ணதாசனின் தத்துவப் பாடல்களின் வழி அறிமுகமான சித்தர் பாடல்களும், `கடவுள் என்ன செவிடா’ என்று கடவுளின் இருப்பைக் கேள்விக்கு உட்படுத்தும் கபீர் பாடல்களின் மீதும் அளப்பரிய காதல் உண்டு. மதிவண்ணன் மொழிபெயர்த்த சரண்குமார் லிம்பாலேவின் `தலித் – பார்ப்பனன்’ என்னும் சிறுகதைகள் திருகலற்ற மொழியில் ராவாக இருக்கும். இக்கதைகள் என் படைப்புலகை இன்னும் கூர்மைப்படுத்தின. குறிப்பாக அந்த நூலில் இடம்பெற்ற `பசுவதை’ சிறுகதையில் இடம்பெறும் விமர்சனப் பாங்கு என் எழுத்தை மறுவிசாரணை செய்தது. 

அயல் இலக்கியத்தில் வ.கீதாவும் எஸ்.வி.ஆரும் இணைந்து மொழிபெயர்த்த `மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள்’, பிரம்மராஜன் தொகுத்த `சமகால உலகக் கவிதை’ நூலில் இடம்பெற்ற லத்தீன் அமெரிக்கக் கவிதைகள், அமரந்தா மொழிபெயர்த்த `சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்’ என்னும் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், யமுனா ராஜேந்திரன் தெரிவு செய்து தொகுத்த பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஸின் `நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புகிறார்கள்’, ராமானுஜம் தொகுத்து மொழிபெயர்த்த `மண்டோ படைப்புகள்’ ஆகியவை என் வாசிப்பில் மிக அணுக்கமாகவும் நெருக்கமாகவும் உணர்ந்தவை. 6 வயது இருக்கும் போதே தான் பிறந்த பர்வே என்னும் கிராமத்தை இஸ்ரேலிய ராணுவத்தினரிடம் இழந்தவர் மஹ்மூத் தர்வீஸ். மேலும், இவர் கிராமத்தின் சவக்குழிகள், சிதைவுற்ற எலும்புகள் மீது இஸ்ரேலிய ராணுவம் தார்ச்சாலை அமைத்தது. இவ்வாறான துயரம்தான் இங்கும் நடைபெறுகிறது. இவரின் `எனது அன்னை தரும் ரொட்டிக்காக ஏங்குகிறேன்’ என்னை மிகவும் உலுக்கியது. 13 வயதில் கிராமத்திலிருந்து என் தாயைப் பிரிந்து சென்னைக்கு வந்த நான் இந்த 37 வயதில் என் தாய்மடிக்காக, அவள் பார்வைச் சூட்டின் தகிப்புக்காக இன்னும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.

இன்னொரு பக்கம் பார்ப்பனர்களாலும் பிள்ளைமார்களாலும் என் ஊரின் வரைபடம் சுருங்கிக்கொண்டே செல்கிறது. ஆயிரம் காலத்துக் கோயிலை சாதிய பலத்தாலும் அரசியல் பலத்தாலும் பொருளாதார பலத்தாலும் தங்களின் வசமாக்கி எங்களின் குரல்வளையை நெருக்கிக்கொண்டே செல்கிறார்கள். இதற்கு எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களும் கைக்கூலியாய் இருப்பது அவலம். இந்த இடத்தில் `எங்கள் நிலத்திலிருந்து வெளியேறுங்கள்’ என்னும் தர்வீஸின் குரல் நினைவுக்கு வந்து செல்கிறது. யார் என்னைப் பாதித்தாலும் எனக்கான வலியை, கொண்டாட்டத்தை, போராட்ட வடிவத்தைத் தனித்துச் சொல்லும் திராணி என்னிடம் உண்டு. இவர்களின் படைப்புலகில் இருந்து ஒருபோதும் இரவல் பெறமாட்டேன். பாதித்தவை குறித்து உரையாட நிறைய உண்டென்றாலும் `துயரம் ஒரு மங்கிய வெள்ளைப் பறவை’ என்னும் தர்வீஸின் வார்த்தைகளோடு உங்களிடமிருந்து தற்போதைக்கு விடைபெறுகிறேன் ஷங்கர்.

நிழற்படங்கள் :  க.பாலாஜி

பச்சோந்தி கவிதைகள்

 

நின் அப்பம் சிறகுகளாலானது

தண்டீஸ்வரம் பிரதான சாலையின் நடுவே

நசுங்கிய மாங்கனியை மிதித்தவன்

சற்றுத் தொலைவில் பிதுங்கினான்

சேவல்கொண்டைகளாய் உதிர்ந்து கிடக்கும் செங்கொன்றைப் பூக்கள்

ரத்தத் துளிகளாய்ச் சொட்ட

கூட்டிப் பெருக்கி வண்டியில் ஏற்றும் துப்புரவுத் தொழிலாளி

சிவக்கச் சிவக்க வெற்றிலையை வானில் இறைக்கிறார்

யாருமற்ற தேவாலய வாசலில் வெகுநேரமாய் ஏந்தும் கைகளில் கொட்டும்

கருங்கற்களில் வழியும் சிலுவையின் ரத்தம்

சிதறும் தேங்காய்ப் பருப்புகளைக் கவ்விச் செல்லும்

முதுகெலும்புகள் காய்த்த விலங்கு

மட்கும் குப்பையைக் கொத்திப் பறக்கும் அலகுகள் உடைந்த பறவை

அடுக்கிய பழங்களை ரீங்கரித்தபடி துளையிடும் காலிழந்த வண்டு

வெகுநேரமாய் ஏந்திய கைகள் காலியான தூக்கை வான்பார்த்து எறிய

ஆலய மணி ஒலிக்கும் வானில் புறாக்களின் சிறகுகள்.

காற்றில் விளையும் நறுமணம்

மேட்லி சாலையில் முடிவுறாது நிற்கிறது

மாம்பல ரயில்நிலைய இரும்பு மேம்பாலம்

நெருப்புச் சில்லுகள் விழும் அதனடியில் கரும்பின் கணுக்களைச் சீவி அடிக்கட்டையை வெட்டி எறிகிறான்

எறும்புகள் மொய்க்கும் இனிப்பென்ற வார்த்தையில்

ஒரு கட்டு அறுகம்புல்லைப் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்பவள் நாவற்பழச் சுவை மீது உப்பைத் தடவுகையில்

வெய்யிலில் காயும் பூணூல்

தோல் நீங்கிய சுளைகளில் கண்களைச் செருகுகிறது

வாகனங்களுக்கிடையே ஊக்குகளை வயிற்றில் ஏந்தி விற்பவனிடம்

சந்தைக்கே நறுமணம் பூசியவள்

ஒரு கொத்து ஊக்குகளைக் கூடுதலாய் விலைக்கு வாங்கிச் செல்கிறாள்

நெருக்கடி மிகுந்த அங்காடித் தெருவில் மீன் வடிவப் பீப்பியை ஊதுகிறான் சிறுவன்

அது வளைந்து நீண்டு ஒலிக்கிறது

ஒருமுறை வானை இழுத்தும் மறுமுறை பூமியைத் தூக்கியும்

விளக்குகள் எரியா சிக்னலில்

கேள்விக்குறியைக் கைத்தடியாக்கிய பெரியார் சிலை

உச்சந்தலையில் காய்ந்த பறவையின் எச்சத்துடன்

முற்றும் தூசி படிந்துள்ளது.

இரைப்பையைப் பகிர்ந்து ஊட்டுதல்

 

ராட்டினமாய்ச் சுற்றும் குடையின் கீழ்

நடைமேடையை அள்ளித் தின்னும் சிறுவன்

வெற்றுத் தண்ணீர்ப் போத்தலைக் கவ்வியபடி

வான் நோக்கி நடனமிடுகிறான்

பதாகை கிழிந்த கம்பிகளுக்கிடையே

விடுபடமுடியாச் சிறகடிக்கும் பறவை

மயில் தோகைகளைச் சுமந்து சென்றவன்

தன்னை விரித்து ஆட

மிக்ஸியில் அரைபடும் மாதுளங்கனிக்கு உடைபடும் ஐஸ்கட்டி

மேகங்கள் பொழியும் மாதுளம் மழையை

நாக்கடியில் சேகரிக்கும் மாநகரம்

முன்சக்கரமற்ற மிதிவண்டி அருகே

நிரம்பி வழியும் குப்பைத்தொட்டி

அதன் உச்சியை இழுத்துச் செல்லும் பூனை

பதுங்கிச் செல்லும் வாகன நிழலில்

பாலித்தீனில் வாய் வைத்த மிருகத்தின் முதுகுத்தண்டில் மாதுளம் மழை பெய்ய

தன் உடலைக் குலுக்கி ஓடி

செல்போன் கடையின் தூசி படிந்த படிக்கட்டை நக்குகிறது

அந்த நக்குதலின் மீது

தன் இரைப்பையைப் பகிர்ந்து வைத்த வயோதிகன்

நேர்க்கோட்டைப் போன்ற வானத்தின் அடியில்

அறுந்த கால்களைத் தைத்துக்கொண்டிருக்கிறான்.

எலும்புச் சுள்ளிகளின் கூடுகள்

சுரங்கப்பாதை நடையில் வெய்யில் காயும் வரமிளகாய்

காரத்தைக் கண்களில் கசக்கிய சாம்பல் நிற மிருகம்

வீசியெறிந்த கெட்டிச் சாம்பாரை

நாவினால் பறித்துச் சுவைக்கையில்

தொந்தியால் எட்டுவைத்தவன் அச்சுவை மீது கஞ்சா நெடியை எறிந்தான்

மேகங்களை வகிடெடுக்கும் உடைந்த கட்டடத்திலிருந்து

எலும்புச் சுள்ளிகளைக் கவ்வியபடி சிறகடித்த பறவை

உச்சந்தலையில் எச்சமிட்டது

அன்று வனமற்ற மாநகரில் ஒற்றை மரம் முளைத்தெழுந்தது

இப்படித்தான் மனிதர்களின் தலைகளில் பழங்கள் பழுத்தன மகனே

வேர்களின் எடையைத் தாங்க இயலா மானுடம் தலையை அரிந்து வானில் எறிந்தது

இருப்பதிலேயே பெரிய பழம் இரவில் பழுக்கும் நிலாதான் மகனே

எறியப்பட்ட அத்தனை தலைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து எரியும்

மகா கனியைச் சற்றும் புசிக்க விரும்பாதே மகனே

முண்டத்திற்கு வயிறு மட்டும் எதற்கென்று இரைப்பையையும் பிய்த்து எடுத்துவிட்டோம்

அழுகிய காலை தலைக்கு வைத்து உறங்கும் ஒரு ஜோடி காலணியில்

எத்தனை பாதைகள் தேய்ந்தனவோ

அதிர்ச்சியுறாதே மகனே

இது காலணியல்ல நம் இனத்தின் கடைசிக் கால்கள்.

மெழுகுவத்திச் சுடர்களின் நடுவே

தொலைந்த செம்மறி ஆட்டைத் தன் வெண்தாடிக்குள் யேசு தேடுகையில்

இரண்டு மெழுகுவத்திச் சுடர்களின் நடுவே

ஜெபமாலையைக் கவ்விப் பறக்கிறது வெண்புறா

நீண்டு வளர்ந்த தாடி

ஆலஞ்சடையாய்ப் பூமியெங்கும் வேர்விட

கிழிந்த செருப்பைத் தைத்தல்

பலாச்சுளைகளைக் கூறு போடுதல்

பூண்டுகளைப் பாலித்தீனில் இறுக்கி முடிதல்

மண்ணொட்டிய வேர்க்கடலைகளைப் படியளத்தல்

அத்தனையும் அதன் நிழலில் சம்பவிக்க

தாடியிலிருந்து தன்னைப் பிடுங்கியவர்

உலகின் ஒவ்வொரு மனிதரிடமும் சென்று

செம்மறியை விசாரிக்கையில்

கோடை முடிவுற்றது

நடுங்கும் பற்களுடன் தெருவிளக்கொளியில்

ஒருக்களித்துப் படுத்திருந்தார் யேசு

நடுக்கத்தின் மீது

கம்பளியைப் போர்த்தினான் ஒரு வழிப்போக்கன்

யேசுவின் உடல்

இடைவிடாது கத்துகிறது

உடைந்த கண்ணாடியில் சூர்யோதயம்

 

தன்னை விரித்து உறங்கும் சிறுவனை

இறுக்கிப் போர்த்தியிருக்கிறது பாய்

இன்னும் திறக்கப்படாத பிரியாணிக் கடையின் முன் மியாவ் மியாவ் சத்தம்

அந்தச் சத்தத்தின் மீது ரொட்டியை வீசியும்

மியாவ் மியாவ் நின்றபாடில்லை

மின் சாதனப் பெட்டியின் பின்புறம்

சிறுநீர் வெப்புராளம்

தொப்புளைத் திறந்து பழுப்பு நிறப் பணப் பையை உருவியவள்

ஆய்ந்து எறிந்த முருங்கைத் தண்டினால் முதுகு சொரிகிறாள்

கருமையான குறுந்தடியை ஊன்றி ஒட்டகம் போல் நடக்கும் மூதாட்டி

அவள் முதுகின் கீழ் தண்ணீர்ப் போத்தல் சலசலக்கிறது.

குன்றின் வடிவக் கோதுமை மாவை உருட்டிப் பிசைகிறான்

ஈரமற்ற மாவின் மீது அவன் வியர்வைத்துளிகள் விழுந்த பிறகுதான்

பிசைதல் இலகுவானது.

எடைக்கல்லால் துலாக்கோலினைச் சரிபார்த்தவன்

கிழிந்த அட்டைப் பெட்டியால் தரையைக் கூட்டுகிறான்

பின் இரும்பு முறமுள்ள நெளிந்து அழுக்கடைந்த ஈயச்சட்டியைச் சுமந்து

கிழக்கு திசையை நோக்கிப் புகையை ஊதுகிறான்

அப்போதுதான்

பாழடைந்த கட்டடத்தின் உடைந்த கண்ணாடியில் சூரியன் உதயமானது.

விதைப்பையைச் சூரியனில் காயவைப்பவன்

எஞ்சிய கிளையில் தூளி ஆடுகிறாள் சிறுமி

கால் நுனியால் பூமியை அள்ளிச் சுமந்து

முன்னும் பின்னுமாய்த் திசைகளை ஆட்டுகிறாள்

சிதறி விழாது காலிடுக்கை இறுக்கிப் பிடித்திருக்கின்றன கடுகளவிலான பூமிகள்

தக்குதீன்கான் தெருமுனைச் சுவரோடு கால்பந்தாட்டமாடும் சிறுவன்

துருப்பிடித்த இரு மின் இணைப்புப் பெட்டியின் நடுவே

சராயை அவிழ்த்துச் சிறுநீர் பெய்கிறான்

பெய்தலினிடையே `தனி வீடு 18 லட்சம்’ எஞ்சிய சுவரொட்டியைக் கிழிக்கிறான்

அவனற்றுச் சுவரோடு ஆடி ஆட்டோவின் அடியில் பதுங்கிய பந்தை

மியாவ் சத்தம் உதைத்துத் தள்ளியது

இரும்புக் கம்பிகளை உடுத்தியிருக்கும் சுவரில் பொருத்தப்பட்ட அடிகுழாய்

விதைப்பையைச் சூரியனில் காயவைத்தபடி மீன்பாடி வண்டியில் உறங்குபவன் மீது

புரண்டு படுக்கிறது நடைமேடை

பானை வயிற்றைத் தடவி வாசலில் நடமாடும் பெண்

வெற்றிலை எச்சிலால் தெருவையே சிவக்க வைக்கிறாள்

அருகே தானிய மணிகளை மேயும் கால்நடை

மூர்க்கத்துடன் குப்பைத்தொட்டியைத் தலையில் கவிழ்த்துக்கொள்கிறது

ஆலம் விழுதுகள் தூண்களாகிப் போன வீட்டினைப் பார்த்து

தலைகுனிந்தபடி வெகுநேரமாய்க் காத்திருக்கிறது இந்தச் சாலை.

 

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]